14 May 2022

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
அனுசூயா என்றால் "பொறாமையற்றவள்" என்று பொருள். 

மந்தாகினி நதிக்கரையோரம் சித்திரகூடத்திலொரு பகுதியில் மகரிஷி அத்ரியும் அவரது பத்தினி அனசூயையும் வாழ்ந்தனர்.

அயோத்தியிலிருந்து புறப்பட்ட சீதாராமனும் லட்சுமணனும் சித்திரகூடத்தின் வடக்கு பகுதியில் குடிலமைத்து தங்கியிருந்த பொழுதுதான் பரதன் அவர்களை தேடி வருகிறான். 

எவ்வளவோ சொல்லியும் இராமனின் முடிவினை மாற்றமுடியாமல் அவனது பாதுகைகளை பெற்றுக்கொண்டு செல்கிறான், பரதன். இப்பொழுது அனைவருக்கும் தெரிந்து விட்டது அவர்களது குடில் இருக்குமிடம். 

பரதனைப்போல அயோத்தி மக்களும் இங்கே வந்துவிடுவனரோ என்ற கவலையில் மூவரும் அங்கிருந்து தண்டகாரண்யத்திற்கு புறப்படுகின்றனர்.

சித்திரக்கூடத்தின் தெற்கே போகும் வழியில், அத்ரி மஹரிஷியின் ஆஸ்ரமத்தை அடைகின்றனர். அவர்களை முதலில் வரவேற்ற முனிவர், "மஹரிஷியின் பத்தினி பெரும் பதிவிரதை. ஒருமுறை பஞ்சம் வந்த பொழுது இங்கே காய்கறிகளை பயிரிட்டும் அந்த கங்கையை கொண்டுவந்தும் மக்களை காத்தவர் அவர். உங்கள் தாயைப்போல அவரை வணங்குங்கள்!" என்று, அவர்களிடம் அனசூயையை அறிமுகப்படுத்தினார். 

பின், இராமன் அத்ரி முனிவரோடும் சீதை அனசூயையோடும் உரையாடுகின்றனர்.

பொறாமையின் சாயலே இல்லாமல் அனசூயை, "சீதா, உனது திருக்கல்யாணம் மிதிலையில் நடந்ததாமே, என்னிடம் கூட சொல்லவில்லை? எத்தனை நாட்கள் நடந்தது? யார் யார் எல்லாம் வந்திருந்தனர்?" என பலவாறு கேட்டார். 

அவரது அனைத்து கேள்விகளுக்கும் சீதை சந்தோசமாக பதிலளித்தாள்.

சீதையின் வாயிலாக அனைத்தையும் கேட்டறிந்தபின் அனசூயை, "இவ்வளவு நடந்திருக்கிறதே! உன் தந்தை ஒவ்வொரு அங்கத்திற்கும் தங்கத்தாலே உன்னை அலங்கரிக்க வல்லவர். அப்படி வாழவேண்டிய நீ, இப்படி வனத்திற்கு வந்துவிட்டாயே? உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா. கணவரது துன்ப காலத்தின் நீயும் பங்கு கொள்ளவேண்டும் என எண்ணியிருக்கிறாயே? இருந்தாலும் பரவாயில்லை. நான் உனக்கு அலங்காரம் செய்கிறேன்" என வனத்திலுள்ள மலர்களை பறித்து வந்தார். 

வனத்தில் கிடைக்கும் கிளைகள், விதைகள், காய்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட அணிகலன்களை சேர்த்தார்; பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளை எடுத்து வைத்தார். 

அவை அனைத்தையும் சீதையின் கையில் வைத்து, "இதை நீ அணிந்துக்கொள். இவைகளை உடுத்தினால், நீ நீராடவேண்டிய அவசியமும் ஏற்படாது. மணம், வர்ணம், அழகு மாறாமல் அவ்வாறே இருக்கும். கவலைக் கொள்ளாதே, சீதா! பதினான்கு ஆண்டுகள் நீ இங்கு முனிவர்களோடு தங்கி பலவற்றை அறிந்து கொள்ளவிருக்கிறாய். வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி 'ஓஹோ' வென்று வாழப்போகிறாய். 

இராமனின் சொற்களை கேட்டு நடந்து கொள். உனது தர்மம் உன்னை என்றும் கைவிடாது. எல்லா நலனும் பெறுவாய், மகளே!" என்றார்.

தான் பறித்த மலர்களை தானே சீதையின் தலையில் வைத்து அவளை அலங்காரம் செய்தார். சீதையை வனத்தின் ராணியைப்போல் அலங்காரம் செய்து, திருஷ்டி சுற்றினார்.

 பின் மாலையில், "இனியவளே, அந்தி சாயவிருக்கிறது. நீ உன் கணவனுடன் இருக்கவேண்டிய சமயம்" என சீதையை வழியனுப்புகிறார். 

தன் தாய் சுனைனாவை விழுந்து வணங்குவது போல அவரை வணங்கி இராமனிடம் திரும்புகிறாள், சீதை. 

அனசூயையின் அன்பான உபசரிப்பையெல்லாம் கேட்டு இராமன் ஆனந்தம் கொள்கிறான். அன்றைய இரவை அவர்கள் ஆஷ்ரமத்திலேயே கழிக்கின்றனர்."அனசூயை தாயைப் போலப் பிராட்டியிடம் அன்பு செலுத்தினார். அசூயையை விட்டுவிட்டு ஒரு தாயைப்போல என்னால்  அன்பை செலுத்த முடியவில்லையே, அனசூயையைப் போல 'தேவிக்கு' அன்பு காட்டமுடியவில்லையே. ஆதலால், நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்?" என்கிறாள் அப்பெண்பிள்ளை.

திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்


எட்டாம் பாசுரம்-  வ்யஷ்டி ஸ்ருஷ்டி (அண்டத்துக்குள் பல வகையாகக் காணப்படும் பொருள்களைப் படைத்தல்) மற்றும் வ்யஷ்டி ஸம்ஹாரத்தைச் செய்யும் ப்ரஹ்மா மற்றும் ருத்ரனும் எம்பெருமானுக்கு அதீனப்பட்டவர்கள் என்கிறார்.


சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்

வரன் முதலாய்,  அவை முழுது உண்ட பரபரன்

புரம் ஒரு மூன்று எரித்து,  அமரர்க்கும் அறிவியந்து

அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே


2906 / 1.1.8


தேவர்களான ப்ரஹ்மா முதலியவர்களுக்கும், அறியமுடியாத நிலையையுடைத்தான ஆகாசம் முதலான ஸமஷ்டிரூபத்தில் (பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் இருக்கும்) எல்லாப் பொருள்களுக்கும் பெரிய காரணமாய் அவற்றை முழுவதுமாக உண்டு, அழிப்பதாலே பரர்களான (பெரியவர்களான) ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களுக்கும் பரனானவன் எம்பெருமான். அந்த எம்பெருமான், ருத்ரன் என்றும் ப்ரஹ்மா என்றும் ப்ரஸித்தராய் தனித்துவம் வாய்ந்த மூன்று நகரங்களை எரித்தும், தேவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தும், அண்டத்துக்குள் இருக்கும் உலகங்களை அழித்தும் அவற்றை ஸ்ருஷ்டித்தும், அவர்களுக்குள்ளே அந்தாராத்மாவாக உள்ளான்.8 .திருக்கூடலூர்
ஸ்ரீ பத்மாஸநவல்லீ ஸமேத ஸ்ரீ வையங்காத்த ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


2 comments:

  1. அத்ரி முனிவர், அனுசூயை தெரியும் ராமர் சீதை அங்கு சென்றது தெரியும் ஆனால் இப்படியான உரையாடல்கள் எல்லாம் புதிது. ராமாயணத்தில்தான் எத்தனை வகைகள்!

    நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் அனு! படங்களும் அழகு

    கீதா

    ReplyDelete
  2. படங்களும் தகவல்களும் நன்று. விதம் விதமான இராமாயணக் கதைகள். அனைத்தும் நன்று.

    ReplyDelete