25 April 2020

ஸ்ரீ முஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்.

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.மூலவர்   – ஸ்ரீ பூவராஹன்

உற்சவர் – ஸ்ரீயக்ஞவராஹன்

தாயார்   –  ஸ்ரீ அம்புஜவல்லித்  தாயார்

விமானம் - பாவன விமானம்

தல விருட்சம்  –அரசமரம்

தீர்த்தம்  –  நித்யபுஷ்கரணி

பழமை  –  1000 வருடங்களுக்கு முன்ஸ்தல வரலாறு-


ஜயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.


ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர்.

ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர்.

இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான்.

சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.

பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான்.

ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர்.

பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்த போது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது.அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தின் அளவை அதிகரித்து கொண்டே செல்வதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர்.

 பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர்.

இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார்.

பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது.

ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அற்புத  சக்தியினால் மிதக்க வைத்தார்.

கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான்.
அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது.

சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.

அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான்.

கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர்...

யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான்.

வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.


பிரம்மாவும் இதர தேவர்களும் அங்கு விரைந்து பூமழை பொழிந்தனர்.

ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது.
ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.


இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.  அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.

ஸ்ரீ பூவராகசுவாமி மேற்கு நோக்கியபடி  இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும்.


இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார்.பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரச மரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார்.

 பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீ பூவராகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

பகவான் திவ்யமான பன்றி ரூபத்தில்  வீற்றிருப்பதால் பெருமாளுக்கு  கோரைக் கிழங்கு  விசேஷமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து தயாரிக்கப்படும் முஸ்தாபிசூரணம் எனப்படும் தீரா நோய்களையும் தீர்க்கும் மருந்து மகாபிரசாதமாக இங்கு வழங்கப்படுகிறது.


பெரிய திருமொழி - இரண்டாம்பத்து
ஏழாம் திருமொழி – திவளும்


1108
திவளும்வெண்மதிபோல் திருமுகத்தரிவை
செழுங்கடலமுதினிநிலபிறந்த
அவளும் * நின்னாகத் திருப்பதும்அறிந்தும்
ஆகிலும்ஆசைவிடாளால் *
குவளையங்கண்ணிகொல்லியம்பாவை
சொல்லுநின்தாள்நயந்திருந்த
இவளை * உன்மனத்தால்என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே! (2)


1109

துளம்படுமுறுவல் தோழியர்க்குஅருளாள்
துணைமுலைசாந்துகொண்டுஅணியாள் *
குளம்படுகுவளைக் கண்ணிணைஎழுதாள்
கோலநன்மலர்க்குழற்குஅணியாள் *
வளம்படுமுந்நீர்வையம்முன்னளந்த *
மாலென்னும், மாலினமொழியாள் *
இளம்படியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!


1110

சாந்தமும்பூணும் சந்தனக்குழம்பும்
தடமுலைக்குஅணியிலும்தழலாம் *
போந்தவெண்திங்கள்கதிர்சுடமெலியும்
பொருகடல்புலம்பிலும்புலம்பும் *
மாந்தளிர்மேனிவண்ணமும் பொன்னாம்
வளைகளும்இறைநில்லா * என்தன்
ஏந்திழையிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!


1111

ஊழியின்பெரிதால்நாழிகையென்னும்
ஒண்சுடர்துயின்றதாலென்னும் *
ஆழியும்புலம்பும் அன்றிலும்உறங்கா
தென்றலும்தீயினிற்கொடிதாம் *
தோழியோ! என்னும்துணைமுலைஅரக்கும்
சொல்லுமின்என்செய்கேன்? என்னும் *
ஏழையென்பொன்னுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!  
ஸ்ரீ பூவராக சுவாமி திருவடிகளே சரணம்..
அன்புடன்
அனுபிரேம்

10 comments:

 1. பார்க்க ஆசைப்பட்ட, இதுவரை கோயில் உலாவில் பார்த்திராத கோயில். இப்பதிவு கோயிலுக்குச் செல்லும் எண்ணத்தை மிகுவித்தது. மகிழ்ச்சி.
  எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணி தொடர்பாக ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி ஐயா..போன மார்கழி மாதம் அப்பா சென்று வந்து விரிவாக கூறினார்...

   நாங்களும் செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் ஸ்தலம்...

   Delete
 2. இந்தக் கோவிலுக்குச் சில மாதங்கள் முன்பு சென்றிருந்தோம். அங்கிருந்த புஷ்கரணியில் குளித்துவிட்டு, பெருமாளைச் சேவித்தோம். இந்தக் கோவிலின் ஸ்பெஷலான முஷ்குரா(?) சூரணம் எனப்படும் கிழங்கு மாவில் செய்யும் லட்டுவைப் பற்றிக் குறிப்பிடவில்லையே.

  புஷ்கரணி கரையில்தான் தொட்டாச்சார்யார் (சோளிங்கர் ஊர் சம்பந்தப்பட்டவர்) அவர்களின் திருவரசு இருக்கிறதுல.

  அருமையான கோவில். சிற்பவேலைப்பாடுகள் நிரம்பியது. ஸ்வயம்வக்தத் தலத்தில் ஒன்று (திருப்பதியும் அப்படித்தான்)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்...

   பல முறை அப்பா சென்றிந்தாலும் ...நாங்கள் பொங்கல் விடுமுறையில் செல்ல எண்ணி இருந்தோம் , அருகில் சென்றும் அங்கு அங்கு செல்ல வில்லை...


   அடுத்த முறை பொறுமையாக சென்று சேவிக்கும் ஆசை உள்ளது...

   கோரைக் கிழங்கில் விசேஷமாக தயாரிக்கப்படும் முஸ்தாபிசூரணம் இங்கு விசேஷம் ....

   பதிவில் சேர்க்க எண்ணி இருந்தேன் ஆனால் விடுபட்டு விட்டது...இதோ சேர்த்து விடுகிறேன்...


   Delete
 3. இத்திருக்கோயிலுக்கு பத்தாண்டுகளுக்கு முன்
  புரட்டாசியில் வந்த தீபாவளியன்று
  சென்றிருக்கின்றோம் குடும்பத்தோடு...

  தஞ்சை திவ்ய தேசங்களாகிய
  மாமணிக் கோயில்களின் தல புராணத்துடன்
  இத்திருக்கோயிலும் சொல்லப்படுகின்றது...

  எம்பிரான் அருளாட்சி நடத்தும்
  அபிமானத் திருத்தலங்களுள்
  ஸ்ரீ முஷ்ணமும் ஒன்று....

  ReplyDelete
 4. Can you share the contact details of archakar there if have?

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும்....பட்டரின் தொலைபேசி எண்கள் ஏதும் எங்களுக்கு தெரியாது...

   Delete
 5. திவ்யதேசத்தை தரிசனம் செய்து இருக்கிறோம்.
  படங்களும், வரலாறும் அருமை.

  ReplyDelete