திருப்பாவை 6
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
விளக்கம்:
நோன்பிற்கு பெண்களை எழுப்புவது - புள்ளும் சிலம்பின என்ற பாட்டு முதல், “எல்லே இளங்கிளியே” என்ற 15ம் பாட்டு வரையில் பத்துப் பாசுரங்களாலே, பாவை நோன்பு நோற்க, மற்ற பெண்களை எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது.
ஆச்சியர்களின் கிருஷ்ண அநுபவத்திற்குப் பிரதான உபகரணமான, அவன் மீது ஆசையும், ஏகாந்தமான காலமும், ஆயர்குல பெரியவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியில் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்த போதும், சுவை மிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கது அல்லது என்பதால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்க ஆசை கொள்கின்றனர். பகவத் சம்பந்ததைவிட, பாகவதர் சம்பந்தம் சரியானது ஆனதாலும், பகவத் விஷயம் தனியே அனுபவிக்கும் விஷயம் இல்லாததாலும், உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்கள்.
பெண் பிள்ளைகள், பொழுது விடிந்தமையை அறியாமல் கிடந்து உறங்குகின்ற பெண் ஓருத்தியின் மாளிகை வாசலில் நின்று பிள்ளாய், விடிந்த பின்பும் இப்படி உறங்கலாகுமோ’, என்று சொல்ல, அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தமைக்கு அடையாளம் ஏது? என்று கேட்க, “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று ஓர் அடையாளம் கூறுகின்றனர்.
திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் இன்னொரு அடையாளமாக சொன்னார்கள். இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார் உண்டு.
இந்த பாசுரத்தை ஆண்டாள் -- புள்ளும் வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து ---திருவண் வண்டூர் பெருமானை மனதில் கொண்டு பாடுகிறாள்.
திருநீர்மலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். |
No comments:
Post a Comment