24 April 2021

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்





 பரந்தாமனான இறைவன் ஸ்ரீமந்நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்து தன் பக்தனான அர்ச்சுனனுக்கு அருளியது பகவத்கீதை. 

அடியாரான பெண், ஆச்சாரியாருக்கே அருளியது 81 வாக்கியங்கள். 

ஆச்சாரியார் யார் என்று தெரியுமா? எம்பெருமானார் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ இராமானுஜர். அத்தகைய மகான் வாழ்ந்த காலத்தில் நடந்த உண்மையான நிகழ்வு தான் இந்த "திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம்". 






திருக்கோளூரின் சிறப்பு 

108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்வியதேசங்களில் ஒன்றான திருக்கோளூர், 12 ஆழ்வார்களுள் நம்மாழ்வார் என்ற ஆச்சாரியானையே பின்பற்றி வைகுண்டம் சென்ற மதுரகவியாழ்வார் அவதரித்த திருத்தலம் ஆகும். 

இங்கே எழுந்தருளியுள்ள எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் திருநாமம் "வைத்தமாநிதி பெருமாள்". 

இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார், 'இத்திருத்தலத்தை எல்லோரும் விரும்பி வந்து சேருவார்கள்’ என்று மகிழ்ந்து போற்றுகிறார். 



திருக்கோளூருக்கு அருகில் அமைந்திருக்கும் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் தம்முடைய மங்களாசாசனத்தில்,


'உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்

திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!’  (3293)

என்று ஒரு தாயின் நிலையில் தம்மை இருத்திக்கொண்டு  பாடியிருக்கிறார்.

'தலைவனாகிய கண்ணனிடம் காதல் கொண்டவளாக என் மகள் இரவு முழுவதும் திருக்கோளூர் என்ற ஊரின் பெயரையே கூறிக்கொண்டிருக்கிறாள். விடியற் பொழுதில் எழுந்து பார்த்தால் என் மகளைக் காணவில்லை. என் மகள் நிச்சயம் திருக்கோளூர் தான் சென்றிருப்பாள். 

என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் மகள், அவனுடைய கல்யாண குணங்களையும், அவன் அருள் வளமுடன் வாழும் ஊரையும் கேட்டு அறிந்துகொண்டு சென்றுவிட்டாள். அப்படி இளம் மானைப் போன்ற என்னுடைய செல்வ மகள் சென்று தன் புகுந்த வீடாகக் கொண்ட அந்த ஊர் திருக்கோளூர்தான் என்பதை நான் அறிந்துகொண்டேன்.’

இப்படியெல்லாம் ஒரு தாயின் மனநிலையில் இருந்து பாசுரங்கள் பாடியிருக்கிறார் நம்மாழ்வார்.


வைத்தமாநிதி பெருமாள்


இப்படி நம்மாழ்வாரால் போற்றப்பட்டு இருக்கும் திருக்கோளூர் திருத்தலத்தை விட்டு எவரேனும் வெளியேற விரும்புவார்களா?.....

ஒரு பெண்ணுக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றியது என்று சொன்னால், நமக்குச் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. அதேநேரம், அந்தப் பெண் மனத்தில் எழுந்த இந்த எண்ணம் காரணமாகவே நமக்கு அற்புதமான ஒரு பக்தி இலக்கியமும் கிடைத்திருக்கிறது. அதுதான் 'திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம்’.

இந்த ரகசியம் வெளிப்பட்ட சம்பவம், ஸ்ரீ இராமானுஜரின் காலத்தில், அவருடைய முன்னிலையில் தான் நடந்தது. ரகசியம் வெளிப்பட்டாலும்கூட, அது மறைபொருள் கொண்டதாகவே திகழ்கின்றது.

இராமானுஜருக்கு நம்மாழ்வாரிடத்தில் தனி ப்ரீதியும் பக்தியும் இருந்தது. 

காரணம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே பல திவ்வியதேச பெருமாள்களின் தரிசனம் கிடைக்கப்பெற்று, மங்களாசாசனம் செய்த பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார் மட்டுமே!.

அவர் அவதரித்த ஆழ்வார்திருநகரி திருத்தலத்தை தரிசித்து வணங்கிய பின்னர் இராமானுஜர், 'எல்லோரும் விரும்பிப் புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப் பெற்ற திருக்கோளூருக்குச் செல்கிறார்.

அவர் திருக்கோளூர் திருத்தலத்தில் பிரவேசிக்கப் போகும் அதே வேளையில், ஒரு பெண் அந்த ஊரில் இருந்து வெளியேறிச் செல்வதைப் பார்க்கிறார். 

அதைக் கண்டு வியப்புற்றவராய் ஸ்ரீ இராமானுஜர்  அந்தப் பெண்ணிடம், ''பெண்ணே, நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? இந்த ஊருக்கு வருவதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி இருக்க, ஏதோ ஓர் ஊரில் இருந்து உன்னுடைய புண்ணியத்தின் பயனாக, எல்லோரும் விரும்பி வந்து சேரும் இந்த ஊருக்கு வந்துவிட்டாய்.  தொடர்ந்து இங்கேயே வசிக்காமல் வேறு ஊருக்குச் செல்வதன் காரணம் என்ன?" என்றெல்லாம் அப்பெண்மணியைப் பார்த்துக் கேள்விகள் கேட்டார் உடையவர்.

அதற்கு அப்பெண்ணோ எம்பெருமானாரிடம் "ஐயனே! தாங்கள் உரைப்பது போல் நான் எங்கோ இருந்து இங்கு வரவில்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும் எல்லாம் இவ்வூரில் தான். எல்லோரும் விரும்பிப் புகும் ஊர், எனக்கு மட்டும் வாழத்தகுதி இல்லாத ஊராகிவிட்டது. அதனால் தான் நான் இந்த ஊரை விட்டுச் செல்கிறேன் என்று கூறுகிறாள் அப்பெண்மணி.

எல்லோரையும் வாழ வைக்கும் இவ்வூர், உனக்கு மட்டும் எப்படி வாழத் தகுதி இல்லாத ஊராக அமைந்தது? என்று கேட்கிறார் எம்பெருமானார்.


நீங்கள் கூறுவது வாஸ்தவம் தான். 


வந்தோர்க்கு நவநிதிகளையும், மோட்சத்தையும் கொடுத்து வாழ வைக்கும், இவ்வூரில் எனக்கு வாழ என்ன தகுதி இருக்கிறது? என்று 81 வாக்கியங்களை உதாரணமாகச் சுட்டிக் காட்டி தன் கருத்தை விளக்கினாள்.


ஒரு சாதாரண பெண் என்று கூட பாராமல், அவளிடம் இருக்கும் பக்தியைக் கண்டு தான் உயர்ந்தவன், வயதில் பெரியவர் என்று கூட பாராமல் அப்பெண்மணியிடம் நீண்ட நேரம் உரையாடி, அவள் கூறும் காரணத்தையும் 81 வாக்கியங்களின் அர்த்தத்தையும் பொறுமையாக கேட்டறிந்து, 

அவளது பக்தியை  மெச்சி, யாருடைய வீட்டிலும் உணவருந்தாத உடையவர் ,

அப்பெண்ணின் பக்தியைக் கண்டு வியந்து, 

அப்பெண்மணியை சமைக்கச் சொல்லி அவள் வீட்டில் போஜனம் உண்டு, எம்பெருமான் சன்னதிக்கும் சென்று வைத்தமாநிதி பெருமாளைத் தரிசித்தார்.


அப்பெண்மணி கூறிய 81 வாக்கியங்களும் மறைபொருள் ரகசியமாகவே சொல்லப்படுகிறது. அவற்றைச் சுருங்கச் சொல்லி கூறியது, அப்பெண்ணின் ஞான அறிவையும் விளக்குகிறது. அதனால் தான்  வைணவப் பெரியோர்கள் இதனை முக்கியமான ஒன்றாகப் போற்றுகிறார்கள்.


1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!

2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!

3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போலே!

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!

7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!

9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!

10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!

11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!

12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!

13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!

14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!

15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!

16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!

17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!

18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!

19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!

20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!

21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே

22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!

23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!

24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!

25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!

26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!

27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!

28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!

29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!

30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!

31.குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே!!

32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!

33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!

34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!

35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!

36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!

37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!

38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!

39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே!

40.அடி வாங்கினேனோ கொங்கிற்  பிராட்டியைப் போலே!

41.மண்பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே!

42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!

43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!

44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!

46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!

47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!

48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!

49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!

50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!

51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!

52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!

53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!

54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!

55.இருகையும் விட்டேனோ திரெளபதியைப் போலே!

56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே!

57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!

58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!

59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!

60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!

61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!

62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!

63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!

64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!

65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!

66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!

67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!

68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!

69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!

70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

71.சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!

72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!

73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!

74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!

75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!

76.நீரில் குதித்தேனோ கணப்புரத்தாளைப் போலே!

77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!

78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!

79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!

80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வறவுயர்நலம்

எம்பெருமான் திருவடிகளிலே நிச்சலுடிமைசெய்ய ஆழ்வார் தம் திருவுள்ளத்துக்கு அறிவுறுத்தல்



உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே. 


1 2675



மற்ற உயர்த்திகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யுமளவுக்கு உயர்ந்ததான ஆனந்தம் முதலிய கல்யாண குணங்களையுடையவன். சாஸ்த்ரத்தில் பரதெய்வமாகக் காட்டப்பட்ட அவன் என்னுடைய அறியாமை முழுவதும் அழியும்படி இயற்கையான ஞானம் மற்றும் ப்ரேமத்தை எனக்கு அருளினான். அவன் மறதி போன்ற குறைகள் இல்லாத நித்யஸூரிகளுக்குத் தலைவனானவன். நம் துயர் போகும்படி அவனுடைய மிகவும் ஒளிவிடக்கூடிய திருவடிகளைக் குறித்துத் தொண்டு செய்து, என் மனஸ்ஸே! உஜ்ஜீவனத்தைப் பெற்று எழு.


ஸ்ரீரங்கம் - ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ரங்கநாதாய நமஹ

ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

4 comments:

  1. என்ன இனிமை...   மிகவும் சுவாரசியம்.

    ReplyDelete
  2. பதிவை ரசித்தேன் அனு. இந்தக் கோயில் சென்றிருக்கிறேன் பல வருடங்களுக்கு முன். பெண்ணின் ரகசியத்தை மீண்டும் வாசித்துக் கொண்டேன்.

    கீதா

    ReplyDelete
  3. திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - தகவலுக்கு நன்றி. ஊன்றிப் படிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  4. நானும் முன்பு திருக்கோளூர் பெண்பிள்ளை பகிர்வை பகிர்ந்து இருக்கிறேன்.
    https://mathysblog.blogspot.com/2014/02/blog-post_9194.html
    இந்த பதிவில்.

    படங்களும் நாலாயிரத் திவ்யப் பிரபந்த பாடலும் என்று பதிவு அருமை.

    ReplyDelete