07 December 2022

திருமங்கையாழ்வார்....

கார்த்திகையில் கார்த்திகை .....

நீலன், கலியன், ஆலிநாடன், அருள்மாரி, அரட்ட முக்கி அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
மங்கை வேந்தன், கொற்ற வேல் பரகாலன்
நாலுகவிப் பெருமாள், குமுதவல்லி மணாளன்,
திருமங்கை ஆழ்வார் அவதார நந்நாள் இன்று !







 திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!



கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியில் ஒண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழ் ஆயிரத்து எண்பத்துநாலு உரைத்தோன் வாழியே

நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே

இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே

வலந்திகழும்  குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .



திருமங்கையாழ்வார் 

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)

தந்தை               : ஆலிநாடுடையார்

தாய்                  : வல்லித்திரு அம்மையார்

பிறந்த காலம்   : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்

நட்சத்திரம்        : கார்த்திகை (பவுர்ணமி திதி)

கிழமை             : வியாழன்

அம்சம்              : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக  பிறந்தவர்                                                   
அருளியவை    :பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,    திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய  திருமடல், சிறிய திருமடல்.


திருமங்கை மன்னன் ,

மனிதனாகப் பிறந்து,  முரட்டு வீரனாக வளர்ந்து, 

 அரசனாகப் பதவி அனுபவித்து,

 மங்கையின் மீது காதல் கண்டார், 

அந்தக் காதலியின் வார்த்தைகளால்,

 எம்பெருமான் மீது காதல் கொண்டார்,

பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக, 

அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,

எம்பெருமானையே நேரில் கண்டு, 

அவன் திருவாயினாலே,

“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,

அரங்கன் ஆலயத்தில்,

அரங்கனைப் பாடி, 

அரங்கனை மகிழ்வித்து , 

அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, 

இன்று வரை, 

இன்னும் வரும் காலங்களிலும், 

தொடர்ந்து நடைபெறும் வகையில், 

வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.

 துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.

 அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தவர் இவர் ...


கண்ணாடி பல்லக்கில் ஆழ்வார் ...





திருக்குறுந்தாண்டகம்
       
          

   1

நிதியினை, பவளத் தூணை*  நெறிமையால் நினைய வல்லார்* 
கதியினை கஞ்சன் மாளக்*  கண்டு, முன் அண்டம் ஆளும்*
மதியினை, மாலை, வாழ்த்தி*  வணங்கி என் மனத்து வந்த* 
விதியினைக் கண்டு கொண்ட*  தொண்டனேன் விடுகிலேனே  (2)

2032 

          

   2

காற்றினை, புனலை, தீயை,*  கடி மதிள் இலங்கை செற்ற-
ஏற்றினை*  இமயம் ஏய*  எழில் மணித் திரளை*  இன்ப
ஆற்றினை, அமுதம்தன்னை*  அவுணன் ஆர் உயிரை உண்ட 
கூற்றினை*  குணங்கொண்டு, உள்ளம்!*  கூறுநீ  கூறுமாறே   

2033

          

   3

பா இரும் பரவை தன்னுள்*  பரு வரை திரித்து*  வானோர்க்கு 
ஆய் இருந்து, அமுதம்  கொண்ட*  அப்பனை, எம்பிரானை*
வேய் இருஞ்சோலை சூழ்ந்து*  விரி கதிர் இரிய நின்ற,* 
மா இருஞ்சோலை மேய*  மைந்தனை வணங்கினேனே.  

2034

          

   4

கேட்க யான் உற்றது உண்டு*  கேழல் ஆய் உலகம் கொண்ட,* 
பூக் கெழு வண்ணனாரைப்*  போதரக் கனவில் கண்டு,*
வாக்கினால், கருமம் தன்னால்*  மனத்தினால், சிரத்தை தன்னால்* 
வேட்கை மீதூர, வாங்கி*  விழுங்கினேற்கு இனியவாறே.  

2035

          

   5

இரும்பு அனன்று உண்ட  நீர்போல்*  எம்பெருமானுக்கு*  என் தன்- 
அரும்பெறல் அன்பு புக்கிட்டு*  அடிமை பூண்டு உய்ந்து போனேன்,*
வரும் புயல் வண்ணனாரை*  மருவி,என் மனத்து வைத்து,* 
கரும்பின் இன் சாறு போலப்*  பருகினேற்கு இனியவாறே.

 2036  








ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

8

பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏதுபெருமை இன்றைக்கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்காண்
 
9
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே! வாழ்த்து.
 






No comments:

Post a Comment