திருக்கோஷ்டியூரில் எம்பெருமானார் சரமஸ்லோக அர்த்தத்தை ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியபொழுது, திருக்கோஷ்டியூர் நம்பி “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை சுவாமி ஸ்ரீராமானுஜருக்கு சூட்டினார்.
முந்தைய பதிவில் இராமானுஜர் நூற்றந்தாதியின் சிறப்புகளை கண்டோம் இன்றும் அதன் தொடர்ச்சி ...
ஒரு பாசுரத்தில் இராமானுஜரின் கருணையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். இராமானுஜரின் கருணை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், ஒவ்வொரு ஆழ்வார்களிடம் இருந்தும் அவர்களது சொத்தினைப் போலே பெற்றிருக்கிறார் என்று பாடியுள்ளார்.
மற்ற பாசுரங்களில் தந்தையா - திருவாய்மொழி படியுங்கள்.
தாயா - திருவாய்மொழி படியுங்கள்.
கஷ்டமா - திருவாய்மொழி படியுங்கள் என அனைத்தும் திருவாய்மொழி தான் நமக்கு எல்லாமே என்று காட்டியவர் ஸ்ரீ இராமானுஜர்.
மற்றவர்கள் வேதம் காட்டிய சமஸ்கிருதத்தை மட்டும் சொல்ல, இராமானுஜரோ 'திருவாய்மொழி' ஒன்றையே அனைத்துமாகக் காட்டியுள்ளார்.
இதில் கடைசி மூன்று பாசுரங்கள் சாற்று முறை பாசுரங்கள் என்று சொல்வார்கள்.
இந்த கடைசி மூன்று பாசுரங்கள் பாடும் பொழுது, இராமானுஜரே கோஷ்டியார் புடைசூழ உள்ளே வந்து விட்டார்.
105 பாசுரம் முடிந்துவிட்டது.
சுவாமி உள்ளே வந்ததும் எழவேண்டுமோ இல்லையோ? சட்டுன்னு மொத்த கோஷ்டியும் எழுந்துவிட்டது.
அதனால்தான் இராமானுஜர் நூற்றந்தாதியில் கடைசி மூன்று பாசுரங்கள் சாற்று முறை பாசுரங்கள் என்று சொல்வார்கள்.
சாதாரணமாக சாற்றுமுறை பாசுரங்கள் என்றால், கடைசியாக முடிக்கின்ற பாட்டு.
அதில் இரண்டு பாசுரங்கள் மட்டும் தான் திரும்ப திரும்ப பாடுவார்கள்.
ஆனால், இந்த இராமானுஜ நூற்றந்தாதிக்கு மட்டும் மூன்று பாசுரங்கள். ஏனெனில், அப்பொழுது தான் சுவாமி உள்ளுக்குள்ளே வந்து விட்டாராம்.
'இருப்பிடம் வைகுண்டம், திருமாலிருஞ்சோலை, திருமலை என அத்தனை இடத்திலும் ஸ்ரீமந்நாராயணன் இருக்கலாம். ஆனால், அந்த அத்தனை இடத்தையும் காலி செய்துவிட்டு மொத்தமாய் இராமானுஜரின் திருவுள்ளத்தில் பகவான் குடி கொண்டு விட்டார். அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?' என்று பாடியிருக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.
அந்த இராமானுஜர் எம்பெருமானுடன் சேர்ந்து, என் இதயத்திலே குடிபுக வேண்டும் என்றும் ஆசையித்துள்ளார்.
கடைசி பாசுரத்தில் பிரார்த்திக்கிறார் - நம் தலையில் இராமானுஜரின் திருவடித் தாமரைகள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று சொல்லி இராமானுஜ திருவந்தாதியைப் பூர்த்தி செய்கிறார்.
இராமானுஜர் நூற்றந்தாதியைக் கேட்க வேண்டும் ஒருவர் ஆசைப்பட்டார், அவர் யார் என்று தெரியுமா? வேறு யாரும் இல்லை.
உலகமுழுவதையும் ஆளுகின்ற சக்கரவர்த்தியான ரங்கராஜா, திருவரங்க நாதன்.
எம்பெருமானுக்கோ ஓர் ஆசை. இராமானுஜர் நூற்றந்தாதியைத் தன் செவியாலே கேட்க வேண்டும் என்று.
ஒரு நாள் புறப்பாட்டு கோஷ்டி தயாராக இருந்தது.
எல்லா சுவாமிகளும் தயார்.
சுவாமி இராமானுஜர் தான் கோஷ்டியின் முன்னாடி திரிதண்டம் பிடித்துக் கொண்டு வருவார்.
இன்னும் ஸ்ரீரங்கநாதனான நம்பெருமாளுக்கு 'இராமானுஜர் நூற்றந்தாதி இன்று நாம் கேட்க வேண்டும். நம்மை இத்தனை பேருக்குமாக ஆக்கி வைத்தாரே! அவரது பிரபாவத்தை நாமே காது கொண்டு கேட்க வேண்டும்' என்று ஆசை வந்துவிட்டது அரங்கனுக்கு.
தெய்வம் என்றாலே திருவரங்கநாதன்தான்.
நூற்றியெட்டு திருப்பதிகளிலே முதலான திருப்பதி.
அவர் எதைச் சட்டம் என்று சொல்கிறாரோ, அதுதான் அத்தனை பேருக்கும் சட்டம்.
அவர் திருவுள்ளத்தில் எது தோன்றுகிறதோ, அது தான் மொத்தப் பேருக்கும் உள்ளம்.
அவர் திருவடிகளைப் பற்றினால் தான் முக்தி.
இதில் யாருக்கேனும் சந்தேகம் உண்டோ? அப்பேர்ப்பட்ட எம்பெருமான் யாருடைய பெருமையைக் கேட்க ஆசைப்படுகிறார்? நம் இராமானுஜரின் நூற்றந்தாதியைக் கேட்க ஆசைப்படுகிறார்.
இன்று இராமானுஜர் நூற்றந்தாதி கேட்டே ஆக வேண்டும் என்று திருவுள்ளத்தில் கொண்டு, "இன்றைக்கு இராமானுஜரை மடத்திலேயே கொண்டு போய் விடுங்கள்" என்றார் அரங்கன் தன் திருவாய் மலர்ந்தருளினார்.
ஏனெனில், இராமானுஜர் பெருமை பாடும் தலைமை கோஷ்டிக்கு அவரே தலைமையேற்று செல்ல முடியுமா?! இராமானுஜருக்கு வெட்கமாக இருக்காதா. இதனை பெருமாள் யோசித்துக்கொண்டு, "இராமானுஜரை மடத்தில் விட்டு விட்டு வாருங்கள்" என்றார்.
அவர்களும் இராமானுஜரை மடத்தில் விட்டு விட்டு வந்ததும், கோஷ்டி புறப்பட்டது.
அது அன்று மட்டும் நடந்த விசயம் அல்ல.
இன்றும் திருவரங்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
திருவரங்கத்திற்குப் புறப்பட்டுச் சென்றால், இராத்திரி வேளையிலே முதலில் அரங்கனின் யானை முன்னே செல்லும்.
அதன்பின் ஜீயர்கள்.
அதற்குப் பின்னே நம்பெருமாள்.
அவருக்குப் பின்னாடி வேதபாராயணம் கோஷ்டி.
இன்றும் நம்பெருமாளுக்கு விளக்கு வெளிச்சமே...
தீப்பந்தம் பிடித்துக்கொண்டுதான் செல்வார்கள்.
அதைப்போலே ஆச்சரியம் திருவீதி கண்டருள்கிறார்.
இராமானுஜர் கோஷ்டியில் இல்லை.
மற்ற அனைவரும் இருக்கிறார்கள். உடனே, நம்பெருமாள் ஆணை.
"வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தால் நம் காதுகளுக்குச் சரிவர நூற்றந்தாதி கேட்காது. வாத்தியத்தை நிறுத்திவிடுங்கள்" என்று திருவாய் மலர்ந்தார். இன்றும் வாத்தியம் இல்லாமல் திருவரங்கத்தில் இராமானுஜர் நூற்றந்தாதி பாடுவார்கள்.
ஆனால், வாத்தியம் வேண்டுமல்லவா? கீழ்வாசல், மேல்வாசல், வடக்கு வாசல், தெற்குவாசல் என அந்தந்த வீதிகளில் நாற்சந்தி முனை வருமல்லவா?! அப்பொழுது வாத்தியம் வாசிப்பார்கள்.
ஒரு நிமிடம் பெருமாள் நிற்பார்.
கோஷ்டியும் நிற்பார்கள்.
உடனே, வாத்தியத்தை நிறுத்திவிட்டு திரும்ப இராமானுஜர் நூற்றந்தாதி கேட்டுக்கொண்டே செல்கிறார்.
பெருமாளும் இராமானுஜர் நூற்றந்தாதியை ஏற்றுக்கொண்டு, வீதியுலா வருகிறார்.
இராமானுச நூற்றந்தாதி
மூன்றாம் பாசுரம் -- தன் நெஞ்சைப் பார்த்து “உலக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களின் ஸம்பந்தத்தை விலக்கி எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுடையவர்கள் திருவடிகளில் என்னைச்சேர்த்த உபகாரத்துக்கு உன்னை வணங்குகிறேன்” என்கிறார்.
பேர் இயல் நெஞ்சே! அடிபணிந்தேன், உன்னை பேய்ப்பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன், செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே
2793 / 3
உயர்ந்த குணத்தை உடைய நெஞ்சே! தாழ்ந்த பிறவிகளாய் அஹங்காரம் முதலிய தோஷங்களை உடையவர்களுடன் இருக்கும் தொடர்பை நீக்கி, நல்ல சாஸ்த்ர ஞானம் உடையவர்களாய், அடியார்கள் தன்மைக்கேற்பத் தன்னை அமைத்துக்கொள்ளும் நேர்மையை உடையவரான எம்பெருமானார் விஷயத்திலே பக்தி கொண்டிருக்கும் பெரிய பேற்றைப் பெற்றவர்களுடைய திருவடிகளில் என்னைச் சேர்த்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உன்னை வணங்கினேன்.
திருவல்லிக்கேணி ஸ்வாமி எம்பெருமானார் உத்ஸவ காட்சிகள் ....
நான்காம் பாசுரம்---- எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினால் இனித் தான் பழைய தாழ்ந்த நிலையை அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனக்கு இனி ஒரு குறையும் இல்லை என்று சொல்லுகிறார்.
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்கவைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
2794 /4
எல்லாப் பொருள்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரனையே எல்லோரும் தெரிந்துகொண்டு அனுஸந்தானம் செய்யும்படி ஸ்ரீபாஷ்யத்தின் மூலமாக அருளிச்செய்த, எல்லோரையும் விட உயரந்தவரானவர் எம்பெருமானார்.
அவர் பொருளல்லாத என்னை இந்த லோகத்திலே ஒரு பொருளாகும்படிப் பண்ணி, அஜ்ஞானத்தை வளர்க்கக்கூடியதான அநாதி காலமாகத் தொடர்ந்து வரும் என்னுடைய கர்மங்களை வேரோடு அறுத்துத் தம்முடைய திருவடிகளையும் என்னுடைய தலையிலே வைத்தருளினார். ஆனபின்பு, எனக்கு ஒரு குறையும் இல்லை.
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்💖💖
ரொம்ப அருமையா இராமானுஜர் பற்றி எழுதியிருக்கீங்க (எழுதிக்கொண்டு வர்றீங்க). மூன்று திருமேனிகளில் ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு பதிவிலும் சேர்த்திருக்கலாம்.
ReplyDeleteரொம்ப அழகா எழுதியிருக்கீங்க, படங்களும் அருமை. பாராட்டுகள்
அருமை, அனு! எம்பெருமானார் பற்றிய அனைத்தும்.
ReplyDeleteகீதா
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDelete