02 June 2023

ஸ்ரீ நம்மாழ்வார் ..... வைகாசியில் – விசாகம் ....

 இன்று  ஸ்வாமி  நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள்  (வைகாசியில் – விசாகம்) ........







ஆழ்வார்  வாழி திருநாமம்



மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே
ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தான் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே









நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி

எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்





"வேறொன்றும் நான் அறியேன்,வேதம் தமிழ் செய்த 
மாறன் ! சடகோபன்,வண்குருகூர் ஏறு எங்கள் 
வாழ்வாம், என்றேத்தும் மதுரகவியார் ! எம்மை
 ஆள்வார், அவரே அரண் !
(-ஸ்ரீமந் நாத முனிகள்)


  
"நம்மாழ்வார் தவிர வேறொருவரையோ/வேறொரு பொருளையோ நான் அறிய மாட்டேன்;
வேதத்தின் அர்த்தங்களைத் தமிழாக அருளிச் செய்த மாறன் என்னும் திருநாமத்தை யுடையவரும், 
அழகிய திருக்குருகூர் நகருக்குத் தலைவருமான சடகோபர் என்னும் நம்மாழ்வாரே என்றும் எமக்கு உஜ்ஜீவனர் ஆவர்" என்று தோத்திரம் செய்தருளிய மதுரகவி ஆழ்வார் நம்மை ஆள்பவர். 

“வேறொன்றும் நானறியேன்...." என்பது மதுரகவியாழவார் நம்மாழ்வாரைப் போற்றுவதாகவும், நாதமுனிகள் மதுரகவி ஆழ்வாரைப் போற்றுவதாகவும் கொள்ளலாம்.

வேதம்  தமிழ்செய்த...  ஆழ்வார் அருளிச் செயல்கள், அளவிறந்த வேதங்களிலே எளிதிற் காண ஒண்ணாத படி மறைந்துகிடந்த தத்துவப் பொருள்களை எல்லாம் எடுத்துத் தெளிவுபடச் சொல்வதற்காகத் திருவவதரித்தவை. சுருங்கச்சொல்லல்,விளங்கவைத்தல் முதலிய அழகுகளோடு தத்துவப் பொருள்களின் சாரங்களை எடுத்துச் சொல்லி விளக்கும் தன்மையில் வடமொழி வேதங்களினும் இத்தென் மொழிவேதம் மிகச்சிறந்தது.
சம்ஸ்க்ருத வேதம் போலவே தமிழ்மறையாகிய திவ்யப்ரபந்தங்களும் நித்யம் என்பது ஆன்றோர் கொள்கை.

மாறன் ... ஆழ்வார் பிறந்த பொழுதே தொடங்கி- அழுதல்,பால்குடித்தல் முதலிய சாதாரண காரியங்கள் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால் இவருக்கு மாறன் என்று  திருநாமம்  வலிய வினைகட்கு மாறாக இருந்தலாலும், அந்ய மதஸ்தர்களின் வாதங்களுக்குச்  சத்ருவாயிருந்தலாலும், பாண்டியநாட்டுக்குத் தலைமைக் கவியாகத் தோன்றியதாலும் வந்த பெயர் என்றும் சொல்லுவர்.

சடகோபன் ...  கர்ப்பத்திலிருக்கும் போது ஞானிகளாய் இருக்கும் குழந்தைகள், பிறந்தவுடனே தமது ஸபர்ஸத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணவிடுந் தன்மையுடைய சடம் என்னும் வாயு, நம்மாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுவதற்கு வர, அப்பொழுது அவர் அதனை ஹுங்காரத்தால் ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால் சடகோபர் என்று  திருநாமமாயிற்று. 
எம்பெருமானுடைய திவ்யமங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராதல் பற்றி ஆழ்வார். மற்ற எல்லா ஆழ்வார்களும் அவ்வாறே அந்தப் பெயர் பெற்றனர். ஆனால் ஆழ்வார்களுக்குத் தலைவரான நம்மாழ்வாருக்கே "ஆழ்வார்" என்னும் பெயர் நன்றாக விளங்குகிறது. நம் சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும்.

மாறன், பாரங்குசன், வகுளாபரணன், திருநாவீறுடையபிரான், திருக்குருகூர்நம்பி, குருகைப்பிரான், வழுதிநாடன் முதலிய திருநாமங்களும் இவருக்கு உண்டு.

குருகூர் ...  நூற்றெட்டுத் திவ்யதேசங்களுள் பாண்டியநாட்டுத் திவ்ய தேசங்கள் பதினெட்டில் ஒன்று, ஆழ்வார்திருநகரி என்று பிரசித்தி பெற்றது. குருகாபுரீ என்று வடமொழித்திருநாமம். 

ஏறு ... வடமொழியில், புங்கவ: ருஷப:  சப்தங்கள் போல் தமிழில் ஏறு என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர், ஶ்ரேஷ்டர் என்றபடி, “வண்குருகூறேறு“ என்றவிடத்து வண்மையைக் குருகூரில் அந்வயிப்பதிலும் குருகூரேற்றில் அந்வயிப்பது அழகு. அடியார்களுக்கு அமுதவெள்ளமாக, அருளிச்செயல்களை உபகரித்தருளிய உதாரசிகாமணியாகிய குருகூரதிபதி என்பதாம்.

முதலடியில் “நான் அறியேன்“ என்று ஒருமையாகக் கூறியதற்கு ஏற்ப “என் வாழ்வாம் என்றேத்தும்“ என்று மேலும் ஒருமையாகவே கூறவேண்டியிருக்க, "எங்கள்" என்று பன்மையாகக் கூறியது – தம்மோடு சம்பந்தம் பெற்ற ப்ரபந்ந குலத்தவர் அனைவரையும் கூறியவாறாம். திருவிருத்தத்தில் ஆழ்வார் “இனி யாம் உறாமை“ என்று முதலிற் பன்மையாகக் கூறி, மேல் “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்று ஒருமையாகக் கூறியதை – தம்முடைய சம்பந்தம்பெற்ற பரபந்நர்கள் எல்லார்க்குமாகத் தாம் ஒருவர் விண்ணப்பம செய்கிறார் என்று கொள்வது போல.
(நன்றி சுவாமி ---அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் ---)








5.2 .பொலிக! பொலிக!

அடியார் திருக்கூட்டத்தைக்  கண்டு வாழ்த்தல்  


1

 பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டு கொண்மின்*  கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழி தரக் கண்டோம்*. (2) 

3352

          


2

கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே* 

3353

          


3

திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 
கரிய முகில் வண்ணன் எம்மான்*  கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
இரியப் புகுந்து, இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*

3354

          


4

இடம் கொள் சமயத்தை எல்லாம்*  எடுத்துக் களைவன போலே* 
தடம் கடல் பள்ளிப் பெருமான்*  தன்னுடைப் பூதங்களே ஆய்* 
கிடந்தும், இருந்தும், எழுந்தும்*  கீதம் பலபல பாடி* 
நடந்தும், பறந்தும், குனித்தும்*  நாடகம் செய்கின்றனவே*.  

3355

          

5

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*

3356

          

6

கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை, பசி, தீயன, எல்லாம்* 
நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 
நன்று இசை பாடியும், துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
சென்று, தொழுது, உய்ம்மின், தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.

3357
          


 7

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் *  அவர்க்கே இறுமினே*.    

3358

          

 8

இறுக்கும் இறை இறுத்து, உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 
மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
வெறுப்பு இன்றி, ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது, உய்ம்மின் நீரே*.

3359
          


 9

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 
பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     

3360

          

10

மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 
தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன ,தொண்டீர்!* 
ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      

3361

          

 11

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன் அடியார்க்கு அருள் செய்யும்* 
மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப்பிரான் கண்ணன் தன்னை*
கலி வயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        

3362









14   
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்


15   
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்


(உபதேசரத்தினமாலை)

மகிழ்மாலை மார்பர்-- திருவரங்கம்



ஸ்வாமி நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💕💕💕...

1 comment: