02 November 2022

ஸ்ரீ பூதத்தாழ்வார்

  ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...













பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ் சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே

எழில்  ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே

பொன்புரையும்  திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணை இப் பூதலத்தில் வாழியே  !





பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மஹாவிஷ்ணுவின் கதையான கெளமோதகியின் அம்சமான பூதத்தார் கடல்மல்லையில் (மாமல்லபுரம்), கடலுக்கருகில் உள்ள குளக் கரைத் தோட்டத்தில் ஒரு குருக்கத்தி (நீலோத்பவ) மலரில் அவதரித்தார். 


இவர் திருமாலையே எந்நேரமும் நினைத்து, அவர் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டே-வேறு எதிலும் நாட்டமில்லாமல் , ஒரு அசாதாரண மனிதராக இருந்ததால்,
பூதத்தாழ்வார் என்றழைக்கப்பட்டார்.


வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.


எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு.

 இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.





ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி



சிறியார் பெருமை*  சிறிதின் கண் எய்தும்,* 
அறியாரும் தாம் அறியார் ஆவர்*  அறியாமை ,
மண் கொண்டு, மண் உண்டு,*  மண் உமிழ்ந்த மாயன் என்று*
எண் கொண்டு என் நெஞ்சே! இரு.       36

2217

          

   
இரும் தண் கமலத்து*  இரு மலரின் உள்ளே,* 
திருந்து திசை முகனைத் தந்தாய்!*  - பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப்*  பணியாவேல்,*  பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம், எமக்கு.  37

2218

          


எமக்கு என்று இரு நிதியம்*  ஏமாந்து இராதே* 
தமக்கு என்றும் சார்வம் அறிந்து*  நமக்கு என்றும்
மாதவனே என்னும்*  மனம் படைத்து*  மற்றவன் பேர்
ஓதுவதே*  நாவினால் ஓத்து.     38        

2219 

          

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே*  உத்தமன்பேர்
ஏத்தும்*  திறம் அறிமின் ஏழைகாள்!*  ஓத்து அதனை
வல்லீரேல், நன்று அதனை மாட்டீரேல்*  மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.    39

2220

          


சுருக்காக வாங்கி,*  சுலாவி நின்று,*  ஐயார்
நெருக்கா முன், நீர் நினைமின் கண்டீர்*   திருப் பொலிந்த
ஆகத்தான்*  பாதம்; அறிந்தும், அறியாத*
போகத்தால் இல்லை பொருள்.      40

2221 







பொருளால் அமர் உலகம்*  புக்கு இயலல் ஆகாது* 
அருளால் அறம் அருளும் அன்றே?*  அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த*  மணிவண்ணன் பாதமே*
நீ மறவேல் நெஞ்சே! நினை.      41   

2222

          


நினைப்பன் திருமாலை,*  நீண்டதோள் காண* 
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார்*   மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும்*  பேரின்பம் எல்லாம்,*
துறந்தார், தொழுதார் அத் தோள்.  42     

2223

          


தோள் இரண்டு எட்டு ஏழும்*  மூன்றும் முடி அனைத்தும்* 
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான்,*  தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம்*  அவை தொழுவது அன்றே,*  என்
சீர் கெழு தோள்*  செய்யும் சிறப்பு? 43

2224

          


சிறந்தார்க்கு எழு துணையாம்*  செங்கண் மால் நாமம்*
மறந்தாரை மானிடமா வையேன்*  அறம் தாங்கும்
மாதவனே என்னும்*  மனம் படைத்து*  மற்றவன் பேர்
ஓதுவதே*  நாவினால் உள்ளு.  44

2225 

          



உளது என்று இறுமாவார்;*  உண்டு, இல்லை என்று*
தளர்தல், அதன் அருகும் சாரார்,*  - அளவு அரிய
வேதத்தான், வேங்கடத்தான்*  விண்ணோர் முடி தோயும்,*
பாதத்தான் பாதம் பயின்று.        45

2226










ஸ்ரீ பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்
அனுபிரேம்...



1 comment:

  1. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் படித்துள்ளேன். இப்பதிவு மூலமாக ஆழ்வாரைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறிந்தேன்.

    ReplyDelete