06 December 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ----

  அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ---- 

ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம். 

ஸ்ரீ சுப்ரமணியர் - வெள்ளி மயில் வாகனம். 

ஸ்ரீ சுவாமி - அம்பாள் மர சிம்ம வாகனம் 

ஸ்ரீ அம்பாள் - மர அன்னபக்ஷி வாகனம் 

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப  வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா. 












 3

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்

பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க

அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே

மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.

4.063.3

 

சடமாகிய மாயையாகவும், சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.


கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் நான்காம்  திருநாள் இரவு --- 

ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம். 

ஸ்ரீ சுப்ரமணியர் - வெள்ளி மயில் வாகனம். 

ஸ்ரீ சுவாமி - அம்பாள்  கற்பக விருட்ச வாகனம். 

ஸ்ரீ அம்பாள் - வெள்ளி காமதேனு வாகனம்  

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப  வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா. 

கற்பக விருட்ச வாகனம்: 

கற்பக விருட்ச வாகனம் என்பது என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.

கற்பக மரம் தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகும். [ கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன].  இம்மரம் கேட்டதைத் தரக்கூடியது. இறைவன் கற்பக மரத்தினைப் போன்று அடியார்கள் நினைத்தை தரக் கூடியவன் என்ற வகையில் கற்பக விருட்ச வாகனத்தில் உலா செல்கிறார். இதனை விருட்ச வாகனம் என்றும் கூறுவர்

மேரு மலையை மத்தாக்கி, ஆதிசேஷனைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளி வந்த புனிதப் பொருள்களில் கற்பக மரமும் ஒன்று. இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு யார் எதைக் கேட்டாலும் உடனே அதை அளிக்கும் தன்மை வாய்ந்தது இம்மரம் என்பது ஐதீகம். நமது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களையும் அருளும் சக்தி கொண்டது.

காமதேனு வாகனம்:

அன்னை அமர்ந்து வலம்வரும் வாகனமோ காமதேனு. இஃது அற்புதமான வாகனம். தேவர் உலகில் கேட்டதெல்லாம்  வழங்கும் கற்பக விருட்சமும், காமதேனுவும் இந்திரனிடம் இருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட அற்புத சிறப்பு வாய்ந்த காமதேனு அம்மனுக்கு வாகனம்.

பாற்கடல் கடையும் போது தோன்றிய அற்புதமான பொருட்களில் காமதேனுவும் ஒன்று. காமதேனு, விரும்பிய எல்லாவற்றையும் அளிக்கவல்லது.  தன்னை  வழிபடுபவர்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன் என்பதை காமதேனு வாகனத்தில் அருட்பாலிப்பதன் மூலம் தேவி  தெரிவிக்கிறாள்.
















பாடல் எண் : 4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா

செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே

என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.

4.063.4 

பசிய பொன்னே! பவளமலையே! மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே! செம்பொன்னே! மலர் போன்ற திருவடிகளை உடையவனே! சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே! உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன்.

தொடரும் ....

அண்ணாமலையார் திருவடிகளே சரணம் !!!

அன்புடன் 
அனுபிரேம் 🌸🌸🌸


No comments:

Post a Comment