திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
திருக்கோளூர் பெண் பிள்ளை அக்ரூரர் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்....
அக்ரூரர் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர். இருந்தாலும், அவருடைய உத்தியோகம் எல்லாம் கம்சனின் அரண்மனையில் தான். கம்சனோ கிருஷ்ணரை எந்நேரத்திலும் கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
அவருடைய அரண்மனையில் உத்தியோகம் பார்ப்பது என்றால் முரண் தானே. வயிற்றுப் பிழைப்பு கம்சனிடமும், சிந்தனை கண்ணனிடமும் இருந்தது அக்ரூரருக்கு.
அந்த கண்ணனைக் கொல்வதற்கு கம்சன் ஒரு திட்டம் தீட்டுகிறான்.
ஒரு விழா ஏற்பாடு செய்தான். அதற்குக் கண்ணனை அழைத்துக் குவலயாபீடம் என்ற மத யானையை விட்டு அழித்துவிடலாம் என்று முடிவு செய்தான்.
இதிலும் கண்ணன் தப்பிவிட்டால் ? இன்னொரு திட்டம் வைத்திருந்தான்.
சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களைக் கொண்டு மல்யுத்தத்தில் கொன்றுவிடலாம் என்ற இன்னொரு அதி பயங்கரமான திட்டம்.
அதற்கு யாரை தூதுவாக அனுப்புவது? என்று யோசித்து, அக்ரூரரை, அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொல்றான்.
அக்ரூரருக்கோ ஒரே சந்தோசம்!
கிருஷ்ணனை கொல்லத்தான் அழைத்துவரச் செல்கிறோம் என்று தெரிந்தும் - கிருஷ்ணரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறதே! கிருஷ்ணனின் அருகில் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் போகிறதே! என்று சந்தோசத்தோடு இருக்கிறார்.
ரதத்தில் போகும்போது கண்ணனின் நினைவாகவே இருந்தார்.
கண்ணன் என்ன நிறத்தில் உடை அணிந்திருப்பான் ? அவன் பீதாம்பரம் எப்படி இருக்கும் ? தலையில் மயில் பீலி எப்படி காற்றில் அசையும் ? கண்ணனைப் பார்த்து என்ன பேசலாம் ? என்று யோசித்துக்கொண்டு வரும் வழியில் கண்ணனின் பாத சுவடுகள் மண்ணில் தெரிந்தது. உடனே ரதத்தை நிறுத்திக் கீழே இறங்கினார். பாத சுவடுகள் இருந்த மண்ணில் புரண்டார். ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மீண்டும் கண்ணன் நினைவு வர, ரதத்தை வேகமாக ஓட்டினார், கோகுலத்தில் நுழைந்தவுடன் சாலைகளில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் கோகுலத்தில் எல்லோர் மனதிலும் கண்ணனே இருந்தான். அக்ரூரர் சந்தை வழியே ரதத்தில் வரும் போது
பழம் விற்பவர் பழத்தைக் காண்பித்து “கொஞ்சம் கோவிந்தாவை வாங்கிக்கொண்டு போங்க” என்றார். பூக்காரி “ஒரு கொத்து கேசவனை வாங்கிக்கோங்க” என்றாள்.
அக்ரூரருக்கு கண்ணனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது. ரதத்தை இன்னும் வேகமாக ஓட்டி நந்தகோபலான் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். ரதத்திலிருந்து குதித்து, நந்தகோபாலன் இல்லத்தில் எல்லா அறைகளிலும் கண்ணனைத் தேடினார்.
கண்ணனைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளினார். கண்ணன் அக்ரூரை பார்த்தவுடன் குடுகுடு என்று ஓடி வந்தான். அக்ரூரர் கண்ணனைக் கட்டித் தழுவிக்கொண்டார். கண்ணனின் புன்னகை அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.
கண்ணனிடம் விஷயத்தைச் சொன்னார். கண்ணன் சிரித்துவிட்டு “அதுக்கு என்ன தாராளமா வருகிறேன்” என்று பலராமனுடன் அக்ரூரரின் ரதத்தில் மதுராவிற்கு புறப்பட்டனர்.
கண்ணனும் பலராமனும் சின்னக் குழந்தைகள். அதனால் அக்ரூரருக்கு மனதின் ஓரத்தில் இவர்களுக்குக் கம்சனால் என்ன தீங்கு வருமோ என்று பயந்தார்.
போகும் வழியில் யமுனை ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. . அக்ரூரர் குளித்துவிட்டு பூஜை செய்ய விரும்பினார். குளிக்கும் போது இந்தக் குழந்தைகள் கீழே இறங்கி யமுனையின் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டால் ?
“கண்ணா, பலராமா… நான் குளித்துவிட்டு வருகிறேன். இங்கேயே ரதத்தில் இருக்க வேண்டும் கீழே இறங்கக் கூடாது சரியா ?” என்று இறங்கி நதிக்குச் சென்றார். ஆனால் உள்ளூர அவருக்குப் பயம் இருந்தது. தண்ணீரில் மூழ்கினார்.
இதை அறிந்த கண்ணன் அக்ரூரரின் பயத்தைப் போக்க நினைத்தான்.
அதனால்,
தண்ணீருக்குள் பலராமன் பல தலைகளுடன் கூடிய ஆதிசேஷனாகத் தரிசனம் கொடுத்தார் ஆதிசேஷன் மடியில் கண்ணன்!
“கண்ணன் எப்படி காட்சி கொடுத்தான் தெரியுமா ?” என்று முகத்தில் பூரிப்புடன் அந்த குட்டி பெண் கேட்க
“இதையும் நீயே சொல்லிவிடு” என்றார் ராமானுஜர்.
“ சங்கு சக்கரங்களுடன், முத்து, மாணிக்க மாலையுடன், மஞ்சள் பீதாம்பரம், தலையில் மயில் பீலி … உடனே அக்ரூரர் நீரிலிருந்து எழுந்து ரதத்தைப் பார்த்தார். அங்கே கண்ணனும் பலராமனும் சமத்தாக உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள்.
மீண்டும் நீரில் மூழ்கினார். மீண்டும் ஆதிசேஷன்.. மடியில் கண்ணன். வெளியே பார்த்தால் ரதத்தில் கண்ணனும் பலராமனும்… அக்ரூரருக்கு பயம் நீங்கியது.
கண்ணனே நாராயணன் ...
அவனே எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று புரிந்தது.
இந்த அக்ரூரர் போல் கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் நான் இல்லையே, அதனால் ஊரை விட்டுப் போகிறேன் என்கிறாள் அப்பெண் பிள்ளை.
திருவாய் மொழி -முதற் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்
இரண்டாம் பாசுரம். “யவன்” என்று சொன்ன எம்பெருமானின் ஸ்வரூபத்தினுடைய தனித்துவம் வாய்ந்த பெருமையை அருளிச்செய்கிறார்.
மனம் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும்
மனம் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர், முழுநலம், எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன், எனன் உயிர், மிகுநரை இலனே
மனஸ்ஸிலிருந்து மலமான காமம் க்ரோதம் முதலியவை கழிய,
அதனால் மலர்ந்து மேலே வளரக்கூடியதான ஞானத்தாலே அளவிடமுடியாத நிலையிலும் ஆத்மாவைவிட உயர்ந்தவனாக இருப்பவனாய்,
வெளிப் புலன்களுக்கு விஷயமான அசித்தைவிட உயர்ந்தவனாய்,
இப்படி சேதனாசேதனங்களை விட உயர்ந்தவனாய், ஞானம் மற்றும் ஆனந்தத்தை அடையாளமாக உடையவனாய்,
எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத்திலும் தனக்கு ஒப்பாகவோ,
தன்னைவிட உயர்ந்தோ வேறொன்று இல்லாதவன்
எனக்கு உயிராக இருக்கிறான்.
02 -திருக்கோழி - ஸ்ரீ வாஸலக்ஸ்மி ஸமேத ஸ்ரீ அழகியமணவாள ஸ்வமினே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...அன்புடன்
அனுபிரேம் 💕💕
விரிவான விளக்கங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteகதையுடனான விவரங்கள். சூப்பர் அனு
ReplyDeleteகீதா
படங்களும் விளக்கங்கள் எல்லாமே நன்று. இது வரை அறிந்ததில்லை
ReplyDeleteமிக்க நன்றி
துளசிதரன்
very nice and we were not aware of this story. please upload the other lines of this paasuram with pictures.
ReplyDelete