மேல்கோட்டையூர்–திருநாராயணபுரம்
சோழ அரசனாகிய முதற்குலோத்துங்கன் சைவ மதப்பற்றினால் வைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் சுவாமி இராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டை விட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக வந்தார்.
இராமானுஜர் திருநாராயணபுரத்தில் ஸ்ரீமந்நாராயணனின் திருக்கோவில் இருப்பதை அறிந்தார். மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மலைப்பகுதியில் நடந்தே சென்றார். சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலுக்குள் சென்றார். கோவில் சிதிலமடைந்து இருந்தது. மூலவரும் இல்லை. உற்சவரும் இல்லை. இயற்கை சீற்றங்களால் மண்ணிற்குள் புதைந்துவிட்டது போலும்.
மூலவர் இங்கே தான் இருக்கிறார் என்று நினைத்து, மூலவரின் விக்கிரகத்தையும் உற்சவரின் விக்கிரகத்தையும் தேட ஆரம்பித்தார். காட்டுப் பகுதியில் விக்கிரங்களைத் தேடி அலையும் பொழுது, அங்கு ஏதும் தென்படாததால் மனம் வருந்தினார். கவலையுடன் இருக்கும் பொழுது, ஒரு துளசிச் செடியின் மென்மையான மணம் உடம்பெங்கும் புலகாங்கிதத்தை உண்டாக்கியது.
'இந்த மணம் எங்கிருந்து வருகிறது? துளசிச் செடி எங்கிருக்கிறது?' என அதைத் தேடி அலைந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார்.
ஒரு கரையான் புற்று இருந்தது. அதன் அருகில் சென்று பார்த்தபொழுது, ஒரு விஷ்ணு விக்கிரகம் புலப்பட்டது. இராமானுஜர் மனத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
அவர் தான் திருநாராயணபுரம் மேல்கோட்டையில் மூலவராக எழுந்தருளியிருக்கும் "திருநாராயணர்".
திருநாராயணபுரம் மூலவரைக் கண்டறிந்த இராமானுஜர், மூலவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி, அந்த விக்கிரகத்தை கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்தார்.
"மூலவரின் விக்கிரகத்தை கண்டுபிடித்தாயிற்று! உற்சவர் எங்கே?" என்று அங்குள்ள அனைவரிடம் விசாரித்தார். முஸ்லீம் அரசர்களின் தாக்குதலின் போது அதை எடுத்துச் சென்று விட்டார்கள் என்று அவ்வூரில் உள்ளோர் கூறினார்கள்.
ஒரு வழியாக டில்லி மகாராஜாவின் அரண்மனையில், மகாராஜாவின் மகள் அந்தப்புரத்தில் உற்சவர் விக்கிரகம் இருக்கிறது என்றதும், இராமானுஜர் டில்லியை நோக்கி புறப்பட்டார்.
டில்லிக்குச் சென்றதும் அங்குள்ள முஸ்லீம் அரசர்களுடன் போராடி விக்கிரத்தை எடுத்துச் செல்ல உத்தரவு பெற்றுவிட்டார்.
முஸ்லீம் பாதுஷா அரசரின் மகள் அந்தரங்க அறையில் உற்சவரின் விக்கிரகத்தோடு விளையாடுவதும், கொஞ்சுவதும், உணவு ஊட்டுவதும் என அவரோடு பொழுதைப் போக்கி வந்தாள்.
இராமானுஜர் அவளிடம் இந்த விக்கிரத்தைக் கொடுக்கும் படி கேட்க, அவளோ "இந்த பெருமாள் வந்தார் என்றால் உங்களோடு கூட்டிச் செல்லுங்கள்" என்றாள். "இல்லையென்றால் இங்கே விட்டு விடுங்கள்" என்றாள்.
இராமானுஜரோ உற்சவரைப் பார்த்து "என் செல்லப்பிள்ளையே வாராய்! என்னோடு வாராய்!" என்று அழைத்தார். செல்லம் என்பதற்கு செல்வம் என்பதும் பொருள். இராமானுஜர் தன்னோட செல்லப்பிள்ளையைத் தான் இப்போது அழைக்கிறார்.
இராமானுஜர் அழைக்க, விக்ரமான செல்வப்பிள்ளை குழந்தையாக மாறி கட்டிலிலிருந்து இறங்கி, கால்கொலுசு சலசலக்க மெதுவாக நடந்து நடந்து இராமானுஜரின் மடியில் வந்து சிலையாக மாறி அமர்ந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட அனைவரும் வாயடைத்து போனார்கள்.
ஆனால், அந்த விக்கிரகத்தை எடுத்து வரும் பொழுது, அவரிடம் இருந்து அந்த விக்கிரகத்தைக் கைப்பற்ற எதிரிகள் முயற்சித்தார்கள். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஹரிஜன மக்கள் இராமானுஜருக்கு பெரும் துணையாக நின்று எதிரிகளின் முயற்சியைத் தோல்வியுறச் செய்தனர்.
இராமானுஜர் அவர்களுக்குத் தம் நன்றியைத் தெரிவிக்க, இந்தக் கோயிலில் ஹரிஜனப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆகவே, தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக போன நூற்றாண்டில் தான், செயல்பட்டது என்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹரிஜனங்களுடைய ஆலயப் பிரவேசத்திற்கு வழி வகுத்தவர் இராமானுஜர் என்பது சரித்திரப்பூர்வமான உண்மை.
தீண்டாமைக் கொள்கையை எதிர்த்தார் இராமானுஜர். இங்கு ஹரிஜனங்களுக்கு அவர் அளித்த பெயர் திருக்குலத்தார்.
இராமானுஜர் செல்வப்பிள்ளையை அழைத்துக் கொண்டு திருநாராயணபுரத்தில் உற்சவராக பிரதிஷ்டை செய்து விட்டார். மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பாக பூஜைகள் செய்ய உத்தரவிட்டார்.
சோழ அரசனாகிய முதற்குலோத்துங்கன் இறந்துவிட்டான் என்ற செய்தி இராமானுஜருக்குக் கிடைத்தது. மீண்டும் இராமானுருக்கு திருவரங்கத்திற்கு செல்ல ஆசை வந்து விட்டது.
இராமானுஜர் தான் திருவரங்கம் செல்ல வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினார். மைசூரில் வைஷ்ணவ மதம் நசித்துப் போகாமல் பார்த்துக் கொள்வதே அவர்கள் தமக்குச் செய்யக்கூடிய தொண்டு என்று அவர்களிடம் சொன்னார் இராமானுஜர்.
தில்லி முஸ்லீம் அரசனின் மகள் விஷ்ணு விக்கிரகத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக, அவளுடைய உருவத்தையும் திருநாராயணபுரம் திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இராமானுஜர்.
செல்வ நம்பி என்பது திருநாராயணபுரம் உற்சவரின் திருநாமம்.
"செல்வ நம்பியான செல்லப்பிள்ளையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் குறை வைத்தீர்கள் என்றால் மறுபடியும் பாதுஷா மகளின் அந்தப்புறத்திற்கு ஓடி விடுவார் இவர். ஆகையால், இவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று, 700 மடங்கள் உண்டாக்கி, 52 சிஷ்யர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு திருவரங்கம் திரும்பினார் இராமானுஜர்.
ஆனால், சிஷ்யர்களுக்கு இராமானுஜரைப் பிரிய மனம் வரவில்லை. இதை அறிந்த இராமானுஜர் தன்னுடைய விக்கிரகம் ஒன்றைச் செய்ய சொல்லி, தன்னுடைய அருளின் ஒரு பகுதியை விக்கிரகத்திற்கு கொடுத்தார். இதனால், சீடர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள இராமானுஜர் விக்கிரகம் ...தானுகந்த திருமேனி.
திருவரங்கத்தில் உள்ள இராமானுஜர் திருமேனி அவரது 120 வயதில் உள்ள தானான திருமேனி.
திருநாராயணபுரம் இராமானுஜர் விக்கிரகம் தமர் உகந்த திருமேனி ..
மைசூரில் இராமானுஜர் 12 ஆண்டுகள் இருந்தார். சோழ அரசன் இறந்தான் என்ற செய்தி கேட்டு திருவரங்கத்திற்குப் புறப்பட்ட இராமானுஜர், கோவில் வழிபாட்டு முறைகளைத் திருத்தமாக மைசூர் வைஷ்ணவர்களுக்கு உணர்த்திவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.
முந்தைய பதிவுகள்...
உடையவர் திருநட்சத்திரம்
சுவாமி இராமானுஜர்
சுவாமி இராமானுஜர் -உடையவரின் உயர்ந்த பக்தி நிலை
உடையவர் திருநட்சத்திர விழா...
உடையவர் திருநட்சத்திரம்
சுவாமி இராமானுஜர்
சுவாமி இராமானுஜர் -உடையவரின் உயர்ந்த பக்தி நிலை
உடையவர் திருநட்சத்திர விழா...
திருவரங்கத்தமுதனார் அருளிய
இராமாநுச நூற்றந்தாதி
நிதியைப்பொழியும் முகிலென்று * நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுஉலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன்யமுனைத்துறைவனிணையடியாம்
கதிபெற்றுடைய * இராமானுசன்என்னைக்காத்தனனே.
21
3797
3797
கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும்வெப்பும்முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்றுபோற்றிட வாணன்பிழைபொறுத்த
தீர்த்தனையேத்தும் * இராமானுசன்என் தன்சேமவைப்பே.
22
3798
3798
வைப்பாய வான்பொருளென்று * நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்
ஒப்பாரிலாத உறுவினையேன்வஞ்சநெஞ்சில்வைத்து
முப்போதும்வாழ்த்துவன் * என்னாம்இதுஅவன்மொய் புகழ்க்கே?
மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்போற்றும் புலைச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும் கார்தன்னையே.
24
3800
3800
காரேய்கருணையிராமானுச! * இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின்தன்மை * அல்லலுக்கு
நேரேயுறைவிடம்நான்வந்துநீயென்னையுய்த்தபின் உன்
சீரேஉயிர்க்குயிராய் * அடியேற்கு இன்றுதித்திக்குமே.
25
3801
3801
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!
அத்திருவடிகளுக்கு சரணம்..!
அன்புடன்
அனுபிரேம்..
சிறப்பான தகவல்கள். இராமானுஜர் பற்றிய புத்தகம் ஒன்றில் படித்த தகவல்களை மீண்டும் உங்கள் வரிகளில் படித்து ரசித்தேன்.
ReplyDeleteபடங்கள் நன்று.
நன்றி வெங்கட் சார்
Deleteமிக அருமை. கார் ஏய் கருணை ராமானுசா - கார்மேகம் அன்பு பூண்டு மழையை வர்ஷிப்பதைப்போன்ற கருணை உள்ளம் கொண்ட இராமானுசர்.
ReplyDeleteஇராமானுசர் தன் 70-80 வயதில்தான் மேல்கோட்டை சென்றார். அதனால் அங்கு இருப்பது அவரது 80 வயது தோற்றமாகத்தான் இருக்கணும். (1096ல் திருநாராயணபுரம் விஜயம், 1137ல் மறைந்தார் இராமானுசர்).
தகவலுக்கு நன்றி சார்...
Deleteஆம், மேல்கோட்டையில் இருக்கும் போது ஸ்வாமியின் வயது 80..
இப்பொழுது பதிவிலும் மாற்றிவிட்டேன்...
பிழைகளுக்கு மன்னிக்கவும்....
குருவின் ஸ்தானத்தில் இருந்து திருத்தும் தங்களின் அன்பிற்கு நன்றிகள் சார்
உடையவர் வரலாறு படித்தேன் .முன்பே தெரிந்த கதை என்றாலும் நீங்கள் சொன்னவிதம் அருமை. மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteஉடையவர் திருவடி வாழ்க!
நன்றி மா
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Delete