22 December 2024

பாசுரம் 7 - கீசு கீசு என்று எங்கும்

 திருப்பாவை 7



   கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

    பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

      வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

      நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

     தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art


பொருள் 

சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள். ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும்.

இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம்துணையுடன் கீச்... கீச்...ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம். திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே... தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது.

இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும். நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே எழுந்திரு... வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள்.


விளக்கம்: 

பகவத் விஷயத்தில் சுவடு அறிந்து மறந்து உறங்குகின்ற இன்னொருத்தியை ‘கீசு கீசு’ என்ற பாடலில் எழுப்புகின்றாள். ‘அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்றும், ‘அந்தமில் பேரின்பத்து அடியோவரோடு இருந்தமை’ என்று எல்லோருடன் இருப்பதால் இனிமை உண்டாவதை கீசு கீசு என்ற பாடலில் ஆச்சியர் சொல்கின்றனர். பேய்ப்பெண்ணே என்ற பெண்ணை எழுப்ப முயற்சிக்கையில் ஆனைச்சாத்தன் பேச்சரவம், மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் ஆகியவற்றை விடிந்ததற்கு அடையாளமாக கூறுகிறார். கேசி வத வ்ருத்தாந்தமும், சக்கரவர்த்தி திருமகனை, ஜனகனின் மகள் தழுவிகொண்ட சரித்திரமும் சொல்லப்பட்டது. குலசேகராழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள் உண்டு.

இந்த பாசுரத்தை ஆண்டாள்  திருவாய்ப்பாடி  பெருமானை (கேசவனைப் பாடவும்மனதில் கொண்டு பாடுகிறாள். 




திருஎவ்வுள் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் - ஸ்ரீ ஆண்டாள் 




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

No comments:

Post a Comment