04 December 2024

79. வாயில் கை இட்டேனோ எம்பாரைப் போலே.

 (79) வாயில் கை இட்டேனோ எம்பாரைப் போலே.




எம்பாருடைய இயற்பெயர் கோவிந்தன். ராமானுஜரின் தாயாருடைய தங்கை பையன் ( சித்தி பையன், திருமலை நம்பிக்குத் தங்கை ). இவர்  ராமானுஜரிடம் மிகுந்த அன்புக்கொண்டவர். அவருக்கு எப்போதும் நிழலாக இருந்தார்.

ராமானுஜரும் கோவிந்தனும் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் சீடர்களாக இருந்தார்கள். ஒருமுறை யாதவப் பிரகாசர் கூறிய பொருள் தவறு என்று ராமானுஜர் சுட்டிக்காட்ட, யாதவப் பிரகாசர் ராமானுஜர் மீது மிகுந்த கோபம் கொண்டார். யாதவப் பிரகாசர் சீடர்களுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார். ராமானுஜரைக் கங்கையில் மூழ்கடித்து கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

போகும் வழியில் குருவின் திட்டத்தைக் கோவிந்தன் அறிந்துகொண்டார். ராமானுஜரை எச்சரித்துத் தப்பிக்க வைத்தார். ராமானுஜர் தப்பி காஞ்சிக்கு வந்தார்.

குருவுடன் சென்ற கோவிந்தன் கங்கையில் நீராடும்போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. ”பார் உனக்குச் சிவலிங்கம் கிடைத்திருக்கிறது!” என்று கோவிந்தனுக்கு யாதவப் பிரகாசர் ‘சிவனே பரம்பொருள்’ என்று உபதேசம் செய்து அத்வைதியாக மாற்றி, கோவிந்தன் என்ற பெயரையும் ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று மாற்றினார்.

காசியிலிருந்து திரும்பிய கோவிந்தன் திருமலை பக்கம் இருக்கும் காளஹஸ்திக்குச் சென்று அங்கே இருக்கும் சிவன் கோயிலில் தொண்டு செய்ய ஆரம்பித்தார். வைணவரான கோவிந்தன் இப்படித் தடம் மாறிச் சென்றுவிட்டாரே என்று அவருடைய மாமா திருமலை நம்பியும், ராமானுஜரும் வருந்தினார்.

ராமானுஜர் தன் மாமாவான திருமலை நம்பியிடம் கோவிந்தனைத் திரும்பவும் வைணவத்துக்கு அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருமலை நம்பி கோவிந்தன் இருக்கும் இடமான காளஹஸ்திக்குச் சென்றார். ஒரு நாள் காலைக் கோவிந்தன் சிவ பூஜைக்குப் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். கோவிந்தன் இருக்கும் இடத்துக்குப் பக்கம் ஒரு மரத்தடியில் தன் சீடர்களுடன் அமர்ந்து கொண்டார். 

கோவிந்தனுடைய காதில் விழும்படியாகத் திருமலை நம்பிகள் “பூவும், பூஜையும் திருமாலைத் தவிர வேறு யாருக்குத் தகும்?” என்று நம்மாழ்வாரின் பாசுரத்தை உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

இதைக் கேட்ட கோவிந்தன். மெதுவாகத் தன் மாமா என்ன சொல்லுகிறார் என்று கேட்க ஆரம்பித்தார். நம்மாழ்வாரின் பாசுரத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பூப்பறிப்பதை நிறுத்தினார். 

திருமலை நம்பியின் காலில் விழுந்து மீண்டும் வைணவத்துக்குத் திரும்பினார். நம்பிகளுடன் திருமலைக்குச் சென்று அவருடன் திருவேங்கடவனுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் இராமானுஜரும் திருமலையில் ஸ்ரீமத் இராமாயணத்தின் உள்ளர்த்தங்களை பெரிய திருமலை நம்பிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார். இதனிடையில், எம்பாரது குணாதிசயங்களை காண அவருக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

ஸ்ரீ வைஷ்ணவ பண்புகளில் ஒன்று மற்றவர் மீது பச்சாதாபம். 

எம்பாரிடம் இந்த பண்பு முழுமையாக இருந்தது. 

ஒரு சமயம் எம்பார் தன் கையை ஒரு பாம்பின் வாயில் இட்டு, பின்பு குளித்துவிட்டு தன் ஆச்சரியருக்கான பணிவிடைகளை தொடர்ந்தார். இதைக்கண்ட இராமானுஜர், "கோவிந்தா! பாம்பின் வாய்க்குள் என்ன செய்தாய்?" என வினவினார்.


எம்பார் சொன்னார், "அந்த பாம்பு தன் நாக்கை நீட்டி வைத்து தவித்துக் கொண்டிருந்தது. அருகில் சென்றபோது நாக்கினால் முள் ஒன்று தைத்திருந்ததைக் கண்டேன். அதனால், அதை வெளியே எடுத்து போட்டேன். பாம்பு ஓடிவிட்டது" என்றார்.

 இதைக் கேட்ட இராமானுஜர் எம்பாரின் கருணையில் அதிசயித்து அவருக்கு ஆசி வழங்கினார்.

எப்பொழுதும் பாம்பு பலரில் பயத்தையே விதைக்கும். ஆதலால் மனிதர்கள் அதனிடமிருந்து தள்ளியே இருப்பர். இருப்பினும், இந்நிகழ்வில் எம்பார் அதைக் கண்டு பயம் கொள்ளாமல் அது தவிப்பதை எண்ணி வருந்தினார்.

"அந்த எம்பாரைப் போல கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ? இல்லையே! நான் செல்கிறேன்" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்மணி..


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே









திருவாய்மொழி இரண்டாம் பத்து 


 2 - 5 அந்தாமம்

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க, மகிழ்தல் 


பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்,

காம்பு அணைதோள் பின்னைக்கு ஆய்  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,

தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்,

பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போரேறே. 5.7

3059



பொன் முடி அம் போர் ஏற்றை, எம்மானை, நால் தடம் தோள்,

தன் முடி ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை,

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை,

சொல் முடிவு காணேன் நான்; சொல்லுவது என்? சொல்லீரே. 5.8

3060









80. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி)

ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப்பிரான் ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment