26 November 2022

29. "கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே."

 29 . கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே... 

இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஜனகர் ஒரே ஜனகர் அல்ல. மிதிலையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த விதேக நாட்டு மன்னர்களின் குடிப்பெயர்தான் இந்த ஜனகர் என்பது. சீதையின் தந்தையின் இயற்பெயர் ஸீரத்வஜர் என்பதுதான். குடிப்பெயரையும் சேர்த்தால், ஸீரத்வஜ ஜனகர் என்பதுதான் அவருடைய உண்மையான பெயர்.

ஸீரத்வஜ ஜனகரை, ராஜரிஷி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஜனகர் ஒரு மன்னனாக இருந்தாலும் அவர் மாபெரும் கர்ம யோகி. அவர் சாஸ்திரங்கள் உரைக்கும் விதிகளை பின்பற்றி, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி, அஹங்காரம் மற்றும் மமகாராம் இல்லாமல் எதையும் கைமாறாக எதிர்பாராமல் வாழ்ந்தார். 

இறைவனுக்கு ஆற்றும் தொண்டாக, சாஸ்திரங்கள் கூறும் அனைத்தையும் கடமையாகக் கொண்டார். அவர் கர்ம யோகத்தால் 'பிரம்ம ஞானம்' பெற்றார் என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் குறிப்பிடுகின்றது.


வேதாந்தம் அதாவது வேதத்தின் இறுதி என்று அழைக்கப்படும் உபநிடதங்கள் பலவாயினும் குறிப்பிட்ட பத்து உபநிடதங்கள் முக்கியமானவை. ஈச, கேன, கடோப, பிரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்ரீய, ப்ருஹதாரண்யக, சாந்தோக்ய என்பவையே அந்த பத்து உபநிடதங்கள்.

 இவற்றுள் இந்த ப்ருஹதாரண்யக உபநிடத்தை கூறியவர் யாக்ஞவல்கியர் என்ற முனி சிரேஷ்டர். இவருக்கும் ஜனகருக்கும் இடையிலான உறவு மிகவும் அற்புதமானது.


மிதிலை மன்னனான ஜனகர் தான் பிரம்மஞானம் அடைய ஒரு குருவை தேடிக் கொண்டிருந்தார். சீதையின் மணவாளனை தேர்ந்தெடுப்பதற்கு மட்டும் ஜனகர் போட்டி வைக்கவில்லை. தன்னுடைய ஞான குருவை தேர்ந்தெடுக்கவும் ஒரு போட்டி வைக்கிறார். 

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிரம்மஞானிகளின் சபை ஒன்றை மிதிலையில் கூட்டி தர்க்கவாதம் நடத்தி, எவர் வாதத்தில் வெல்கின்றாரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் பசுக்களும் என்று அறிவிக்கிறான். பல ஞானிகள் கூடுகின்றனர். 

யாக்ஞவல்கியரும் வருகிறார்.

“இந்த சபையில் யார் தன்னை பிரம்ம ஞானி என்று கூறிக் கொள்கின்றனரோ அவர் ஆயிரம் பொற்காசுகளையும், பசுக்களையும் ஓட்டிச் செல்லலாம்’’ என்று ஜனகர் அறிவிக்கிறார். நிறைகுடங்களான ஞானிகளில் ஒருவரும் பரிசினை ஏற்க முன்வராதபோது யாக்ஞவல்கியர் துணிச்சலாக தான் ஒரு பிரம்மஞானி என்று முழங்கிவிட்டு பசுக்களை ஓட்டிச் செல்ல ஆரம்பித்தார். 

“எந்த விதத்தில் தாங்கள் பிரம்மஞானி?’’ என்ற கேள்வி எழுந்தது. 

அதற்கு யாக்ஞவல்கியர் எந்த பிரம்மஞானியும் தானாக முன்வந்து  தன்னை பிரம்மஞானி என்று கூறிக் கொள்ள மாட்டான். எனக்குத் தேவை பசுக்கள் அதனால் ஓட்டிச் செல்கிறேன்’’ என்றார். 

அதன் பிறகு ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து இறுதியில் யாக்ஞவல்கியர்தான் பிரம்ம ஞானி என்று முடிவானது வேறு விஷயம். 

அப்படிப்பட்ட யாக்ஞவல்கியரிடம் ஜனகர் சீடனாகச் சேர்ந்து கர்மஞானம் கற்று மிகப் பெரிய ஞானியாக விளங்கினார்.

ஒருமுறை, ஜனகரின் ஞானத்தை வெளி உலகிற்கு உணர்த்த யாக்ஞவல்கியருக்கு எண்ணம் தோன்றியது.  வேத பாடம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, தனது மந்திர சக்தியால் மிதிலை நகரம் நெருப்பு பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார் யாக்ஞவல்கியர்.

 உடனமர்ந்த சீடர்கள் எல்லாம் தங்களது சொத்து பறிபோய்விடப் போகிறதே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

 ஜனகர் தனக்கு எதுவும் சொந்தமில்லை எனும் நிலையில் அசைவுற்று அமர்ந்திருந்தார். (சீதை ஜனகபுத்ரி என்பதற்கு இந்த ஒரு இடம் போதும்) போனவர்கள் அது மாயையினால் ஏற்பட்டது என்பதனைப் புரிந்து வெட்கி தலைகுனிந்து நின்றனர்.

யாக்ஞவல்கியர் கேட்டார். “அற்ப சொத்துக்களையுடைய மற்ற அனைவரும் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற அலறிப் புடைத்து ஓடியபோது நீ மட்டும் ஏன் ஜனகா இருந்த இடத்தை விட்டு அகலவில்லை?’’ என்று கேட்டார்.

“ஆத்மா அழிவற்றது. இடையில் சேர்பவை எல்லாம் அழிவுடையவை. ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய நிஷ்டை. இதில் இருந்து நான் வெளியில் வருவதாக இல்லை’’ என்று ஜனகர் பதில் சொன்னார்.


ஜனகர் பெரும் ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருப்பினும் இறுதிவரையில் கர்ம ஞானத்தை கடைப்பிடித்து வந்தார். இதனைக் கண்ணனே கீதையில் அறிவிக்கிறான்.


"கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய:"


இது கீதையில் கண்ணன் மூன்றாவது அத்தியாயத்தில் கர்ம யோகத்தின் தாத்பரியங்களை சொல்லிக் கொண்டு வரும்போது ஜனகர் போன்ற மன்னர்கள் கூட கர்ம யோகத்தை அனுஷ்டித்து சித்தி பெற்றனர் என்கிறான்.

"ஜனகரைப் போல் கர்மா யோகத்தில் நிலையாய் இருக்க முடியுமா என்னால்? எனக்கு இந்தத் திருக்கோளூரில் இருக்க யோக்கியதை இல்லை" என்று கூறிவிட்டு அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலேதிருவாய்மொழி -முதற் பத்து

1 - 5. வள ஏழ் உலகின்

எம்பெருமானின் சீலகுணம் 


அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 

கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*

செடியார் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 

அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனில்  மிக்கு ஓர் அயர்வு உண்டே? 7

2949


உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 

உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*

மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 

அண்டா வண்ணம், மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  8

2950


  30. திருவண்புருஷோத்தமம்

ஸ்ரீ புருஷோத்தமநாயகீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment