16 October 2021

ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி(தென்திருப்பதி) திருக்கோவில், துறையூர்

 ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி(தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளது போல் கருவறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
பூமி மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் இருக்கிறது ஆலயம்.

படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். சுமார் 1,600 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாகனப் பாதையும் உண்டு. வழியே சிறுசிறு குன்றுகளாக இருப்பதையும் பார்க்கலாம். இந்தக் குன்றுகள் மொத்தம் ஏழு. அதாவது ஏழு மலைகளைக் கடந்த பிறகு, ஏழுமலையானின் தரிசனம்!

ஸ்தல வரலாறு:


கல்லணையைக் கட்டிய கரிகாற் சோழப் பெருவளத்தானின் பேரன், தன் ஆட்சியில் கட்டிய கோயில் என்கிறது ஸ்தல வரலாறு.

தன் ராஜகுருவின் அருளாசிப்படி, சோழ தேசத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், வேங்கடவனை நினைத்து, தவமிருந்தான் மன்னன்.

ஓர் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய... அதில் மகிழ்ந்த பெருமாள், மன்னனுக்குத் திருக்காட்சி தந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

இப்படி, பக்தனின் முன்னே பிரசன்னமானதால், ஸ்ரீசக்ராயுதபாணியாக, திருமணக் கோலத்திலும் திருக்காட்சி தந்ததால், இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி என்றே திருநாமம் அமைந்தது என்பர்.


இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் இங்கு போற்றப்படுகிறார் .

 வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம் என இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

  அடிவாரத்தில்   பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது . அங்கு அஷ்ட லஷ்மி தேவியருக்கும் சன்னதிகள் உள்ளன .
5 கி.மீ. சுற்றளவுள்ள மலையை சுற்றி  ஒவ்வொரு பௌர்ணமியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  "கிரிவலம்"  வருவது சிறப்பு.

என்றும் மனதிற்கு அமைதியும், நிறைவும் தரும் திருக்கோவில் .

ஏற்கனவே பகிர்ந்த தகவல்களும்  போன வருடம் எடுத்த காட்சிகளும்   இன்றைய பதிவில் ..
திருவாய்மொழி - ஆறாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி – உலகமுண்ட -


எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி, இனம் இனமாய்,*
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

3555 

          

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 
செடியார் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
நொடியார் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே

3556 

          


நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 

சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         

3557 

          


வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 

சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
அந்தோ! அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.

3558 

          


அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
நிகரில் புகழாய்! உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

நிகரில் அமரர், முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        

3559   

          அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர்! வாழ்மின் என்றென்று அருள்கொடுக்கும்* 
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.

ஸ்ரீ  பிரசன்ன வேங்கடாசலபதி திருவடிகளே சரணம் ...


அன்புடன்,
அனுபிரேம்

No comments:

Post a Comment