17 June 2023

51.இங்கு(ம்) உண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே!

(51) இங்கு(ம்) உண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே!





அனைத்து கோயில் வாசலிலும்  ‘ஜயன் விஜயன்’ என்று இரண்டு பேர் காவல் காத்துக்கொண்டு இருப்பார்கள்.இவர்களுக்கு  துவாரபாலகர்கள் என்று பெயர். 

துவாரம் என்றால் நுழைவாயில், பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்று பொருள். 

இந்தத் துவாரபாலகர்களுக்கு ஒரு கதை இருக்கிறது. 

ஒரு சமயம், மகரிஷிகள் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தார்கள். நுழைவாயிலில் காவல் புரிந்த ஜயன், விஜயன் இறுமாப்புடன் மகரிஷிகளைத் தடுத்தார்கள். 

அடியார்களுக்கு என் கதவு தாளிடப்படாமல் எப்போதும் திறந்தே இருக்கும்படி பார்த்துக்கொள்வது தான் ஜயன் விஜயனின் வேலை. ஆனால் அவர்கள் தடுத்தவுடன் வந்த ரிஷிகள் கோபமடைந்து ”பூமியில் பிறக்கக் கடவது” என்று சாபமிட்டார்கள்.

ஜய விஜயர்கள் தாங்கள் தப்பை உணர்ந்து பெருமாளிடம் சென்று சாப விமோசனம் கேட்டார்கள். என் அடியார்களிடம் நீங்கள் செய்த இந்தத் தப்பை என்னால் மன்னிக்கவும் முடியாது உங்கள் சாபத்தை என்னால் மாற்றவும் முடியாது என்றார். ஜயன் விஜயம் ஏமாற்றத்துடன் பெருமாளைப் பார்த்தார்கள். 

பெருமாள் சொன்னார் “பூமியில் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் என்னை எதிர்த்து வாழ்வது. அல்லது பல பிறவிகள் என்னை வணங்கி வாழ்வது இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் விருப்பம்போலத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறினார்.

”உங்களைவிட்டுப் பல பிறவிகள் பிரிந்து வாழ்வது கஷ்டம், அதனால் மூன்று பிறவிகள் உங்களை எதிர்த்து வாழ்ந்து அடிபட்டு மீண்டும் வருகிறோம் என்றார்கள். எங்கள் பிறவி முடியும் சமயத்தில் நீங்கள் பெருமாள் என்பதை நாங்கள் உணர வேண்டும்” என்றார்கள். பெருமாளும் சரி என்றார்.


இந்த ஜயன் விஜயன் தான் கிரேதாயுகத்தில் இரணிய கசிபு(இரணியன்), இரண்யாட்சனாகப் பிறந்தார்கள். 

அசுரர் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்ய கஷிபுவும் சகோதரர்கள். இருவரும் இரக்கமற்றவர்கள். ஹிரண்யாக்ஷன்தான் இப்புவியை கடலினடியில் ஒளித்து வைத்து ஸ்ரீமன் நாராயணனனை வராஹ அவதாரம் எடுக்க வைத்தான். 

ஸ்ரீ வராஹர் பூமியை காப்பாற்றிய பின் ஹிரண்யாக்ஷனை வதைத்து விட்டார். 

இதனால் ஹிரண்யகசிபு விஷ்ணுவின் மேல் பெரும் க்ரோதம் கொண்டான். பிரம்மனை நோக்கி கடும் தவம் இயற்றி சில வரங்கள் பெற்று பூமியையும் இந்திரலோகத்தையும் ஆளப்பெற்றான். தன்னை தவிர ஸ்ரீமந்நாராயணன் உட்பட எவரையும் யாரும் வணங்ககூடாதென கட்டளை பிறப்பித்தான்.

எம்பெருமானின் லீலைகளில் பிரஹலாதனும் ஒன்று.

 தேவர்களை அடியோடு ஒடுக்கி தனது தவ வலிமையினால் அனைத்து தேவர்களையும் தன் காலடியில் பணிய வைத்த அசுரன் ஹிரண்யகசிபுக்கு சகல பிரபஞ்சமும் அந்த மகாவிஷ்ணுவின் சொரூபம் என்று நம்பி வாழும் பிரஹலாதன் மகனாகப் பிறக்க வைப்பானா?


கொடிய அரக்கனான ஹிரண்ய கசிபுக்கும் கயாதுக்கும் மகனாகப் பிறந்த பிரஹலாதன், தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். 

ஹிரண்யகசிபு தவத்தில் அமர்ந்த பொழுது, அவன் மனைவியான கயாது கர்ப்பம் தரித்தாள்.

 இரணியன் இல்லாத காரணத்தால், தேவர்கள் அவனது நாட்டை அழிக்க வந்த பொழுது, நாரத மாமுனி கயாதுவை தேவேந்தரனிடம் இருந்து காப்பாற்றி, அவரை தனது ஆஷ்ரமத்தில் வைத்து கவனித்து வந்தார். 

அப்பொழுது, அனுதினமும் நாரத மாமுனி, ஸ்ரீமன் நாராயணன்தான் ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்தார். பின்னாளில் ஹிரண்யகசிபு வரங்கள் பெற்று நாடு திரும்ப, அரண்மனை சென்ற கயாதுவுக்கு பிரஹலாதன் பிறந்து, அக்குழந்தை சிறுவயது முதலே சிறந்த ஸ்ரீமன் நாராயணனின் பக்தனாக வளர்ந்து வந்தது.


குருகுலத்தில் குரு அனைத்து குழந்தைகளுக்கும் “ஹிரண்யகசிபு தான் முழுமுதற் கடவுள்” என்று கற்றுக்கொடுக்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள்” என்றான். 

இச்செய்தி அறிந்த ஹிரண்யன், "விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் நம் குல விரோதி, உன் சித்தப்பாவைக் கொன்றவன்" என்று நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரஹலாதன் மனதை மாற்ற முடியவில்லை.

 துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரஹலாதன் பிறழாது உறுதியாக நின்றான்.

பிரஹலாதனை மாற்ற பலவிதங்களில் துன்புறுத்தினான். 

ஆனால், எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் “நாராயணா நாராயணா” என்றபடி இருந்ததால், ஸ்ரீமன் நாராயணன் அவனைக் காப்பாற்ற, ஹிரண்யனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த ஹிரண்யன் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொலை செய்ய ஆணையிட்டான். 

ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். 

யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்தும் பிரஹலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டான்.


‘'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த

மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்;

ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்

சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா”


என்று கம்பன் அவன் மரணத்தின் தன்மை குறித்துப் பெரிய பட்டியலிடுகிறார். பட்டியல் தொடர்கிறது:


"உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்

கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும், கொல்லா;

நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்

கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர், கொள்வார்?"


என்கிறார் கம்பன்.

 ஹிரண்யன் எவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், பிரஹலாதன் அவன் மீது கோபமோ க்ரோதமோ கொள்ளவில்லை. 


மாறாக ஹிரண்யனுக்கு, "விஷ்ணுவே இவ்வகிலத்திலுள்ள அனைத்திற்கும் அந்தர்யாமி. எப்படியிருக்கு சிலர் நண்பர்கள், சிலர் எதிரிகள் எனும் பேதம் எங்கிருந்து வந்தது? அவர் என்னுள் இருப்பது போலவே தம்மிலும் இருக்கின்றார் தந்தையே, எங்கும் இருக்கின்றார்!" என அறிவுரைக் கூறினான்.


பிரஹலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன ஹிரண்யன் தானே நேராகப் பிரஹலாதனைக் கொல்லப் போன போதும் பிரஹலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான்.


 அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்த ஹிரண்யன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, "உன் கடவுளைக் காட்டு," என பிரகலாதனிடம் கேட்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்” என்று கூறினான்.


ஹிரண்யன் ஒரு தூணைக் காட்டி, "இந்த தூணில் உள்ளாரா?" என்று கேட்க, பிரஹலாதனோ, “தூணிலும் இருப்பார், தூணின் தூசியிலும் இருப்பார், தந்தையே” என்று கூறினான்.


 ஹிரண்யன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் பூண்டு தூணில் இருந்து வெளிவந்து ஹிரண்யன் பெற்ற வரங்கள் பொய்க்காத வகையில் அவனை வதம் செய்து பிரஹலாதனைக் காத்தருளினார்.


நம்மாழ்வார் இந்நிகழ்வை கொண்டாடுகிறார்:


எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து

இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப

அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்

சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே


அப்படிப்பட்ட பிரஹலாதன் பெரும் நிரூபணத்துடன் எம்பிரான் இங்கும் (தூணிலும்) இருக்கின்றார் என்று கூறியதைப் போல தான் கூறாததால் அந்தத் திருக்கோளூரை விட்டு அகல்வதாக அந்தப் பெண்பிள்ளை கூறினாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -முதற் பத்து

 1- 10 பொருமா நீள் படை

ஈஸ்வரன் செய்யும் உபகாரம் 


பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
திரு மா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே. 10.1

2998


கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.  10.2

2999








52. திருக்காரகம்

ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ கருணாகராய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

2 comments:

  1. சிறப்பான முறையில் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பக்த பிரஹலாதர் கதை எத்தனை தடவை படித்து அறிந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல பக்தி கூடுமேயன்றி சலிப்பு ஏற்படாது. ஸ்ரீமன் நாராயணர் எடுத்த அவதாரத்தில் நமசிம்ஹ அவதாரம் சிறந்தது. தன் பக்தனுக்காக கருணை பொங்கும் விழிகளோடு அவனுக்கு அருளும் ஸ்ரீ நரசிம்மரை தரிசித்துக் கொண்டேன். பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    ReplyDelete