13. "ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே"
திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊர் . பல முனிவர்கள் வாழ்ந்த இத்தலத்தில் பார்கவ மகாமுனிவர் தவமேற்கொண்டார்.
அப்பொழுது கனகாங்கியால் அவர் தவம் குலைந்தது. கனகாங்கியின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் அவர்கள் புணர்ந்து ஒரு பிண்டத்தை ஈன்றனர். அந்த பிண்ட வடிவமான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டு விட்டு அகன்று விட்டனர் இருவரும்.
கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் அந்தக் குழந்தையின் மீது கருணை கொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணனாக்கினாள்.
திருமழிசை என்ற ஊரில் பிறந்ததால் திருமழிசை ஆழ்வார் என்று பெயர் ஏற்பட்டது.
பின் திருமழிசை ஆழ்வார் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார்.
கணிகண்ணன் ஆழ்வாரையே தன் குருவாகக் கொண்டு ஆசிரமத்தில் ஆழ்வாருக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்துகொண்டு இருந்தான்.
ஆசிரமத்தில் தினமும் ஒரு வயதான மூதாட்டி பெருக்கி மொழுகி, கோலம் போட்டு சுத்தம் செய்யும் பணி செய்து வந்தாள்.
ஒரு நாள் ஆழ்வார் தியானத்தில் இருக்கும் போது இவள் பெருக்கிய சத்தம் கேட்டு கண் திறந்து மூதாட்டி பெருக்குவதைப் பார்த்தார்.
“தினமும் சுத்தம் செய்வது நீங்களா ?” உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்றார்.
அதற்கு அந்த மூதாட்டி “வயதாகிவிட்டது முன்பு போல இப்போது வேலை செய்ய முடிவதில்லை. உங்களுக்கு என்றும் பணி செய்ய வேண்டும் என்பது என் ஆசை” என்றாள்.
ஆழ்வார் “என்றும் இளமை மாறாமல் இருப்பாயாக” என்று ஆசிர்வதித்தார்.
உடனே அந்த மூதாட்டி இளம் பெண்ணாக மாறினாள்.
அந்த நாட்டுப் பல்லவ மன்னன் அவள் மீது ஆசைப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
வருடங்கள் கடந்தது, அந்தப் பெண் ஆழ்வார் ஆசீர்வாதத்தால் இளமையாக இருக்க மன்னனுக்கு வயோதிகனாகிப் போனான்.
ஒரு நாள் அரசியிடம் எப்படி இளமை மாறாமல் இருக்கிறாய் என்று கேட்க தன் கதையைக் கூறினாள்.
மன்னன் கணிகண்ணனை அழைத்து ஆழ்வாரை அழைத்து வரச் சொன்னான்.
கணிகண்ணன் எதற்கு என்று கேட்க அதற்கு மன்னன் “ஆழ்வாரை அழைத்து என்னைப் பற்றிப் பாடினால் எனக்கு இளமை திரும்பும்” என்று காரணத்தைக் கூறினான்.
கணிகண்ணன் ஆழ்வார் மானிடர்களைப் பாட மாட்டார் என்று கூற, அப்படி என்றால் நீ பாடு என்று மன்னன் வற்புறுத்தினான். அதற்கு கணிகண்ணன் நானும் என் குருநாதர் மாதிரி மானிடர்களை பாட மாட்டேன் என்று கூற மன்னனுக்குக் கோபம் வந்து என் நாட்டில் உனக்கு இடம் இல்லை கிளம்பு என்றான்.
கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.
என் சீடன் இல்லாத நாடு எனக்கும் தேவை இல்லை என்று புறப்பட்டார்.
போகும் வழியில் திருவெஃகா திவ்ய தேசம் வர பெருமாளைப் பார்த்து, கணிகண்ணன் போகிறான், நானும் அவனைத் தொடர்ந்து போகிறேன், நீயும் கிளம்பு என்று சொல்ல உடனே பெருமாள் தன் ஆதிசேஷனாகிய பாம்பைச் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
காஞ்சி மாநகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டது.
மன்னன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, ஆழ்வார் பெருமாளுடன் ஊர் திரும்பினார்.
“சாமி, திருமழிசை ஆழ்வார் போல நான் எல்லா மதங்களையும் ஆராய்ந்து திருமாலே முழுமுதற் கடவுள் என்ற உண்மைப் பொருளைக் கூறவில்லை, அதனால் நான் கிளம்புகிறேன்” என்றாள் திருக்கோளூர் பெண்மணி.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய் மொழி -முதற் பத்து
1 - 2. வீடுமின் முற்றவும்
ஐந்தாம் பாசுரம் - வணங்கப்படும் எம்பெருமான் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது அது மன் உறில் அற்று இறை பற்றே
2914
மற்ற விஷயங்களில் பற்று விடப்பட்டவுடனே ஆத்மா கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றதாகும். அந்த எண்ணத்தையும் விட்டு பகவத் விஷயத்தைப் பற்றப் பார்க்கில் மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு ஈச்வரனைப் பற்று.
ஆறாம் பாசுரம் - வணங்கப்படும் எம்பெருமான் எல்லோரிடமும் ஸமமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
பற்று இலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன் முற்றில் அடங்கே
2915
ஸர்வேச்வரனாக இருந்தும் தன் விருப்பத்துக்கு விஷயமானவர்களில் பற்றைவிட்டு நம் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபட்டு நின்றான். நீயும் ஸம்ஸார ஸங்கத்தை விட்டு அவனுடைய எல்லா விஷயங்களிலும் முழுகப்பார்.
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
No comments:
Post a Comment