16 December 2024

பாசுரம் - 1

திருப்பாவை - 1



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்

      நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

      கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

     பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்







 அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! 

சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே!

 மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. 

இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.


விளக்கம் : 

நாம் நோன்பு நோற்பதற்கு சரியான காலம் மார்கழி என்று அந்த மாதத்தினை கொண்டாடி, மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை அழைப்பது மார்கழி திங்கள் என்ற முதல் பாட்டு. 

நெடுநாளாகக் கண்ணனைப் பிரிந்து இருந்ததால் உண்டான தாபம் முழுவதும் அடங்க, நீராட விருப்பமுடையீர் வாருங்கள் என்று அழைக்கிறார். இங்கு, நீராட என்று கூறியது, “கண்ணனோடு சேர்ந்து இருக்க” எனக் கூறியதாகும்.

 தங்களுடைய கைங்கரிய விருப்பத்தை தெரிவிக்கவே பறை என்று சொல்லிக் கொண்டு போவது. அந்த கைங்கரியத்தைத் தாமாகவே செய்ய இவர்களுக்கு பிராப்தி இருந்தாலும், எம்பெருமானின் நியமனம் கொண்டு செய்வதே தகும் என்பது அவர்கள் கருத்து. மீட்சியின்றி வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு ஒருவகை அதிகாரமும் வேண்டாம் என்று சொல்கிறார். 

கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அழகு மிகுந்து தோன்றியதால் “ஏரார்ந்த கண்ணி” என்ற அடைமொழி கொடுக்கப் பட்டது. பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்களை கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறைபொருள். 

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 

108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.




ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை இனிய இம்மார்கழி மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை முதல் பாடலுடன் அதற்குரிய விளக்கங்களும் படிக்க நன்றாக உள்ளது. இப்பிறவியில் பரந்தாமனை அடைய வழி கிடைத்து விட்டால் நல்லதுதான். அதற்கு அவனருள் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை வேண்டி இந்நன்நாளில் பிரார்த்தனைகள் செய்வாம் . ஒருவேளை இப்பிறவியில் கிடைக்கவில்லையென்றாலும், அடுத்தடுத்து வரும் பிறவிகளிலாவது அவன் அருள் புரிவான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete