ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
![]() |
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
விளக்கம்:
ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இப்படி சிந்தித்து கொண்டு இருக்க, மழைக்கு நிர்வாகனனான பர்ஜயன் (மேகம்), பகவத் காரியம் செய்யும் அவர்களுக்கு சிறிது உதவி செய்தால் தனக்கும் ஸ்வரூப லாபம் கிடைக்கும் என்று எண்ணி, அவர்களிடம், ‘நான் உங்களுக்காக செய்ய வேண்டியவைகளை செய்ய அடியேன் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை நியமிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்து நிற்க, ஆய்ச்சியர்கள், “ ‘பெண்கள் நோற்றது என்ன, மழை பெய்தது எப்படி’ என்று அனைவரும் நன்றாக கொண்டாடும்படி மழை பெய்ய வேண்டும்” என்று அவன் செய்யவேண்டிய கைங்கரியத்தை ஆழி மழைகண்ணா என்ற பாட்டினால் சொல்கிறார்.
இந்தப் பாடல் பாழியம் தோளுடை பத்மநாபன் திரு அனந்தபுரம் பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.
![]() |
மூலவர் - அனந்தபத்மநாபன் |
![]() |
![]() |
தாயார் : ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி |
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய 4 ஆம் நாள் பாசுரமும் அதன் பொருள், மற்றும் விளக்கங்களும் படித்துணர்ந்தேன். அழகான இறைவன், இறைவி படங்களை கண்டு வணங்கி கொண்டேன். ஸ்ரீ அனந்த பத்மநாபன் திருவடிகளையும் தாயார் ஸ்ரீ ஹரி லட்சுமி தேவியையும் கண்டு மகிழ்ந்து அவர்கள் பாதம் சரணடைந்தேன்.அனைவருக்கும் "அவன்" நல்லருளை தரவேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தாங்கள் இன்றைய பாரங்களை பாடி விளக்கம் தந்த தங்கள் குரல் வழி பதிவு கேட்டு மிக்க மகிழ்வடைந்தேன். போன வருடமோ, அதற்கு முந்தைய வருடமோ இப்படி தங்களின் பாசுரத்தை குரல் வழி பதிவாக கேட்டதும் நினைவுக்கு வந்தது. தங்கள் குரல் இனிமையாக உள்ளது. என் வாழத்துக்களுடன் பாராட்டுக்களும்.
இன்றைக்கு பதிவுக்கான பகிர்ந்த ஓவியமும் அழகாக இருக்கிறது. தங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களின் பல வேலைகளுக்கும் நடுவில் தினமும் இங்கு வந்து சேவித்து நல் ஆசி கூறும் தங்களின் வார்த்தைகளுக்கு நன்றி அக்கா.
ReplyDeleteதிருவனந்தபுரம் ஸ்ரீ ஹரி லக்ஸ்மி தாயார் அனைவருக்கும் துணை இருக்கட்டும்