25 December 2022

10. திருப்பாவை - நோற்றுச் சுவர்க்கம்

பத்தாம் பாசுரம் - இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.





நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்

      தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!

      தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்


நோன்பு நோற்று ஸ்வர்கத்தை இடைவிடாமல் அனுபவிக்கும் பெண்ணே!

 கதவைத்தான் திறக்கவில்லை, உள்ளிருந்து ஒரு பதில் வார்த்தையாவது பேச மாட்டார்களோ? 

நறுமணம் வீசும் திருத்துழாய் மாலையை தன் கிரீடத்திலே சூடியுள்ளவனும், 

நாராயணன் என்ற திருநாமத்தை உடையவனும்,

 நம்மால் பல்லாண்டு பாடப்பட்டு நமக்குக் கைங்கர்யத்தைக் கொடுப்பவனுமான் 

எம்பெருமானாலே முற்காலத்தில் யமன் வாயில் விழுந்த (மரணம் அடைந்த) கும்பகர்ணனும் உன்னிடத்தில் தோற்று தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குக் கொடுத்தானோ? 

அழகிய உறக்கத்தை உடையவளே! 

கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிந்து வந்து கதவைத் திற.



மார்கழி மாதம்  பத்தாம் நாள்  - ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் நாற்றத்துழாய்முடி நாராயணன் திருக்கோலம்...



















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment: