03 March 2026

ஸ்ரீ திருமாலை ஆண்டான் - மாசி மகம்

நேற்று  மாசி மகம்-- ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருநட்சத்திரம்





 திருமாலை ஆண்டான் வாழி திருநாமம் 


அம்புவியில் ஆளவந்தார் அடி இணையோன் வாழியே 

ஆரியனாம் அவர் பதத்தை அன்புசெய்தோன் வாழியே 

வெம்பிவரும் வாதியரை வேர்களைந்தோன் வாழியே

மேதினியில் நாலூர் விளக்கவந்தோன் வாழியே 

எம்பெருமானார் எதிராசர்க்கு ஈடுரைத்தான் வாழியே 

ஏற்றமுள்ள மாசிமகம்  இலங்கவந்தோன் வாழியே 

வம்பவிழும் சோலைமலை வாழவந்தோன் வாழியே 

மாலாதராரியன்தாள் மாநிலத்தில் வாழியே.



திருநக்ஷத்ரம் : மாசி  மகம்

அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை

ஆசார்யன் : ஆளவந்தார்

சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்)


ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.

இந்த மாசி மகத்தில் தான், உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமாலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் (இயற்பெயர்) அவதரித்தார்.

வாமனர் என்னும் நித்யசூரியின் அம்சமாக அவதரித்த இவர்  மாலாதாரர்  என்றும்  அறியப்படுகிறார். 

திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான 'கண்ணுக்கினியான்' என்பவர் காலத்தில், மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.

இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாதத்தில் நிறைய மிளகுதூள்  தூவிவிட்டார்.

அவர்கள் சாப்பிடும்போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.

எனவே அவர்கள் தப்பித்துச் சென்று விட்டனர்.

இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் சந்ததியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர். இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.

சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால். ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில் செல்வார்கள். அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.



ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. 

ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார்  அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.

திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார்.

 அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். 

அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை  எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். 

 ஒருமுறை திருவாய்மொழி 2.3.3  “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது,  ஆழ்வார்,  எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . 

ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். 

அதாவது, ஆழ்வாரின்  இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. 

அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார். 

 இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். 

அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார்.

 அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம்   நடந்ததைக் கேட்டறிந்தார். 

அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். 

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். 

மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும்,  எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும்  கூறினார். 

 பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின்  மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். 

தொடர்ந்து வேறு  ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்).

 எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.

ஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய  திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் !!


பெரிய திருமொழி - ஒன்பதாம் பத்து 

9-9 மூவரில் முன்  முதல்வன் 

திருமாலிருஞ் சோலை -2


1831   

சிங்கம் அது ஆய், அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த,*

பங்கய மா மலர்க் கண்*  பரனை எம் பரம் சுடரை,*

திங்கள் நல் மா முகில் சேர்*  திருமாலிருஞ்சோலை நின்ற,*

நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல்? என் நல் நுதலே!    4



1832

தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள் ஆய், நிமிர்ந்து,* 

வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*

தேன் அமர் பூம் பொழில் சூழ்*  திரமாலிருஞ்சோலை நின்ற,*

வானவர் கோனை, இன்று*  வணங்கித் தொழ வல்லள்கொலோ? 5


     

1833

நேசம் இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 

வாச மலர்ப் பொழில் சூழ்*  வட மா மதுரைப் பிறந்தான்,*

தேசம் எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ்சோலை நின்ற,*

கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ!  (2) 6


திருமாலை ஆண்டான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம் 💖💖💖

No comments:

Post a Comment