07 April 2020

பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை.....


பெரிய பிராட்டியார்  திருநட்சத்திரம் ...  (பங்குனி – உத்ரம்)பெரிய பிராட்டியாரின் வாழி திருநாமம்:


பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே

எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே

இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.
 நம்பெருமாள் , உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக் கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு, காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார்..

அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான் உறையூர்நாயகியை மணக்கிறார்.

புதுமாப்பிள்ளை ஆகிறார்!

புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்துவிடுகிறார்....

‘ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி ‘எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?’ எனக் கேட்பாளே என்ன செய்வது  என தவிக்கிறார்..


காவிரிக்குப் போய் (அப்போது நீர் நிறைய இருந்திருக்கும்) பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான்.

ஒன்றும் கிடைக்கவில்லை!


தப்பு பண்ணிய கணவர்கள், சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் பெருமான் ,  ஆகவே ஓசைப்படாமல் (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார்.

அன்னைக்கா தெரியாமல் போகும் அரங்கனின் தந்திரம்?
டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

அரங்கன் ஏமாற்றமாய் நகர்கிறான்.

மறுபடி கதவைத்  திறந்து  வைக்கிறாள் அரங்க நாயகி.

‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும்,

மறுபடி... ‘டமால்’...

‘சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம் வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள்?’ என பல்லக்கில் தன்னை திரைத்துணியால் மறைத்துக் கொள்கிறான் அரங்கன்.

‘ம்ம் மெல்ல ஓசையின்றி உள்ளே செல்லுங்கள்’ என அடியார்களுக்கு ஆணையிடுகிறான், அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற் கதவருகில் போகும் போது உள்ளிருந்து  வெண்ணைக்கட்டிகள்  வீசப்படுகின்றன.

புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்களைவிட்டு அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் அன்னை.

சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர்.

தாயார் சார்பாக சில ஊழியர்கள், தலத்தார் என்று பெயர்.
பெருமாள் சார்பாக சில ஊழியர்கள்.,தொண்டுக் குலத்தார் என்று பெயர்.

தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார்.

சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.
உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...

படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....

இப்படியே மூன்று முறை! .......

வடக்குச் சித்திரைவீதி மக்கள் எல்லாரும் அன்னையின் பக்கம்,. வெண்ணை பூக்களை பல்லக்கின் மீது வீசி எறிவார்கள் !

தெற்குசித்திரைவீதி மக்கள் பெரும்பாலும் அரங்கன் பக்கம்!

கடைசில்தான் மட்டையடி நடக்கும்!
மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!
மட்டையடி உற்சவம் என்பது இதுதான்.

பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும்.

விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது ...
சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது.
நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறார்.

அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார்.

பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?

வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே!

இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றான்?


நம்மாழ்வார் தாயாரைப்பார்த்துக்கேட்கிறார்.

“அரங்கவல்லியே! நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்? அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?


”பங்குனி உத்திரம்,.உன் பிறந்த நாள் வேறு இன்று உன்னோடு இருக்க ஓடி வந்தவனை இப்படிக் காயப்படுத்தலாமா ..

அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டேன்
 என்று உன் கணவனைக் கரும்பென்னும் இனியவராக கண்டவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் .... இப்படி நீ அண்ணலை அலட்சியம் செய்வதைத்தாங்குவாரா?

அடியார்கள் மனம் சற்றுவாடினாலும் நீதான் பொறுத்துக்கொள்ள முடியுமா? ஆகையினால் மகளே அரங்கனை மன்னித்து ஏற்று சேர்ந்திரு...

உன் சேர்த்தி வைபவமான, இன்றைய உத்திரத்திருநாளை வையகம் கொண்டாடட்டும்!” என்பதாக அருளினார்.

அன்னையின் மனம் சமாதானமாகிறது, அண்ணலை அன்னை நோக்க அவரும் அன்புடன் நோக்குக்கிறார் .


பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்....

அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!

கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.

அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே அந்த நாழி கேட்டான் வாசலிலேயே நடக்கிறது!

இந்த அனைத்தும் ஶ்ரீரங்கத்தின் கோவிலில் நடைபெறும்..கண் கொள்ளா கட்சிகள் ...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!

அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை.


கோவில் மட்டுமா ஊரே கொண்டாடும் திருவிழா இது...

இரவு முழுவதும் சேர்த்தி மண்டபத்தில் சேர்ந்து அருள்  புரிந்து , பிறகு விடிந்ததும் அன்னையை அவள் சந்நிதிக்கு அனுப்பிவிட்டு அரங்கன் கோரதம் ஏறி வீதி உலா வருவார்!..

772
அரங்கனே! தரங்கநீர் கலங்கஅன்று, குன்றுசூழ் * 
மரங்கள்தேயமாநிலம்குலுங்க மாசுணம்சுலாய் * 
நெருங்க, நீகடைந்தபோது நின்றசூரர் எஞ்செய்தார்? * 
குரங்கையாளுகந்தஎந்தை! கூறுதேறவேறிதே.

திருச்சந்தவிருத்தம் - 21
800


கொண்டைகொண்டகோதைமீது தேனுலாவுகூனிகூன்
உண்டைகொண்டு அரங்கவோட்டி உள்மகிழ்ந்தநாதனூர் * 
நண்டையுண்டுநாரைபேர வாளைபாய, நீலமே * 
அண்டைகொண்டுகெண்டைமேயும் அந்தணீரரங்கமே. (2)

திருச்சந்தவிருத்தம் - 49


801

வெண்திரைக்கருங்கடல் சிவந்துவேவ, முன்னோர்நாள் * 
திண்திறல்சிலைக்கைவாளி விட்டவீரர்சேருமூர் * 
எண்திசைக்கணங்களும் இறைஞ்சியாடுதீர்த்தநீர் * 
வண்டிரைத்தசோலைவேலி மன்னுசீரரங்கமே. 

திருச்சந்தவிருத்தம் -50தாயார்  திருவடிகளே சரணம் ...

ஓம் நமோ நாராயணாய நம!!
அன்புடன்
அனுபிரேம்...

4 comments:

 1. மட்டையடி உற்சவம் நேரில் பார்த்த மாதிரி இருந்தது நீங்கள் விவரித்த விதம்.
  அருமையான அழகான படங்கள்.

  ReplyDelete
 2. சிறப்பான வர்ணனை. இந்த முறை உற்சவம் நடக்கிறதா?

  படங்களும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. இல்லை வெங்கட் சார் ...இந்த வருடம் எந்த உற்சவமும் நடை பெறவில்லை ..

   Delete