திருப்பாவை 15
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.
அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள்.
என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்.
வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள். ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள்.
விளக்கம் -
எல்லாப் பெண்களுடைய கூட்டத்தை காண கருதிக் கிடப்பாள் ஓருத்தியை, இளம் கிளியே என்ற ஒருத்தியை, உணர்த்தும் எல்லே இளம் கிளியே என்ற பாசுரம். இந்த பாடலே திருப்பாவை ஆகிறது என்று ஆராயிரப்படி விளக்கம் சொல்கிறது.
பகவத் விஷயத்தில் சிற்றம் சிறு காலையில் என்ற பாடலில் இருக்கும்படி சொல்கிறது; பாகவத விஷயத்தில் இருக்கும்படி இந்த பாடல் சொல்கிறது; பங்கய கண்ணானை பாடு என்று அகத்தில் உறங்கும் பெண்ணை எழுப்பும் பாடல். இந்த பாடல் முழுவதும், ஒவ்வொரு சொற்தொடரும் வைணவத்தின் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட என்று சொன்னது, எம்பெருமான் தன் திறத்தில், மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரித்திரங்களுக்குள் கோவர்த்தன கிரியை ஏந்தியது மிகச் சிறந்தது. மாறு செய்த இந்திரனுக்கு ஒரு தீங்கும் இழைக்காமலே கண்ணன் அவனது அகம்பாவத்தை அடக்கியது.
நம் தீவினைகளை அழித்து, நம்மை மாயையிலிருந்து விடுவித்து, தறிகெட்டு அலையும் நம் புலன்களை நெறிப்படுத்தி, பகவத்-பாகவத சேவையில் நம்மை ஈடுபடுத்தி நம்மை ஆட்கொள்ளவிருக்கும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடுவோமாக என்கிறார்.
திருமங்கையாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.
இப்பாடல் கூறும் திவ்யதேசம் -
15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் |
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரமும், அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் படித்து தெரிந்து கொண்டேன். ஓவியமும், தங்கள் குரல் வழி தந்த பாசுரமும் நன்றாக உள்ளது. அருமையான இப்பாடல்களைப் பாடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி எம்பெருமானை துதிப்போம். நாங்கள் வெளியூர் சென்று விட்டமையால் நான்கைந்து நாட்களாக வலைத்தளம் வரவில்லை. இனித் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.