04 June 2022

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






'முதலடி' இறைவனின் பாதத்தை குறிக்கிறது.

பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. கௌதம ரிஷியின் மனைவி. தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராட சென்றுவிடுவது வழக்கம்.

இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன் சேவல் போலக் கூவி விடிந்தாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். 

கௌதமரும், வழக்கம் போல நீராடச் சென்று விட்டார்.

அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரின் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான். அகல்யாவிற்கும், அது தன் கணவனில்லை எனத் தெரிந்தது. ஆனாலும், தன் கணவனின் ரூபத்தினால் அவள் அவனைத் தடுக்கவில்லை.

ஏதோ சந்தேகம் ஏற்பட கௌதமர் வீடு திரும்பினார். 

அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட, "கல்லாகக்க் கடவாய், அகல்யா! என்று ஒரு புனித ஆத்மாவின் கால் விறல் தீண்டலை பெருகிறாயோ அன்று நீ என்னோடு வாழலாம்" என சபிக்கிறார்.

 அதோடு இந்திரனுக்கு அவன் ஆண்மையை இழப்பான் என சாபமிடுகிறார். 

பின், கோபத்தின் உச்சியில் அந்த இடத்தை விட்டு நீங்கினார். 

பல ஆண்டுகள் உருண்டோடின.

ஒரு சமயம், விஸ்வாமித்திரர் தான் நடத்தும் வேள்வியைக் காக்க இராமரையும் இலக்குவனையும் அயோத்தியிலிருந்து அழைத்து வருகிறார்.

 அச்சமயம் தாடகையின் வதம் நிகழ்கிறது, விஸ்வாமித்திரரின் யாகமும் நேர்த்தியாய் முடிகிறது. 

தாடகையுடன் இராமர் நடத்திய போரில் அவர் 'கைவண்ணம்' கண்ட விஷ்வாமித்திரர், பின் அவர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்கிறார்.

கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமம் இருக்கும் வழியே அவர்கள் பயணித்தனர். 

அப்போது இராமரின் கால் பட்டு ஒரு பாறை மனித உருவமெடுக்கிறது.

 பெண்ணாக மாறினாள், அகல்யா.

 ஸ்ரீ இராமரின் தரிசனத்தினாலும் கருணையாலும் மகிழ்ந்து அவரை வணங்கினாள். 

அந்நேரம் அங்கே வந்த ரிஷி கௌதமர் அகல்யாவை ஏற்றுக்கொள்கிறார்.

இந்நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாமித்திரர், "கைவண்ணம் அங்கே கண்டேன்; கால்வண்ணம் இங்கே கண்டேன்!" என்று ஸ்ரீ இராமரை பாராட்டியிருக்கிறார்.





"அகலிகையைப் போல் இறைவனின் பாத தீண்டல் பெரும் பாக்கியம் பெற்றவளா நான்? எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி?" என்பதை "முதலடியைப் பெற்றேனா அகலிகையைப் போலே" என்று உரைத்தாள் அப்பெண்.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்


பதினொன்றாம் பாசுரம் - இதுவரை விளக்கிய பர்த்வத்தை சுருங்கச் சொல்லி இத்திருவாய்மொழிக்குப் பலம் மோக்ஷமாக அருளிச்செய்கிறார்.


கர விசும்பு  எரி, வளி, நீர், நிலம் இவைமிசை

வரன் நவில், திறல்,வலி, அளி பொறை ஆய்நின்ற

பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்

நிரல் - நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே 

2909 / 1.1.11


மறைந்து இருக்கும் ஆகாசம், அக்னி, வாயு, ஜலம், பூமி ஆகிய இவற்றை இருப்பிடமாகக்கொண்ட, மேலும் இவற்றுக்குத் தன்மைகளாக உள்ள உயர்ந்ததான சப்தம், எரிக்கும் தன்மை, வலிமை, குளிர்த்தி, பொறுமை ஆகிய இந்தப் பொருள்களும் அவற்றின் தன்மைகளும் எல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி (சரீரமாம்படி) நின்ற ஸர்வேச்வரனுடைய திருவடி விஷயமாக, திருநகரியைப் பிறப்பிடமாக உடையராய், எதிர்வாதம் செய்பவர்களை வெல்லும் தன்மையையுடையவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய் பொருத்தமாக நிறைந்திருக்கும் ஆயிரம் பாசுரங்களுக்குள், இந்தப் பதிகம், எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்டன. இவை மோக்ஷத்தை அளிக்ககூடியவை.








11 .திருஆதனூர்

ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ஆண்டளக்குமையன் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


1 comment:

  1. சிறப்பான கட்டுரை. சேர்த்திருக்கும் படங்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete