16 April 2022

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே...

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே



கண்ணன் மாடு மேய்க்கச் செல்லும் போது, யசோதை கட்டுச்சோறு கொடுத்து அனுப்புவாள். கண்ணனும் மாடு மேய்த்து விட்டு அனைவருடனும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாஞ்சோறு உண்பான்.

அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் மாடுமேய்க்கச் செல்லும்போது, அவன் மறந்தானா, அல்லது தாய்மார்கள் வேலை மும்முரத்தில் மறந்தார்களா எனத் தெரியவில்லை. 

அன்றைக்குக் கட்டுச் சோறு எடுத்துப் போகவில்லை. 

மாடுகளை மேய்த்துவிட்டு, உச்சி வேளையில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அனைவரும் ஒதுங்குகிறார்கள். கழியில் கட்டி வரும் மூட்டை காலியாகத் தொங்குகிறது. 

பசி வயிற்றைக் கவ்வுகிறது. 

அப்போது, அருகில் உள்ள ரிஷிகளின் ஆசிரமத்தில் ஹோமம் வளர்க்கும் ஓசை கேட்கிறது. கண்ணன் தனது கூட்டாளிகளை அனுப்பி, உணவு யாசித்து வரச் சொல்கிறான். யாகம் முடிய மாலை ஆகிவிடும் என்றும், அதுவரையில் காத்திருக்குமாறும் ரிஷிகள் கூறிவிட்டனர். சிறு பிள்ளைகளுக்குப் பசி பொறுக்குமா?

ஆனால், திரும்பத் திரும்பப் போய்க் கேட்கப் பிள்ளைகளுக்குச் சங்கடம். 

யாசிப்பவன்னுக்கு எது அவமானம் என்று கிருஷ்ணன் அவர்களை மீண்டும் அனுப்புகிறான்.

ரிஷிகளின் ஆசிரமத்துக்கு அருகில் அவர்களுடைய இல்லங்கள் உள்ளன. 

தளிகை வேலைகளை ரிஷிபத்தினிகள் பார்த்துக் கொண்டிருப்பர். அவர்களிடம் போய், பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் பசிக்கிறது என்று உணவு கேட்டு வாருங்கள்' என்கிறான் கண்ணன்.

ரிஷிபத்தினிகளிடம் சென்று, கண்ணன் கூறியது போல சொன்னவுடன், வீட்டில் உள்ள பாண்டங்களை மூட்டை கட்டி எடுத்துவருகிறார்கள் கண்ணன் இருக்கும் இடத்திற்கு.

இது போதாதா கண்ணனுக்கு? உடனே, தனது சிநேகிதப் பட்டாளத்துடன் வந்து, வயிறார உண்கிறான்.

அப்போது ரிஷிபத்தினிகள், 'அப்பா! உனக்குத் தெரியாதது இல்லை. ஹோமம் பண்ணி, அக்னி மூலமாக அந்தப் பரம்பொருளுக்கு நைவேத்தியம் படைத்த பின்னரே மற்றவர் உண்ணவேண்டும். ஆனால், நீ உணவு கேட்டபோது அந்த பகவானே கேட்டதைப் போல் இருந்ததால் நாங்கள் மறுக்கவில்லை. இந்த விஷயம் ரிஷிகளுக்குத் தெரிந்து விட்டால், நாங்கள் அவர்களுடைய சாபத்திற்கு ஆளாவோம். ஆதலால், அவர்களுக்கு விஷயம் தெரியாமல் நீ தான் காப்பாற்ற வேண்டும், கண்ணா' என்று சொன்னார்கள். 

கண்ணனும், "உங்கள் கணவர்களுக்கு உதவி செய்ய யாகசாலைக்கு திரும்புங்கள். பயம் கொள்ள வேண்டாம், அவர்கள் உங்களை ஏற்பார்கள்" என்று அனுப்பி வைக்கின்றான்.

ரிஷி பத்தினிகள் யாகம் நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார்கள். 

ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், ஒரே ஒரு ரிஷி மட்டும் தன் மனைவியை ஏற்க மறுக்கின்றார்.

ஏமாற்றமடைந்த அந்த ரிஷிபத்தினி, 'நான் உணவை மட்டும் இல்லை என்னையே சமர்ப்பிக்கின்றேன், கண்ணா! இவரோடு கர்ம பந்தம் கொண்ட என்னுடைய இந்த தேகத்தை மாய்த்து எனக்குப் நிரந்தர விடுதலை கொடுப்பாய்!' என்று கூறி, உயிர் விடுகிறாள். 

அதிர்ச்சிக்குள்ளான ரிஷிகள் கிருஷ்ணரை தேடி ஓடினர்.

 கண்ணன் அந்த பெண்மணிக்கு முக்தியைக் கொடுத்ததாகச் சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. கண்ணன் உணவுக்காக அமர்ந்திருந்த அந்த இடம் பத்தவிலோச்சனம் என்று அழைக்கப்படுகிறது.

இதனை மனதில் கொண்டே 'தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே?' 

ரிஷிபத்தினியைப் போல நான் இதயத்தை கொடுத்து தேகத்தை தியாகிக்கவில்லையே,

நான் ஏன் இவ்வூரில் வசிக்க வேண்டும்? என்று இராமானுஜரான உடையவரிடம் கேட்கிறாள், அந்த பெண்மணி.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்

நான்காம் பாசுரம் - எல்லாப் பொருள்களினுடைய ஸ்வரூபம் எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

ஸாமாநாதிகரண்யம் என்பது வேறுபட்ட பல தன்மைகள் ஒரே பொருளை ஆதாரமாகக் கொண்டு இருப்பது. ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் என்றும் விளக்கப்படும்.


நாம் அவன் இவன் உவன், அவள் இவள் உவள் எவள்

தாம் அவர் இவர் உவர், அது இது உது எது

வீம் அவை இவை உவை, அவை நலம், தீங்கு அவை

ஆம் அவை, ஆயவை, ஆய் நின்ற அவரே

4    2902


(மேலே காட்டப்படும் பல விதமான வஸ்துக்களைப் பார்க்கும்) தாமும், தூரத்தில் இருப்பவனும், அருகில் இருப்பவனும், நடுவில் இருப்பவனும், தூரத்தில் இருப்பவளும், அருகில் இருப்பவளும், நடுவில் இருப்பவளும், எவள் என்று கேட்கப்படுபவளும், கௌரவம் உடையவரும், அவர்களில் தூரத்தில் இருப்பவரும், அருகில் இருப்பவரும், நடுவில் இருப்பவரும், தூரத்தில், அருகில் மற்றும் நடுவில் இருக்கும் அஃறிணைப் பொருளும், எது என்று கேட்கப்படும் பொருளும், அழியக்கூடிய தாழ்ந்த பொருள்களும், தூரத்தில், அருகில், நடுவில் இருக்கும் பொருள்களும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த தர்மங்களும், வரப்போகும் மற்றும் வந்திருக்கும் எல்லாப் பொருள்களுமாய் தாமேயாய் நின்ற எம்பெருமான் இவற்றை எல்லாம் தன் அதீனத்தில் வைத்துள்ளான்.









  

04 - திருவெள்ளறை

ஸ்ரீ பங்கஜவல்லீ ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 

அனுபிரேம்  💕💕

இரகசியம் தொடரும்...

No comments:

Post a Comment