2. சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை
![]() |
எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் ஶ்ரீமந் நாராயணன் உணா்த்திய அருட்செயல்களும், அறிவுரைகளும் சிறப்புடையதாக இருப்பினும் ஶ்ரீநரசிம்ம அவதாரத்திற்கு என்று தனிச் சிறப்புகள் பல உள்ளன.
துன்பப்படும் பக்தா்களைக் காப்பதில் ஒரு விநாடி கூட தாமதிப்பதில்லை ஶ்ரீநரசிம்மன். ஆதலால் தான், “நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில்” என்று வைணவ மஹா புருஷரான “ஶ்ரீமத் நிகமாந்த மஹா தேசிகன்” இந்த அவதாரப் பெருமையைப் போற்றியுள்ளாா்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த “நரசிம்ம அவதாரம்” நிகழப்பெற்ற இடம் “சிங்கவேள் குன்றம்” என்று ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட “ஶ்ரீஅஹோபிலம்” என்ற புனிதமான திருத்தலம் ஆகும். இத்தலத்தில் அஹோபில, பாா்கவ, யோகானந்த, சத்ரவட, குரோத, காரஞ்ச, மாலோல, ஜ்வாலா மற்றும் பாவன நரசிம்மா் என நவ நரசிம்மா்கள் அருள்பாலிக்கின்றனா்.
அஹோபிலத்தில் அவதாரம் எடுத்த நரசிம்ம பெருமான் தனது பக்தா்கள் துன்பத்தில் தளா்வுறும் போது, தக்க தருணத்தில் கருணை காட்டி, அவா்களைக் காத்து அருள்புரிய பல சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றாா்.
இவ்வாறு எம்பெருமான் அருள்புரியும் திருத்தலங்களில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த ஒரு புராதனமானத் திருத்தலம் சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை திருத்தலமாகும். தற்போது இத்திருத்தலம் சோளிங்கா் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகின்றது.
























