1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
அரசன் விஸ்வரதனின் மகன் க்ஷத்ரபந்து. க்ஷத்ரபந்து என்பது அவனது உண்மை பெயரல்ல, அது அவனது கீழ்மையான குணத்தினால் கொடுக்கப்பட்ட பெயர்.
உண்மை பெயர் தெரியவில்லை.
அவனது நடவடிக்கைகளை பொருட்படுத்த முடியாமல் அந்த நாட்டு பிரஜைகள் அவனை வனத்திற்கு துரத்தி அடித்தனர்.
வனத்தில் இருந்தும் அவன் மற்றவர்களை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
ஒருநாள் முனிவர் ஒருவர் வழி மறந்து க்ஷத்ரபந்து வசிக்கும் காட்டினுள் வந்து விட்டார்.
கடும் வெயிலினால் அவருக்கு தாகம் எடுத்தது.
அருகாமையில் ஒரு தடாகத்தை கண்டு, அங்கு நீர் அருந்த சென்ற அவர், கால்கள் வழுக்கி அதில் விழுந்தார்.
இதைக் கண்ட க்ஷத்ரபந்து எப்படியோ அவர் மீது இரக்கம் கொண்டு அவரை தடாகத்திலிருந்து காப்பாற்றினான். முனிவருக்கு சாப்பிட பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான், அவரது கால்களை பிடித்துவிட்டான்.
இளைப்பாறிய பின் அம்முனிவர் அவனை நோக்கி, "நீ யாரப்பா... ஏன் இந்த கானகத்தில் வசிக்கிறாய்?" என வினவினார்.
அதற்கு க்ஷத்ரபந்து, எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தன் வரலாற்றை உரைத்தான்.
அவனை திருத்தும் பொருட்டு அவனுக்கு நல்ல அறிவுரைகளை சொன்னார் முனிவர்.
"ஐயா... காமம், குரோதம், லோபம், மோகம் என்ற தீய குணங்களோடு பிறந்தவன் நான். அவை என்னை விட்டு விலகாது. என்னை நல்லவனாக மாற்றுவதால் எப்பலனுமில்லை." என்றான் க்ஷத்ரபந்து.
முனிவர் அவனுக்கு 'கோவிந்தா' என்ற இறைவனின் நாமத்தை சொல்லிக்கொடுத்தார்.
க்ஷத்ரபந்துவிடம் அவன் தொடர்ந்து தீய வழியில் சென்றாலும் இடைவிடாது இந்த நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கச் சொன்னார்.
அந்நாளிலிருந்து க்ஷத்ரபந்து ஒவ்வொருநாளும் இறைவனின் நாமத்தை எந்நேரமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதனால் அவன் மரணித்த பிறகு, மறுபிறப்பில் பிராமணனாக இறைவனின் பெரும் பக்தனாக பிறந்தான்.
இறைவனின் பாதங்களை அடையும் பாக்கியம் அதன் பிறகே அவனுக்கு கிட்டியது. அவனது கதையை தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன் திருமாலையில் பாடியிருக்கிறார்.
"மூன்றெழுத்தால் ஆன இறைவனின் பெயரை உச்சரிப்பதில் நேரம் செலவழித்தேனா க்ஷத்ரபந்துவைப் போல?" என்கிறாள் அந்த பெண்மணி.
திருவாய் மொழி -முதற் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்
பத்தாம் பாசுரம். முன் பாசுரத்தில் சொன்ன எம்பெருமானின் வ்யாப்தியினுடைய ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என: நிலம் விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து, எங்கும் பரந்துளன்: இவை உண்ட கரனே
2908 / 1.1.10
எம்பெருமான் எல்லாவிடமும் பரந்த குளிர்ந்த காரணஜலமான ஏகார்ணவத்தில் ஒவ்வொரு அணுவிலும் பெரிய இடமுடைய இந்த அண்டத்தில் இருப்பதுபோல சுருக்கம் இல்லாமல் இருக்கிறான்.
பூமியிலும், மேலுலகங்களிலும் ஒன்றுவிடாமல் மிக நுண்ணியதாய் மிகச்சிறிய இடங்கள் தோறும் இந்த இடங்களில் தானே ஒளிவிடக்கூடிய ஆத்மாக்கள் தோறும் மறைந்து எல்லாவிடத்திலும் வ்யாப்தனாயிருப்பவன், இந்தப் பொருள்களை ஸம்ஹார நிலையிலும் தனக்குள்ளே அடக்கிவைத்துக் கொண்டு தான் ஸ்திரமாய் இருந்தவன்.
10 .திருப்புள்ளம்பூதங்குடி
ஸ்ரீ பொற்றாமரையாள் ஸமேத ஸ்ரீ வல்வில்ராமாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
நன்றாக எழுதியிருக்கீங்க. இந்தத் தலைப்பு வரும்போது,
ReplyDeleteமொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்,*
இத்தனை அடியரானார்க்கு* இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே
திருமாலை பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று நினைத்தேன். இங்கு கத்திர பந்து என்று குறிப்பிடப்படுவது க்ஷத்திரபந்து.
இக்கதை இப்போது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteகீதா
கதை குறித்த தகவல்கள் மற்றும் பாசுரம் சிறப்பு. சிறப்பாக இருக்கிறது இந்தப் பதிவு.
ReplyDelete