21 May 2022

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே





பிரம்மதேவனிலிருந்து உதித்தவன் சுயம்புவ மனு. அவன் சதரூபையை மணந்து இரண்டு புத்திரர்களை பெற்றான், ப்ரியமரதா மற்றும் உத்தானபாதன்.

மகாராஜா உத்தானபாதனுக்கு இரு மனைவிகள். 

மூத்தவள் சுநீதிக்கு பிறந்தவன், துருவன். 

இரண்டாம் மனைவி சுருசிக்குப் பிறந்தவன், உத்தமன். 

உத்தானபாதனுக்கு தன் முதல் மனைவியான சுநீதியைவிட இரண்டாவது மனைவியான சுருசி மீது அன்பு அதிகம்.

அரண்மனையில் எப்பொழுதும் உத்தானபாதன் பக்கத்தில் சுருசிதான் அமர்ந்திருப்பாள். 

அவள் வாக்குக்கே செல்வாக்கு அதிகம். அரண்மனையில் அவள் வைத்ததே சட்டம் என்கிற நிலை. அரசன் அவள் பேச்சுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்ததால், சுருசி எப்படியாவது தன் மகனையே நாட்டின் இளவரசனாக்கிவிட வேண்டும் என்றெண்ணினாள்.

இதற்கு முன்னோட்டமாக மூத்த ராணியின் மீதும், அவள் பெற்ற பிள்ளை மீதும் அரசன் மனத்தில் வெறுப்பு ஏற்படும்படி பல சம்பவங்களை உருவாக்கினாள். 

சுநீதி மிகவும் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் இக்கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு, அமைதி காத்து வந்தாள். 

அரண்மனையில் தனக்கு எவ்விதமான செல்வாக்கும் இல்லை என்பதை அவள் பொருட்படுத்தவில்லை. எந்த மனக்குறையையும் அரசனிடம் தெரிவிப்பதில்லை. ஆனால், விளையாட்டுச் சிறுவனான துருவன் மனத்தில் கவலைகள் உண்டாயின.

காரணம், சித்தியின் மகன் எப்பொழுதும் அப்பா மடியில் ஏறி அமர்ந்து கொள்கிறான். தந்தையும் அவனையே பாசம் காட்டிக் கொஞ்சுகிறார். 

கட்டியணைத்து முத்தமிடுகிறார். 

ஒருமுறை கூட அவ்வாறு துருவனைக் கொஞ்சியதில்லை.

ஒரு சமயம் அரசன், பக்கத்தில் சித்தி, இருவர் நடுவேயும் தம்பி அமர்ந்திருப்பதைக் கண்ட துருவன், 'அப்பா! அப்பா!' என்று மழலைக் குரலில் கூறியபடி ஓடிச் சென்று, அரசர் மடிமீது ஏறுகிறான். உத்தானபாதன் வெறுப்போடு அவனை கீழே தள்ளிவிடுகிறான். 

தொடர்ந்து, நடந்ததை கண்டு கோபமடைந்த சுருசி, துருவனை விரட்டி அடித்தாள்.

துருவன் தன் தாயிடம் சென்று நடந்ததை கூறினான். 

ஆனால், அவளோ அதையெல்லாம் கேட்டு தன் இயலாமையைக் கூறி மௌனம் காத்தாள். சுநீதியின் மௌனம் துருவனை வதைக்க அவன் கடை கடவென தன் தந்தையின் அறைக்கு நடந்தான்.

துருவன் அழுதபடியே கெஞ்சினான், 'அப்பா நான் உங்களுக்கு மகன் இல்லையா? சித்தி வயிற்றில் பிறந்திருந்தால் தான் உங்கள் அன்பைப் பெற முடியுமா? நான் என்ன செய்தால் அந்தப் புண்ணியம் எனக்கு கிடைக்கும்?'

அதற்கு, "நீ தபஸ் செய்ய வேண்டும். கடுந்தவமியற்றி, கடவுளின் அருளைப் பெற்றால்தான் உனக்கு இந்த பாக்கியமெல்லாம் கிடைக்கும். போ! காட்டில் போய் தவமியற்று. கடவுள் காட்சி தருவார். அவரிடம் கேள், 'என்னை ஏன் இப்படி ராஜபோக பாக்கியமில்லாமல் படைத்து விட்டாய்' என்று, கூறினாள், சுருசி.

தன் தாயிடம் கானகம் செல்ல வாழ்த்துமாறு கூற, "காட்டில் புலி சிங்கம் எல்லாம் இருக்கும். அங்கு செல்ல வேண்டாம்" என்றாள் தாய் சுநீதி. 

பின் இறைவனை மனத்துள் எண்ணி, மகனின் பிடிவாதம் வெற்றி பெற வாழ்த்தி அனுப்பினாள்.

கொடுங்கானகத்தினுள் எங்கோ வேகமாக விரைந்து செல்கிறானே, ஒரு பச்சிளம் பாலகன் என்று, ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த நாரத மகரிஷி கண்டு வியப்புற்றவராய், அவன் எதிரே தோன்றி, "பாலகா, நில். நீ யார்? வனத்தின் அபாயங்களை உணராமல் எங்கு செல்கிறாய்?" என வினவினார். 

துருவன், "தபஸ் செய்யப் போகிறேன் சுவாமி. இறைவனை நாடி கானகம் செல்கிறேன்" என்றான்.

"நீ மிகவும் சிறுபிள்ளை. உனக்கு எதற்கு தபஸ்? இது கொடுங்கானகம். இங்கு ஆபத்துகள் அதிகம். தவம் புரிவது என்பதெல்லாம் பெரியவர்கள் விஷயம். நீ பெரியவன் ஆனபிறகு தவமியற்றலாம். வா என்னுடன். நான் உன்னை பத்திரமாக அழைத்துச் சென்று உன் வீட்டில் விடுகிறேன்..." என்றார் நாரதர்.

"பார்த்தால் முனிவர் போலிருக்கும் தாங்கள் இவ்வாறு பேசலாமா? பக்திக்கு வயது முக்கியம் என்று யார் சொன்னார்கள்..? என் உள்ளத்தின் உறுதியைக் குலைக்கும் பேச்சை விடுத்து, எனக்கு உதவும் விதமாக ஏதாவது கூறவியலுமானால் கூறுங்கள். என்னை ஆசீர்வதிக்க மனமிருந்தால், ஆசீர்வதியுங்கள்" என்றான் துருவன்.

"மகாவிஷ்ணுவைக் காண்பதே என் குறிக்கோள். அதற்கான உபாயத்தைக் கூறுங்கள்" என்றான். 

அதற்கு நாரதர், சிறுவனாக இருக்கிறானே என்று அவனிடம் உபாயம் கூறத் தயங்கினார்.

 பிறகு, உபாயம் கூற ஆரம்பித்தார்.

"யமுனா நதித் தீரத்திலுள்ள மதுவனம் செல். அந்த இடம் பகவான் நாராயணனுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கே அவர் நித்ய வாசம் செய்கிறார். நீ சென்று, மனத்தை ஒருமுகப்படுத்தி தபஸ் செய்..." என்று கூறி, அவனை அருகிலழைத்து, அவன் செவிகளில் திருவெட்டெழுத்து மந்திரோபதேசமும் செய்தார். துருவன் அவரை வணங்கி, மகிழ்வுடன் யமுனா நதிக்கரை நோக்கி சென்றான்.

"முதலில் உணவில் நாட்டம் இருக்கக் கூடாது. உணவு உண்பதை நிறுத்தி விட வேண்டும்" என்ற நாரதர் சொல் கேட்டு, உணவு உண்ணுவதை நிறுத்தினான் துருவன்.

பின்னர், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினான். அவனின் தியானம், உச்சநிலைக்குச் சென்றது. இறைவன், அவன் ஆத்மாவிற்குள் நுழைந்தார். அதை, துருவன் உணர்ந்து கொண்டாலும், அவனது லட்சியம் விஷ்ணுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

நாராயண மந்திர ஜபத்தை மட்டும் அவன் விடவே இல்லை.

 மூச்சோடு மூச்சாக அம்மந்திரம் அவனுள் இழைந்து, பரவிக் கொண்டிருந்தது.

 பசி, தாகம் எதையும் பொருட்படுத்தாத அச்சிறுவனின் தவம் கண்டு, கானக மிருகங்களும் அதிசயித்து, அவனுக்கு எவ்வித இடையூறும் நிகழா வண்ணம் ஒடுங்கி, ஒதுங்கிச் சென்றன.

அவன் உடலில் அபூர்வ தேஜஸ் ஒளிர்ந்தது. அவனுடைய முகம் இரவிலும் பூர்ண சந்திரன் போன்று ஒளி வீசியது. 

அமர்ந்திருந்த அவன் எழுந்து நின்று தவம் புரிந்தான். 

பிறகு ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமியற்றினான். 

அவனிடமிருந்து வெளிப்பட்ட தவக்கனல் கண்டு வானுலகத் தேவர்கள் வியப்பின் எல்லைக்கே சென்றனர். 

அவர்கள் ஒன்றுகூடி, மகாவிஷ்ணுவிடம் சென்று, "பிரபோ! துருவனின் பக்தி அசாத்தியமானது" என்றார்கள்.

வைகுண்டக் காட்சியை துருவனின் கண்களுக்கு காண்பித்தார். 

ஆயினும் அவன் தவத்தைக் கைவிடவே இல்லை.

 எங்கே கண்களைக் திறந்தால் அத்திருக்காட்சி மறைந்து விடுமோ என்று அவன் மேலும் கண்களை இறுக மூடிக்கொண்டு, 'நாராயணா, நாராயணா என்று பரவசத்தோடு கூவிக் கொண்டிருந்தான்.

பகவானுக்கு புரிந்தது, இவன் நேரில் சென்று தரிசனம் தந்தாலன்றி விடமாட்டான் என்று. 

'அடேயப்பா! என்னவொரு திடசித்தம்!' என்று எண்ணிய பெருமான் மறுகணம் அவன் முன்னே பிரத்யட்சமானார். 

"துருவா! கண்களைத் திறந்து பார்; நான் உன் முன்னால்தான் நிற்கிறேன்" என்று அவர் கூறியதும், துருவன் கண்களைத் திறந்து பார்த்தான், பரவசமுற்றான். 

அப்படியே நிலம் தோய நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

 பிறகு எழுந்து நின்று இருகரம் கூப்பி தொழுதான்.

"குழந்தாய், இவ்வளவு சிறுபிராயத்தில் உனக்கு ஏன் இக்கடுந்தவம்? யாது வேண்டும் உனக்கு..?" என வினவினார் மகாவிஷ்ணு. 

வாஞ்சையுடன் அவருடைய திருக்கரம் துருவனின் சிரஸை வருடியது. 

பகவானின் திவ்ய ஸ்பரிசம் பெற்ற கணத்தில் அவன் மகா ஞானியானான். 

அஞ்ஞான இருள் அறவே அகன்றது. 

அரசர் மடியில் அமர முடியாத ஏக்கமோ, சித்தியின் அவமதிப்போ, தம்பியின் ஏளனங்களோ துருவன் மனத்தில் சிறிதும் இல்லை. 

அவன் என்ன கேட்க இவ்வளவு தவமியற்றினானோ, அதையே மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி, அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார்.

திருமாலின் திருமார்பில் கொலுவிருக்கும் திருமகளும் துருவனின் தூய உள்ளம் கண்டு மகிழ்ந்து மலர்ந்த வதனம் காட்டி, ஆசீர்வதித்தாள்.

 'குழந்தாய் துருவா, நீ எதனையும் கேட்கவில்லை என்றாலும், நான் உனக்கு சகல சௌபாக்கியங்களையும் நான் தருகிறேன்.

 நீ பூமியில் மிகச்சிறந்த மன்னனாக நீண்ட நெடுங்காலம் இருந்து ஆட்சி புரிய வேண்டும். 

உன்னால் புவனத்தில் நல்லறங்கள் தழைக்க வேண்டும். 

மக்கள் மகிழ்வுற்று வாழ வேண்டும். 

அறம் வளர, பக்தி மேலோங்க உன் பணிகளை ஆற்று. 

உனக்கான ஆயுள் இந்தப் புவி வாழ்வோடு முடியப்போவதில்லை. 

நீ பக்தி ஜோதி. மன உறுதிக்கு நீயே ஓர் எடுத்துக்காட்டு. 

உலகம் உன் கதையை என்றென்றும் பேசி மகிழப்போகிறது. 

சரீர ஜீவிதம் முடிந்தபின் நீ வானில் துருவ நட்சத்திரமாக ஒளிரப் போகிறாய்" என்றார் மகாவிஷ்ணு.





அப்படிப்பட்ட துருவனைப்போல, சர்வலோகத்திற்கும் தந்தையான மகாவிஷ்ணுவைத் தேடி அலையும் பொருட்டு, உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன் வருவான் என நம்பிக்கை கொண்டேனா என்கிறாள் அந்தப் பெண். 

நான் அவ்வாறு எதுவும் பண்ணலையே, நான் திருக்கோளூரை விட்டுப் போகிறேன் என்கிறாள்.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்


ஒன்பதாம் பாசுரம்- ஈச்வரனை ஒத்துக்கொள்ளாத வேத பாஹ்யர்களில் (வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்) முதலில் கருதப்படுபவரான ஸர்வசூன்யவாதிகளான மாத்யமிக பௌத்தரை நிராகரிக்கிறார்.


உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் வுருவுகள்,

உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்

உளன் என, இலன் என, இவை குணம் உடைமையில்

உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே 

2907 / 1.1.9


நம்முடைய கருத்தால் ஈச்வரன் உளன் என்றாலும், பிறர் கருத்தால் ஈச்வரன் இலன் என்றாலும் உளன் என்ற விஷயத்தை ஒத்துக்கொண்டே பேசவேண்டும். உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை குணமாக உடையவனாகையாலே உருவத்துடனும், உருவம் இல்லாமலும் இவ்வுலகில் இருக்கும் பொருள்கள், தன்னை வெளிப்படுத்தும் மற்றும் மறைக்கும் இரண்டு நிலையில் இருக்கும் தன்மையோடு உளனாய் அவை எல்லாவற்றையும் வ்யாபித்து, அவற்றை விடாமல் இருப்பவன் இந்த எம்பெருமான்.






9. திருக்கவித்தலம்

ஸ்ரீ ரமாமணிவல்லீ ஸமேத ஸ்ரீ கஜேந்த்ரவரதாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

3 comments:

  1. துருவன் கதை தெரியும் என்றாலும், நீங்க சொல்லியிருப்பது ரொம்ப அருமை, அனு.

    கீதா

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான துருவன் கதை. நீங்கள் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. ரங்க நாதனை தரிசித்துக் கொண்டேன். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான துருவன் கதை. நீங்கள் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. ரங்க நாதனை தரிசித்துக் கொண்டேன். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete