31. குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே!
சப்தரிஷிகளில் ஒருவரான காஷ்யபருக்கு கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள். இருவரும் காஷ்யபரிடம் புத்திர பாக்கியம் வேண்டும் என்று கேட்கின்றனர்.
கத்ரு (அரவ இனத்தவள்) தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். வினதை (பறவை இனத்தவள்) தனக்கு அறிவுடைய இரண்டு புத்திரர்களைக் கேட்கிறாள். வினதையின் இரண்டு புத்திரர்களாக அருணனும் கருடனும் பிறக்கின்றனர்.
எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு பரமபதத்தில் தினமும் சேவை புரிகின்றவர்களை வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நித்யசூரிகள் என்பர். அநந்த, கருட, விஷ்வக்ஸேநாதிகள் என்பதே அந்த வரிசை. இதில் முதலாவதாக இடம் பெரும் நித்யசூரி அனந்தன் எனப்படும் ஆதிசேஷனாகும்.
அனந்தாழ்வார் எந்நேரமும் பகவான் விஷ்ணுவுடனேயே இருப்பவர்; விஷ்ணுவுடனேயே மண்ணில் அவதரிப்பவர், ஏதேனும் ஒரு ரூபத்தில் துணையாக வந்து பகவானுக்கு சேவை செய்பவர். நித்தமும் நித்ய சேவையிலும், சேவையின் மறு உருவமாகவும் திகழ்வதால் அவர் ஆதிசேஷன் என அழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ஆதிசேஷன், தமிழில் அனந்தன். சேஷன் என்றால் தொண்டன் என்று பொருள். எல்லா காலங்களிலும் எல்லா தொண்டுகளையும் ஆதியிலிருந்து செய்வதால் ஆதிசேஷன் என்று பெயர் பெற்றார். அனந்தன் என்றால் எல்லையற்ற மகிமையை உடையவர் என்று பொருள்.
ஆதிசேஷன் திருமாலின் எல்லா நிலைகளிலும் தொண்டு செய்கிறார்... அதாவது பெருமாளின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை.
பரத்துவம் என்றால் வைகுண்டத்தில் பரமபத நாதனாக அமர்ந்திருக்கிறான். அங்கே சிங்காசனத்தின் மீது குடையாக ஆதிசேஷன்...
வியூகம் என்பது பாற்கடலில் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டுள்ளான்...
திருமால் அவதாரம் விபவம்.... ராமாவதாரத்தில் ராமருக்கு எல்லா தொண்டும் செய்த லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம்..
அந்தர்யாமியில் .. நம் மனத்துள் இருக்கிறான் பெருமாள் ஆனால் ஆதிசேஷன் ...
”யோகிகளும் ஆழ்வார்களும் தம் இதயத்துள்ளே பெருமாளைப் பார்த்தார்கள். நம்மாழ்வார் எந்தத் திவ்ய தேசத்துக்கும் செல்லவில்லை. எல்லா பெருமாள்களும் ஆழ்வாரைத் தேடிக்கொண்டு அவர் இதயத்துள்ளே புகுந்தார்கள்.
”ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் புளியமரத்துக்கு அடியில் உட்கார்ந்து இருந்தார். அவர் மனதில் எல்லா எம்பெருமானும் வீற்று இருக்க, அந்தப் புளியமரமே ஆதிசேஷன்!” .
பெரியாழ்வார் என் மனத்தில் ஆதிசேஷன் ஆகிற படுக்கையில் பாற்கடலோடும் மகா லக்ஷ்மியோடும் திருமால் இருக்கிறான் ” என்று சொல்லுகிறார். ஆழ்வார் மனதிலும் ஆதிசேஷனும் இருக்கிறார்!”
அது போல கோயில்களிலும் பெருமாள் அர்ச்சாவதாரமாக எந்தக் கோலத்திலிருந்தாலும் அங்கே ஆதிசேஷன் உடன் காட்சி தருகிறார்....
எல்லா நிலைகள் மட்டும் அல்லாமல், எல்லா யுகத்திலும் ஆதிசேஷன் இருக்கிறார்..
முதல் யுகத்தில் அனந்தனாக,
இரண்டாம் யுகத்தில் லக்ஷ்மணன்.
மூன்றாவது யுகத்தில் பலராமன்.
நான்காவது யுகத்தில்...உடையவர்
உடையவர் முன்பு மேலை நாட்டுக்குச் சென்றார். அப்போது அங்கே தொண்டனூர் என்ற ஒரு இடத்தில் மன்னனின் மகள் மனநிலை சரி இல்லாமல் பித்துப் பிடித்து அலைந்தாள். அவளை உடையவர் குணப்படுத்தினார். அரசனுக்கு உடையவர் மீதும் அவர் சிஷ்யர்கள் மீதும் ஒரு பரிவு ஏற்பட்டது.
சமண மதத்தைப் பின்பற்றிய மன்னன் வைஷ்ணவத்துக்கு மாறினான். இது சமண துறவிகளுக்குப் பிடிக்கவில்லை. உடையவரை வென்று அடிமை கொள்வோம் என்று சபதம் போட்டார்கள். பன்னிரண்டாயிரம் சமண குருக்களின் தலைவன் உடைவரை சந்தித்து ”எங்கள் ஒவ்வொருவருடன் நீங்கள் தனித்து வாதம் செய்ய வேண்டும்” என்றான்.
அதற்கு ராமானுஜர் “எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து வாதத்துக்கு வாருங்கள்” என்றார். போட்டி ஆரம்பம் ஆகியது. ஒரு பெரிய மண்டபத்தின் ஒரு புறம் யாரும் காணாதபடி திரையிட்டு ராமானுஜர் அமர்ந்துகொண்டார். திரைக்கு மறுபுறம் பன்னிரண்டாயினும் சமண துறவிகள் அமர்ந்து கேள்விகளைத் தொடுக்க ராமானுஜர் பதில் சொல்லிக்கொண்ட இருந்தார். அப்போது ஒரு சமண துறவி திரையை விளக்கி உடையவர் எப்படி ஒரே சமயத்தில் பல ஆயிரம் பேருடன் வாதம் செய்ய முடிகிறது என்று எட்டிப் பார்த்தார்.
அவர் கண்ட காட்சியில் .....
இந்த யுகத்தில் அனந்தனின் அவதாரமான உடையவர் ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷனாக எல்லோருக்கும் பதில் கூறிக்கொண்டு இருந்தார். சமணர்கள் உடனே உடையவரின் திருவடியைப் பற்றி வைணவத்தில் சேர்ந்தனர்.
முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் தனது பாசுரத்தில் மிக அழகாக எம்பெருமானுக்கும் ஆதிசேடனுக்கும் உள்ள உறவை விளக்குகிறார்.
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
பெருமாள் செல்லும்போது ஆதிசேஷன் குடை ஆவான்;
உட்கார்ந்தால் அனந்தன் சிம்மாசனம் ஆவான்;
நின்றால் பாதுகை ஆவான்;
அவர் சயனித்தால் படுக்கை ஆவான்;
அவனுக்கு அருகில் எப்போது விளக்காக இருப்பான்.
உடுத்துக்கொள்ளும் பட்டாடையாக, அணைத்துக் கொள்ளும் தலையணை என்று எல்லாத் தொண்டுகள் செய்கிறார்.
ஸ்தோத்திர ரத்தினத்திலும் ஆளவந்தார் இதேபோல சித்தரிக்கிறார்..
"திருவனந்தாழ்வான் நடக்கையில் குடையாகிறான், அமர்கையில் இருக்கையாகிறான், எழுந்து நிற்கையில் பாதுகையாகிறான், பகவான் பாற்கடலாகையில் இவன் மிதவையாகிறான், விளக்காகிறான், வஸ்திரமாகிறான், பஞ்சனையாகிறான் - எனவே, சேவை என வரும்போது அவன் அனைத்தும் ஆகிறான்" என்கிறார்.
"ஆதிசேஷன் பல ரூபங்களில் பகவானுக்கு சேவை செய்ததுபோல, நான் ஏதாவது சேவை செய்தேனா? நான் இந்தத் திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? அதனால்தான் கிளம்புகிறேன்" என்று கூறி அந்தப் பெண் கிளம்பினாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி -முதற் பத்து
1 - 6 பரிவது இல்
ஆராதனைக்கு எளியவன்
பரிவது இல் ஈசனைப் பாடி*
விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்*
புரிவதுவும் புகை பூவே. (2) 1
2954
மதுவார் தண் அம் துழாயான்*
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி? என்னாது*
அதுவே ஆள் செய்யும் ஈடே 2
2955
32. திருமணிமாடக் கோயில்
ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ நந்தாவிளக்கு ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
சுமார் 10 ஆண்டுகளாக தினமும் ஒரு தேவாரப்பதிகமோ, பிரபந்தமோ படித்து வருகிறேன். இதுபோன்ற உங்களின் பதிவுகள் அந்த நூல்களின் அடிகளை ரசித்துப் படிக்கும் உணர்வைத் தருகின்றன. சிறப்பு.
ReplyDeleteசோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
மிகவும் நன்றி ஐயா தங்களின் விரிவான கருத்திற்கு ....தேடி தேடி படிக்கும் பொழுது தான் பல செய்திகள் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
Deleteசில பயணங்களின் காரணமாக நானும் மற்ற தளங்களுக்கு செல்லுவது மிகவும் குறைந்து விட்டது ...இனி தான் அனைத்தையும் வாசிக்க வேண்டும்.
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தங்களின் நூல் குறித்து மிக மகிழ்ச்சியும் ஐயா.