ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!
எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி 5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.
செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.
(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்)
எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.
தொல்லையில் விளைந்த எல்லை:
தொல்லை 1:
பன்னீராயிரவர் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம் !!
1322 ஆம் ஆண்டு வரை அழகிய மணவாளப் பெருமாள் தென்திருக்காவேரி வந்து, காவேரியின் வடகரையோரமாக கிழக்கே திருவானைக் கோயில் வந்து, ஜம்பு தீர்த்தத்தில் திருவடி விளக்கி,
அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இளநீர் அமுது செய்து, அப்படியே வடக்கே சென்று, வடகிழக்கில் உள்ள திருமங்கை ஆழ்வார் தோப்புக்கு எழுந்தருள்வார்.
அங்கிருந்து மாலை குதிரை வாகனத்தில் திரும்புவார்.
1322 ஆம் ஆண்டில் அழகிய மணவாளன் இவ்வாறாக புறப்பாடு கண்டருளி, திருமங்கை ஆழ்வார் தோப்புக்குச் செல்லும் வழியில், பன்றியாழ்வான் சந்நிதியில் (தவராசன் படித்துறை மேட்டில்) சிறிது நேரம் எழுந்தருளினார்.
பெருமாளோடு வந்தவர்களும், ஏற்கெனவே அங்கு வந்திருந்தவர்களுமாக, பன்னீராயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் அங்கு கூடியிருந்தனர்.
அவ்வமயம் வடக்கே இருந்து வந்த ஊலுக்கானின் (முகமது பின் துக்ளக்) படைகள் (தெற்கே உள்ள கோயில்களைக் கொள்ளை அடிப்பதற்காக) அவர்களைத் தாக்கின. கூடியிருந்த அடியார்களும் உயிரைப் பணயம் வைத்து அவர்களோடு போராடினார்கள்.
ஆனால் ஊலுக்கானின் படைகள் அவர்கள் அனைவரையும் கொன்று குவித்தன. பிள்ளை லோகாசார்யர் என்னும் ஆசார்யர் அவருடைய சிஷ்யர்கள் சிலரோடு,பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் மூடு பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு தெற்குத் திசையில் மதுரையை நோக்கிச் சென்று விட்டனர்.
1322 ல் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்ற அழகிய மணவாளப் பெருமாள் பல இடங்களிலும் அலைந்து திரிந்து,48 வருடங்கள் கழித்து 1371ல் தான் ஸ்ரீரங்கம் திரும்பினார்.இடைப்பட்ட 48 ஆண்டுகளில் ஸ்ரீரங்கத்தில் எந்த உற்சவமும் நடக்கவில்லை.
ஸ்ரீரங்கமே அலங்கோலப் பட்டுக் கிடந்தது.
![]() |
![]() |
தொல்லை 2 :
திருவரங்கம்--திருவானைக்கோயில் கலகம்.
அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீரங்கத்துக்கு நம்பெருமாளாக எழுந்தருளிய பின், மீண்டும் பங்குனி ஆதி பிரம்மோற்சவம் தொடங்கியது.
வழக்கம் போல எட்டாம் நாள் உற்சவத்தில் பெருமாள் திருவானைக் கோயிலுக்குச் சென்ற போது, செல்லும் வழியில் திருவானைக் கோயிலைச் சேர்ந்தோர் திரளாக நின்று கொண்டு, நம்பெருமாளைத் திருவானைக் கோயில் பக்கம் விட மாட்டோம்; அப்படி ஒரு வழக்கமே இல்லை என்று வாதிட்டனர்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்கள் முற்காலத்தில் நடந்த உற்சவ க்ரமத்தை, பலவாறாக எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து வாதம் தடித்து பலத்த கைகலப்பு ஆகி இரண்டு பக்கமும் ஸ்ரீரங்கம் கோயில் ஒன்பதாம் பட்டம் ஜீயர் ஸ்வாமி உட்பட,பலரும் உயிர் இழந்தனர்.
அதனால் எட்டாம் நாள் உற்சவம் கைவிடப் பட்டது.இந்த சண்டை அவ்வப்போது மீண்டும் தொடங்கி 1375 வரை தொடர்ந்தது.
தொல்லையில் விளைந்த எல்லை:
இந்த விவகாரம் அன்றைய மன்னர் விஜய நகரப் பேரரசரிடம் எடுத்துச் செல்லப் பட்டது.(ஸ்ரீரங்கம் கோவில் பத்தாவது ஜீயர் ஆழகியமணவாளர் மற்றும் கோயில் மணியகாரர் உத்தம நம்பி இருவரும் விஜயநகர் அரசரிடம் சென்று இது பற்றி முறையிட்டு வந்தனர்).
அரசர் ஒரு சமாதான குழுவை இரண்டு ஊருக்கும் மத்தியஸ்தம் செய்ய அனுப்பினார். இதில் குருவியாச உடையார்,(இவர் அன்றைய விஜயநகர் அரசர் புக்க உடையாரின் மந்திரி ) கோபால உடையார் , ரகு உடையார், திருவரங்கத்தைச் சேர்ந்த உத்தமநம்பி திருவானைக் கோயிலைத் சேர்ந்த சைவர்கள், அமர்ந்து பேசி, எல்லையை நிர்ணயம் செய்ய பெரியவர் உத்தமநம்பி கண்களை கட்டி ஓடி செல்லும் பாதையே இருவருக்கும் எல்லைக் கோடு என்று முடிவானது.
அன்று தென் திருக் காவேரியில் இருந்து வட புறம் கொள்ளிடம் வரை, இவர் ஓடிய பாதை ஸ்ரீரங்கம்--திருவானைக்கோயில் இரண்டு ஊர்களுக்கும் எல்லையாக அமைந்தது.
இவர் இரு ஊர்களுக்கும் இடையே ஒரு பெரிய மதில் கட்டிவைத்து பல மண்டபங்களையும் கட்டி வைத்தார்.
இதை தெரிவிக்கும் ஒரு தமிழ் பாடல் இன்றும் அரங்கன் முன் பாடப்பட்டு வருகிறது ..
“மல்லை நிலையிட்ட தோளரங்கேசர் மதிளாள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போலல்ல – நீதிதன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தநம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கு எட்டெழுத்தே !"
இவர் உருவாக்கிய எல்லைக் கோடு தற்போதைய ஸ்ரீனிவாச நகர் முதல் தெருவில் அமைந்தது. இந்த தெருவில் தற்போது இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியே அன்று ஒரு பதினாறு கால் மண்டபம் என்கிறார் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்வாமி. (அந்தத் தெரு முனையில் இந்த வைபவத்தின் நினைவாக குருவியாச உடையார் ஒரு ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டினார் --எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில். அங்கு ஒரு கல்வெட்டும் உள்ளது.)
உத்தம நம்பி கட்டிய எல்லைச் சுவரில், இப்போது எஞ்சி இருப்பது ஒரு நுழைவாயில் மற்றும் திருவானைக்கோவில் “ஜம்புகேஸ்வர நகர்” அருகில் தற்போது சில கற்கள் மட்டுமே !
அதன்பின் தற்போது பங்குனி உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் திருவானைக் கோயில் செல்லாமல், தற்போதைய தேவி தியேட்டருக்கு வலதுபுறம் உள்ள சாலையில் வடக்குத் திசையில் சென்று, அரசு பெண்கள் பள்ளி சாலையில் கிழக்காகச் சென்று, சென்னை நெடுஞ்சாலை திரும்பி, சுங்கச் சாவடியில் கிழக்காகத் திரும்பி திருமங்கை ஆழ்வார் தோப்பில் உள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார்.
(--- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் --- நன்றி சுவாமி )
அனுபிரேம்💙












No comments:
Post a Comment