12 June 2022

வைகாசி விசாகம் --- முருகப் பெருமான் தரிசனம் ...


 
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார்.



சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகமாக (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.


சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம்.




முருகப்பெருமானின் 16 பெயர்கள் ...

ஞானசக்த்யாத்மா- ஞானவேலை உடையவன்; ஞானஸ்வரூபன்.

ஸ்கந்தன்- ஒன்று சேர்ந்தவன்; ஆதாரமானவன்; எதிரிகளை அழிப்பவன்.

அக்னிபூர்- நெருப்புப் பிழம்பு.

பாஹுலேயன்- வீரம் மிகுந்த கைகளை உடையவன்.

காங்கேயன்- கங்கையின் புதல்வன்.

சரவணோத்பவன்- சரவணப் பொய்கையில் உதித்தவன்.

கார்த்திகேயன்- கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டவன்.

குமாரன்- குழந்தையாயிருப்பவன்.

ஷண்முகன்- ஆறு முகங்களை உடையவன்.

குக்குடத்வஜன்- சேவல் கொடியோன்.

சக்திதரன்- சக்திவேலை ஏந்தியவன்.

குஹன்- சித்தக் குகையில் இருப்பவன்.

பிரம்மச்சாரி- பிரம்மத்தில் லயிப்பவன்; சுப்பிரமணியன்.

ஷாண்மாதூரன்- ஆறு மாதர்களைத் தாயாகப் பெற்றவன்.

க்ரௌஞ்சபித்- கிரௌஞ்ச மலையை அழித்தவன்.

சிகிவாகனன்- மயில்வாகனன்.



"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.

ச- லட்சுமி கடாட்சம்.
ர- சரஸ்வதி கடாட்சம்.
வ (ஹ)- போகம், மோட்சம்.
ண- சத்ரு ஜெயம்.
ப- மிருத்யு ஜெயம்.
வ- நோயற்ற வாழ்வு.

எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து மகிழ்வோம்....







அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த  கந்தர் அனுபூதி ...


செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவா னிறவான்

சும்மா இருசொல் லறவென் றலுமே

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12


செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை, வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற கள்வனும், மிகப் பெரியவனும், பிறப்பும் இறப்பும் இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய், என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம் ஒன்றையும் அறியாது நின்றேன், இது என்ன ஆச்சரியம். ..



முருகன் தனிவேல் முனிநங் குருவென்

றருள்கொண் டறியா ரறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13


உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று, இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியாகிய பொருளும் அன்று, என்று சொல்லும் தன்மையில் உள்ள அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும், ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும், நமது பரம குரு என்றும், அப்பரமனது திருவருளைக் கொண்டு அறியாமல், மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது. ..



கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்

ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14


ஏ மனமே, உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய, ஐம் பொறிகளின் வழியே செல்லும் ஆசைகளை, முற்றிலும் ஒழித்து விடு (அதனால்), திருக் கரத்தில் விளங்கும் ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய, முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று, உயர்வு பெற்று வாழ்வாய். ..












முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....


அன்புடன்
அனுபிரேம்.....

No comments:

Post a Comment