14 March 2026

தொட்டையாசார்யர் - மாசி உத்திராடம்

சோழசிம்மபுரம் (திருக்கடிகை ) ஸ்வாமி தொட்டையாசார்யர் வருஷ திருநக்ஷத்திரம்  இன்று மாசி உத்திராடம் ( 14-03-2026 ) 




 தொட்டையாசார்யர் வாழி திருநாமம்


மாசி உத்திராடத்தில் வந்துதித்தான் வாழியே

மாசில் புகழ் பெரியப்பன் மகிழ்தமைந்தன் வாழியே

தேசமெங்கும் பரவாதிசயம் படைத்தான் வாழியே

தரிசனத்தை உத்தரித்து"தெளிவித்தான் வாழியே

ஆசிலெதிராசர் நிகரான குரு வாழியே

ஐந்து விசயங்களு மருளினான் வாழியே

துசில் வாதுல குலம் துலங்க"வந்தோன் வாழியே

துய மகாதேசிகனார் துணைப்பதங்கள் வாழியே



"சோழசிம்மபுரம் கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டாசார்யரின்", 484 ஆவது திருநட்சத்திரம்.('தொட்டை ஆசார்யர்' என்றும் அழைக்கிறார்கள்).

முதலியாண்டான் ஸ்வாமியின் திருவம்சத்தில், 12 ஆவது தலைமுறையில் அவதரித்தவர். இவர் திருவேங்கடவரின் அம்சமாக அவதரித்ததால், "ஸ்ரீநிவாஸமஹா குரு"/"மஹார்யர்" என்று போற்றப்படுகிறார்.

இவருடைய திருத்தகப்பனார் ஸ்ரீ சிறியப்பன். தொட்டாசார்யர் தமது பெரியப்பா ஸ்ரீ பெரியப்பனிடம் சகல சாஸ்த்ரங்களையும்கற்றறிந்தார்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை ஆஸ்ரயித்து அவர் சிஷ்யரானார்.





சோழசிம்மபுரம் யோகரநரசிம்மர் உற்சவ மூர்த்தியைக் காணாமல்,

அவரைச் சேவிப்பதற்கு 12 ஆண்டுகள் தவமிருந்தார் தொட்டாசார்யர்.

சுதர்சனர் அவருக்கு பிரத்யட்ச தரிசனம் தந்து, உற்சவ மூர்த்தி இருக்கும் குகையைக் காட்டினார். அங்கிருந்த ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சமேத நரசிம்மர் உற்சவ மூர்த்திகளை சோளிங்கர் ஊரில், கோவில் கட்டி--"பக்தோசித ஸ்வாமி" கோவில்--உற்சவங்கள் நடத்த ஏற்பாடு செய்தார்.

அவர் நடத்தியபடி உற்சவங்கள் இன்றும் நடைபெறுகின்றன.

சோழசிம்மபுரம் மலைமேலுள்ள கோவிலிலும்,கீழே உள்ள சந்நிதியிலும் ஸ்ரீசுதர்சனர், ஸ்ரீதொட்டாசார்யர் ஆகியோரின் விக்ரகங்களைச் சேவிக்கலாம்

தொட்டாசார்யர் ஒவ்வோர் ஆண்டும், சோளிங்கரிலிருந்து (சோழசிம்மபுரம்/-கடிகாசலம்/திருக்கடிகை) காஞ்சிபுரம் சென்று, ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பிரம்மோற்சவத்தில் வரதரைக் கண்குளிரச் சேவித்து வந்தார். அதுவும் மூன்றாம் நாள் அதிகாலையில் நடைபெறும் கருடசேவையில் தம் நெஞ்சைப் பறிகொடுத்து விடுவார்.

ஒரு ஆண்டு அவர் திருமேனி நோவு சாத்தியிருந்ததால்,அவரால் கருடசேவைக்குக் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை. கருடசேவை சேவிக்க முடியவில்லையே என்னும் ஏக்கத்தில் வரதரை நினைத்த படியே பிரம்மதீர்த்தக் (தக்கான்குளம்) கரையில் இருந்தார். தம் பக்தனின் மனமறிந்து அருளும் வரதர், அவருக்கு சோளிங்கரிலேயே திவ்ய கருடசேவையைச் சாதித்தார்.

கருட சேவையைக் கொண்டாடிய தொட்டாசார்யர் வரதர் மேல் ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட,  "தேவராஜ பஞ்சகம்" பாடினார்.

அந்த நேரம் சில நொடிகளுக்கு,வரதர் காஞ்சியில் காட்சி கொடுக்கவில்லை!!

 தொட்டாசார்யர், வரதர் அவருக்குக் காட்சி கொடுத்த இடத்தில் கருட வரதருக்கு ஒரு கோயில் கட்டினார்.

அங்கு வரதன்,ஸ்ரீதேவி, பூதேவியருடன் இன்றும் கருடன் மேல் சேவை சாதிக்கிறார்.அந்தக் கோயிலில் ராமாநுஜரும், தொட்டாசார்யரும் சேவை சாதிக்கிறார்கள். 

அந்த வைபவத்தைக் கொண்டாடும் வகையில், இன்றும் காஞ்சியில், வைகாசி கருட சேவையன்று காலை, வரதர் கோபுரவாசல் வரும் போது சில நொடிகளுக்கு, பெரிய குடை வைத்து திரையிட்டு பின்னர் ஆரத்தி காட்டுவார்கள்.

இந்த சேவைக்கு ''தொட்டாசார்யர் சேவை'' என்றே பெயர்.

தொட்டாசார்யர் திருமலை சென்று தவம் இருந்த போது, வேங்கடேசப்  பெருமாள் இவரிடம் ஆழி-சுதர்சன சக்கரத்தைக் கொடுத்து, திருச்சித்ரகூடத்தை(சிதம்பரம்) ஆக்கிரமித்திருந்த எதிரிகளை விரட்டிவிட்டு கோவிந்தராஜர் சந்நிதியைத் திறக்குமாறு ஆணையிட்டார்.

வேங்கடேசப் பெருமாள் கொடுத்த சுதர்சன சக்கரத்தை எடுத்துக்கொண்டு, திருச்சித்திர கூடம் வந்த தொட்டாசார்யர், பல பிரமாணங்களை எடுத்து வைத்து நாரயண பரத்துவத்தையும், ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மேன்மையையும் நிலைநாட்டினார். ஸ்ரீதேசிகன் ஸ்வாமியின் 'சததூஷனி' கிரந்தத்திலிருந்து பல பிரமாணங்களை உரைத்தார்.

சததூஷனிக்கு இவர் எழுதிய வியாக்யானத்துக்கு 'சண்டமாருதம்' என்று பெயர். இந்த நூல் அப்பைய தீக்ஷ்தரின் 'அத்வைத தீபிகா'வுக்கு எதிர்/சரி வாதமாக அமைந்தது.

எதிர்வாதம் செய்த அத்வைதி, அப்பைய தீக்ஷிதரை சண்ட மாருதமாக வாதம் செய்து வென்றதால், இவர் சண்டமாருதம் தொட்டாசார்யர் என்றழைக்கப் பட்டார். இவருடைய வம்சத்தில் தோன்றிய ஆசார்ய ஸ்வாமிகள் அனைவருமே

"சண்டமாருதம் தொட்டாசார்யர்' என்னும் பெயர் முகமன் இட்டுக் கொள்கிறார்கள். 

இது சம்பந்தமாக இன்னொரு வைபவமும் சொல்லப்படுகிறது:

திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) முகப்பில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டுப்படி கருப்பண்ணசாமி முன்பு, தொட்டாசார்யர், அப்பைய தீக்ஷிதரிடம் பரமாத்மா யார் என்று கேட்டபோது,

அவர் ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மா என்ற உண்மையைச் சொன்னாராம்.(கருப்பண்ணசாமி முன்னால் யாரும் உண்மையை மறைக்க/பொய் சொல்லத் துணிய மாட்டார்கள். இன்றும் அந்தப் பகுதி கிராமங்களில் வரும் வழக்குகளை கருப்பண்ணசாமி முன்னால் வைத்து விசாரித்து உண்மையை வரவழைக்கும் வழக்கம் உள்ளது).

கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டாசார்யரும்,ராமாநுஜரின் மறு அவதாரமாகத் திகழ்ந்த மணவாளமாமுனிகளைப் போல 74 திருநட்சித்திரங்கள் இப்பூவுலகில் எழுந்தருளியிருந்தார்.

வயோதிகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கைங்கர்யங்கள் சிறப்பாக செய்து வந்த சமயம், பரமபத பிராப்தி கிடைப்பதை உணர்ந்து ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணி கரையில் தனது சிஷ்யர்களுடன்எழுந்தருளி, ஆபத்சந்நியாஸம் தாமாகவே ஏற்று 3.10.1617,அன்று,திருநாடு அலங்கரித்தார்.

ஸ்வாமியின் திருவரசு ஸ்ரீமுஷ்ணத்தில் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அடுத்துள்ள கோயில் குளத்திற்கு அருகில் உள்ளது.



1731

மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையை*
தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசை இருந்த*
அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)

  

1736 

கண்ணார் கண்ணபுரம்*  கடிகை, கடி கமழும்*
தண்ணார் தாமரைசூழ்*  தலைச் சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள் மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?



தொட்டையாசார்யர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம் 💖💖💖





No comments:

Post a Comment