திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்.
அணைத்த வேலும் தொழுத கையும்... கலியன் |
திருவெழுக்கூற்றிருக்கை
திருவெழுகூற்றிருக்கை என்பது 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறிநின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கை. இது திரு என்னும் அடைமொழியுடன் 'திருவெழுகூற்றிருக்கை' போற்றப்படுகிறது.
திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப்படும் ஒன்று.
எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள் தான் திருஎழுகூற்றிக்கை.
எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம்.
எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்-
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
இடையில் தேர் தட்டு … … … … … … .
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1
பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும்.
திருமங்கையாழ்வார் கும்பகோணத்தில் உள்ள ஆராவமுத பெருமாளைச் சரணமாகப் பற்றுகிறார். இந்த பாசுரத்தில் சொற்கள் ரதவடிவத்தில் கோர்வையாக அமைந்துள்ளன. இந்த பாசுரத்தை கும்பகோணம் கோயிலில் சித்திரமாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.
பிரபந்த தனியன்கள்
எம்பெருமானார் அருளிச்செய்தவை
வாழிபரகாலன் வாழிகலிகன்றி,
வாழி குறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்!
சீரார் திருவெழு கூற்றிருக்கை என்னும் செந்தமிழால்,
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக்கீழ்,
ஏரார் மறைப்பொருளெல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே.
1
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்,*
ஒரு முறை அயனை ஈன்றனை* ஒருமுறை-
இரு சுடர் மீதினில் இயங்கா* மும்மதிள்-
இலங்கை இரு கால் வளைய* ஒருசிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல்வாய் வாளியின் 5
அட்டனை* மூவடி நானிலம் வேண்டி*
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில்,* இரு பிறப்பு ஒரு மாண் ஆகி,*
ஒரு முறை ஈரடி, மூ உலகு அளந்தனை*
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை 10
ஏறி* நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை,* ஒரு நாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை* முத் தீ
நான்மறை, ஐ வகை வேள்வி* அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை* ஐம்புலன் 15
அகத்தினுள் செறித்து* நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி* ஒன்றினில்
ஒன்றி நின்று* ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை* முக்கண் நால்தோள்
ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன் 20
அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை*
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை* கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை* சுடர் விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை* சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண!* நின் ஈரடி 25
ஒன்றிய மனத்தால்* ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன* அங்கையில்
முப்பொழுதும் வருட, அறிதுயில் அமர்ந்தனை*
நெறி முறை நால்வகை வருணமும் ஆயினை*
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே!* 30
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்*
ஏழ் விடை அடங்கச் செற்றனை* அறு வகைச்
சமயமும் அறிவு அரு நிலையினை* ஐம்பால்
ஓதியை ஆகத்து இருத்தினை*
அறம் முதல் நான்கு அவை ஆய், 35
மூர்த்தி மூன்று ஆய்* இரு வகைப் பயன் ஆய்,
ஒன்று ஆய் விரிந்து நின்றனை* குன்றா
மது மலர்ச் சோலை வண்கொடிப் படப்பை*
வருபுனல் பொன்னி மாமணி அலைக்கும்*
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த* 40
கற்போர் புரிசைக் கனக மாளிகை*
நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும்*
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை*
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க*
ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த பரம!*
நின் அடியிணை பணிவன்-
வரும் இடர் அகல மாற்றோ வினையே (2) 45
முந்தைய பதிவுகள் ...
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻
அனுபிரேம் 🌻🌻🌻
திருவெழுக்கூற்றிருக்கை சந்தை போய்க்கொண்டிருக்கிறது. நல்ல பதிவு. திருவெழுக்கூற்றிருக்கையின் பா வடிவத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteசீரார் திருவெழுக்கூற்றிருக்கை தனியன் எம்பெருமானாரா இயற்றினார்? இது பல இடங்களில் வழக்கத்தில் இல்லை (இந்தத் தனியனைச் சேவிப்பது)
இது முழுவதுமே ஒரே பாசுரமாகக் கொள்ளப்படுகிறது. முழு பாசுரத்தையும் இரு முறை சேவிப்பது வழக்கம். இந்தப் பாசுரத்தில், 'செல்வம் மல்கு தென் திருக்குடந்தை' வரியை மாத்திரம் இருமுறை சேவிப்பது வழக்கம் (எனக்குத் தெரிந்து)
கும்பகோணம் ஆராவமுதன் கோயில் சுவற்றில் உள்ள படத்தையும் போட்டிருப்பது சிறப்பு