30 May 2026

ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!*  இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்* 

ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,

இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.


பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார்


வாழி திருநாமம்


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே !

வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே !

ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே !

அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே !

நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே !

நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே !

மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே !

மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே !



விளக்கம்:-

==>வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க. 

"மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே".

==>வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார். 

"வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே". 

==>குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார். 

"ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே".

==>என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார். 

"அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே".

==>கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார்.

 "நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே".

==>வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார்.

"நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே".

==>திருமகள்நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார். 

"மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே".

==>என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். 

"மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே". 


5000 ஆண்டு பழமையான ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார்

ஸ்ரீ நம்மாழ்வார்

பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்)

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12

நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)

கிழமை : வெள்ளி

தந்தை : காரி

தாய் : உடையநங்கை

எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி

பாசுரங்கள் : 1296

ஆச்சார்ய பரம்பரையில் திருமகள்நாதன், திருமகள், சேனைமுதலியார் ஆகியோர்கள் முதல் மூன்று ஆச்சார்யார்கள். 

சேனைமுதலியாரின் அம்சமாக பிறந்தவர் நம்மாழ்வார். சேனைமுதலியாருக்கு அடுத்த ஆச்சார்யராக புகழப்படுபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். 

ஆச்சார்ய வரிசையில் முதல் மூவரும் தெய்வ உலகத்தைச் சேர்ந்த நித்யர்களாக இருக்க, அந்த வரிசையில் வரும் முதல் மனிதர் இவர். ஆழ்வார்களில் காலத்தால் நடுவினராக இருந்தாலும் அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான நம்மாழ்வார். மற்ற அனைத்து ஆழ்வார்களும் இவரது அங்கங்களாகக் கருதப்படும் பெருமை உடையவர். ஆழ்வார்கள் வரிசையிலும் ஆச்சார்ய வரிசையிலும் வைத்து போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர். வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர்.


கோவில் (ஸ்ரீரங்கம்) நம்மாழ்வார்



நம்மாழ்வார் அருளிச்  செய்த 

பெரிய திருவந்தாதி

17

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்*  தோன்றாது விட்டாலும்* 
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,*  -சூழ்ந்துஎங்கும்-
வாள் வரைகள் போல்அரக்கன்*  வன்தலைகள் தாம் இடிய,* 
தாள் வரை வில்ஏந்தினார் தாம்.

2601

          

   18

தாம்பால் ஆப்புண்டாலும்*  அத் தழும்பு தான் இளகப்,* 
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும்,*  -சோம்பாது இப்- 
பல்உருவை எல்லாம்*  படர்வித்த வித்தா,*  உன்- 
தொல் உருவை யார் அறிவார் சொல்லு?

2602

          

   19

சொல்லில் குறை இல்லை*  சூது அறியா நெஞ்சமே,* 
எல்லி பகல் என்னாது எப்போதும்,*-தொல்லைக் கண்-
மாத் தானைக்கு எல்லாம்*  ஓர் ஐவரையே மாறு ஆகக்,* 
காத்தானைக் காண்டும்நீ காண்.

2605

          

   20

காணப் புகில் அறிவு*  கைக் கொண்ட நல்நெஞ்சம்,* 
நாணப் படும் அன்றே நாம் பேசில்?* -மாணி-
உருஆகிக் கொண்டு*  உலகம் நீர் ஏற்ற சீரான்,* 
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று.   

2606

          

   21

சென்று அங்கு வெம் நரகில்*  சேராமல் காப்பதற்கு,* 
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட,*-அன்று அங்குப்-
பார் உருவும்*  பார் வளைத்த நீர் உருவும்*  கண் புதையக்,- 
கார் உருவன் தான் நிமிர்த்த கால்.

2607
மகிழ்மாலை மார்பர்-- திருவரங்கம்



உபதேசரத்தினமாலை


14   

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்

விளக்கம்
***********
சீர்மை பொருந்திய வைகாசி விசாகத்தின் பெருமையை இவ்வுலகத்தவர்களுக்கு நன்றாக அறியும்படிச் சொல்லுகிறேன். சீர்மை பொருந்திய வேதத்தின் அர்த்தங்களை அழகிய தமிழ் மொழியில் அருளிச்செய்த உண்மையாளரான அழகிய திருக்குருகூரின் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த நாள்.



15   

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்


விளக்கம்
***********
வைகாசி விசாகத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ, என்றால் இல்லை!
நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ, என்றால் இல்லை!
இவர் அருளிய திருவாய்மொழிக்கு ஈடான பிரபந்தம் உண்டோ, என்றால் இல்லை!
இப்பூமண்டலத்தில் நம்மாழ்வார் அவதரித்த திருநகரிக்கு இணையான ஒரு திவ்யதேசம் உண்டோ, என்றால் இல்லை!




மேல்கோட்டை நம்மாழ்வார்


ஸ்வாமி நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💕💕💕...

No comments:

Post a Comment