11 December 2024

கைசிக ஏகாதசி

 கைசிக ஏகாதசி.....!!! 

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".



மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி". 

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  

மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.








ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார்.


கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார். 



தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". 

இங்கு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான, அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".

நம்பாடுவான்  நல் கவிதன்மை கொண்டவன் திருக்குறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான்.

நம்பி பெருமாளை பற்றி பாடுவதையே உயிர் மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் கோயிலில் நுழைய அனுமதி இல்லாமல் இருந்தது. அவனுக்கு அதை பற்றி துளி கூட வருத்தம் இல்வை.

கோயிலின் வாசலின் நின்று பெருமாளை பற்றி போற்றி பாடுவான்.வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே அவனுக்கு அனுமதியுண்டு.


கைசிகபண்

கோயிலின் வாசலில் பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரம் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்க முடியா விட்டாலும் அழகிய நம்பியான பெருமாள் என்னை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார், என் பாடல்களை கேட்டு கொண்டேதான் இருக்கிறார் அதுவே போதும். அதுவே எனக்கு பரம திருப்தி என வாழ்க்கை நடத்தி வந்தான்.

கைசிகம் என்ற பண்ணில் பாட்டிசைத்து நம்பியை போற்றி பாடுவான். நம்பாடுவான் விடியற்காலையில எழுந்து ஸ்நானம் செய்து பிரம்ம முகூர்த்தத்தில் கோயிலின் வாசலில் சென்று பெருமாளின் பெயரில் பண் இசைத்து அவரது புகழை பாடுவான்.





பிரம்ம ராட்சதன் வழிமறித்தல்

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி  இரவில் யாம வேளையில் வீணையும் கையுமாக பெருமாளை துயிலெழச் செய்ய மலையேறினான்.

அந்த இரவு வேளையில் நடுவழியில் பூர்வத்தில் சோம சர்மா என்பவன் பிராமணனனாய் இருந்து யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்ம ராட்சதனாய் திரிந்தான்.

அந்த பிரம்ம ராட்சதன் நம்பாடுவானை வழி மறித்து பிடித்துக்கொள்கிறான். தான் பத்து நாள்கள் உணவின்றி திரிவதாகவும் இவன் தனக்கு இறைவன் அனுப்பி வைத்த உணவு என்றும் கூறினான்.

ராட்சச தேகமோ கொழுத்தது. 

நம்பாடுவான் தேகமோ மெலிந்தது. 

அதனால் பிரம்ம ராட்சதன் கையிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்பட வில்லை.

பிரம்மராட்சதனை பார்த்து நான் ஏகாதசி விரதமிருந்து பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாளை துயிலெழுப்பி துதிக்கச் சென்று கொண்டு இருக்கிறேன். என்னை தயவு செய்து விட்டு விடு. என் விரத்திற்கு பங்கம் விளைவித்து விடாதே எனக் கெஞ்சினான்.

ஆனால் ராட்சதனோ நான் பத்துநாளாக பட்டினி, தெய்வாதீனமாக நீ கிடைத்தாய். நான் உன்னை புசிக்கப் போகிறேன் என்று கூறினான்.













கடும் வாக்கு வாதம்

நம்பாடுவான் தன்னை மலையேறி திருபள்ளியெழுச்சி பாட வழி விடுமாறு மன்றாடினான். ஆனால் பிரம்மராட்சதனோ இடங் கொடுக்க வில்லை. வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டான் நம்பாடுவான்.

இதற்கு மேல் என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை என தெரிந்து கொண்ட நம்பாடுவான் தனக்கு மரணம் நெருங்குவதை உணர்ந்தான்.

நடக்க இருப்பதை தவிர்க்க இயலாது என அறிந்து, எனது விரதத்தை முடித்து விட்டு திரும்ப வந்து உனக்கு உணவாகிறேன் என்றான்.


பிரம்ம ராட்சதன் மனம் மாறுதல்

அதற்கு பிரம்ம ராட்சதன் பலமாக சிரித்து, 'சண்டாளனே பிறவிக்கு ஏற்ப அசத்யம் செய்கிறாய். என் கையில் இருந்து மீண்டு எவன் திரும்ப வருவான்.??? என்றதோடு மட்டும் அல்லாமல்.....

நீயோ தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். சொன்ன சொல்லை காப்பாற்ற உன்னால் இயலாது. நீ திரும்ப இவ்வழியில் வராமல் தப்பி விடுவாய் என்றான்.

அதற்கு நம்பாடுவான் 18 விதமான பாவங்களை சொல்லி அது தன்னை வந்தடையும் என கூறிகிறான்.


17 பாவங்களை மறுத்த ராட்சதன் 18 வது பாவத்தை கேட்டவுடன் இது மிக கொடிய பாவம் என அஞ்சி நடுங்கி அவனுக்கு வழி விட்டான்.

அப்படி என்ன பாவங்களை சொன்னார் நம்பாடுவான்.???

மலையேறி எம்பெருமானை சேவித்து விட்டு நான் திரும்ப வராவிட்டால்,


1.சத்தியம் தவறியவருக்கு என்ன தண்டனையொ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

2.பிறன் மனையை அடைவதால் என்ன பாவம் நேருமோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

3.எவன் ஒருவன் தன்னுடன் உட்கார்ந்து சாப்பிடும் ஒருவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கிறானோ அப்பாவம்  வந்து என்னை அடையட்டும்.

4.எவன் ஒருவன் பிராமனணுக்கு பூமிதானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபகரிக்கறானோ அவன் அடையும் பாவம் வந்து என்னை அடையட்டும்.

5.எவன் ஒருவன் ஒரு பெண்ணை அவளுடைய யவன காலத்தில் அவளுடன் கூடி பின் ஏதாவது தோஷத்தைச் சொல்லி கைவிடுவானாகில் அதனால் உண்டாகும் அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

6.எவன் ஒருவன் அமாவாசை,பெளர்ணமி  காலத்தில் தன் பத்தினியுடன் கூடுகிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

7.எவன் ஒருவன் ஒருவருடைய அன்னத்தை புசித்து விட்டு அவரையே தூஷிக்கிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

8.எவன் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக சொல்லி விட்டு, எதாவது சாக்கு போக்கு சொல்லி தவிர்க்கிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

9.எவன் ஒருவன் அஷ்டமி,சஷ்டி,சதுர்தசி,அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாக கூறி கொடுக்காமல் இருத்தால் அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

11.எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபகரிக்கிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

12.எவன் ஒருவன் குருவின்,அரசனின் பத்தினியை அபகரிக்கறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

13. ஒருவன் 2 பெண்களை மணம் புரிந்து, ஒருத்தியை மட்டும் வெறுத்து ஒதுக்குவதால் உண்டாகும்  அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

14.எவன் ஒருவன் தன்னுடைய பதிவிரதையான பத்தினியை வயதான காலத்தில் தனியே விடுகிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

15.எவன் ஒருவன் தாகத்தால் வரும் பசுக்களுக்கு தண்ணிர் கொடுக்காமல் துரத்துகிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

16.எவன் ஒருவன் பிரம்மஹத்தி தோஷம் பண்ணுகிறானோ, குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ அப்பாவம் வந்து என்னை அடையட்டும்.

17.எவன் ஸர்வ வியாபியாய் (எங்கும் நிறைந்திருப்பவன்) எழுந்தருளும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை பூசிக்கிறானோ அவனது அப்பாவம் வந்து என்னை அடையட்டும் எனக் கூறினான் நம்பாடுவான்.

இந்த 17 பாவங்களை சொல்லியும் பிரம்ம ராட்சதன் அசைந்து கொடுக்க வில்லை.


18.ஸர்வ ஜனங்களையும் காப்பவனும்,எல்லோருடைய இதய கமலத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் தொழப்படுபவனும், சர்வேஸ்வரனான அந்த ஸ்ரீ மந்நாராயணனை மற்றவர்களோடு சமமாக பார்ப்பவருக்கு வரும் பாவம் வந்து என்னை அடையட்டும்.


இந்த பாவத்தை கேட்டவுனுடன் பிரம்ம ராட்சதன் திகைத்து நின்றான்.அது மிக கொடிய பாவம் என அறிந்து கொண்டான்.

மேலே சொன்ன பாவத்தை கேட்டதும் நம்பாடுவானின் அபார ஞானத்தை புரிந்துகொண்டு, இவன் சாதாரண ஆள் இல்லை என்று உணர்ந்தான்

இவனை விடாவிட்டால் இன்னும் பாவமே வந்து சேரும் என எண்ணி,நீ சென்று உன் விரதத்தை முடித்து விட்டு வா என சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தான்.

உடனே நம்பாடுவான் அழகிய நம்பியை காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.

நம்பியை கண்டு தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.

பெருமாளே எங்கே என் ஆயுள் உன்னைக் காணாமல் முடிந்து விடுமோ என எண்ணினேன். உன்னைப் பாடும் கடைசி பாடல் இதுவாகதான் இருக்கும் என மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருகி பாடினான்.

ஏனெனில் பிரம்ம ராட்சதன் அவனை உண்டு விட்டால் திரும்பி பெருமாளை சேவிக்க முடியாது.

கோவிலின் உள்ளிருந்த அழகிய நம்பி நம்பாடுவானின் சோகத்தை உணர்ந்தார்.

தன் பக்தனை காண முடிவு செய்தார்.கொடிமரத்தை விலக்கி நம்பாடுவானை நோக்கினார்.

தன்னை நோக்கி வந்த ஒளியை உணர்ந்தார் நம்பாடுவான்.

தன் கண்முன்னே காண்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தார்.

நம்பாடுவான் திருப்தியடைந்தார். இனி என்ன வேண்டும்? ஒன்றும் வேண்டாம். திருப்தியாக பிரம்ம ராட்சதனுக்கு உணவாகலாம் என வந்த வேகத்தை விட அதிக வேகத்துடன் சென்றார்.







வராக மூர்த்தி காட்சியளித்தல்

இப்படி வந்த  நம்பாடுவானை ஒரு சுந்தர மூர்த்தி நிறுத்தி, என் பிள்ளாய் ! நீ செல்லும் திசையில் பிரம்ம ராட்சதன்  இருக்கிறான்.நீ சென்றால் அவன் உன்னைக் கொன்று விடுவான் என கூறினார்.

அதற்கு நம்பாடுவான் 'சத்தியம் தவறேன்'. நான் வருவதாக வாக்களித்து இருக்கிறேன் என கூறி சென்றார்.

வந்தவர் வேறு யாருமில்லை. இப்புராணத்தை கூறி கொண்டிருக்கும் வராக மூர்த்தியே..

இருவரையும் ஒரு சேர கடாஷிக்க எண்ணினார் வராகர்.


பிரம்ம ராட்சதன் பேசுதல்

நம்பாடுவானும் ராட்சதன் இடத்திற்கு வந்து  தன்னை உண்ணுமாறு கேட்டான்.

ஆனால் அதற்கு ராட்சதன்  எனக்கு பசியில்லை.

எனவே நீ பாடிய கைசிக பண்ணின் பலன் கொடு என கேட்க, என்னை வேண்டுமானால் புசி. பாட்டின் பலனைத் தர மாட்டேன் என பதில் உரைத்தார் நம்பாடுவான்.

பாதி பாடலின் பலனையாவது கொடு எனக்கேட்க, அதுவும் தன்னால் இயலாது என்றார் நம்பாடுவார்.


பூர்வ ஜென்ம ஞாபகம்

அப்படியென்றால் ஒரு யாமத்தின் பலனையாவது கொடு என்னுடைய இந்த ஜென்மம் நீங்க என்றான் பிரம்ம ராட்சதன்.

நான் பிராமணனாய் இருந்து பொருள் ஈட்டுவதிலேயே ஈடுபாட்டுடன் இருந்தேன்.

அவ்வாறு ஆசைப்பட்டு தவறான யாகம் பண்ணியதால் இந்த ஜென்மம் அடைந்தேன், எனக் கதறினான். 

நம்பாடுவான் இரங்கினார். தன்பாட்டின் பலனைக் கொடுத்தார்.

பிரம்ம ராட்சதன் உடனே தன் சரீரம் நீங்கி அடுத்து நல்ல பாகவதானாய் பிறந்து முக்தி அடைந்தார்.

நம்பாடுவானும் பல நாள் பண்ணிசைத்து நம்பியை மகிழ்வித்து பின் பரம பதத்தை அடைந்தார்.

ஸ்ரீ ரங்கத்தில் இப்புராணத்தை பாடிய பராசர பட்டர் சிஷ்யர்கள் முன்னிலேயே பரமபதம் எய்தினார்.







நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராகமூர்த்தி, 

மேலும் பூமிதேவியிடம் உரைப்பது. 

எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ, அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ) அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்.

என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.

பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராக புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.

இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும்.


திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.





பெரிய திருமொழி  

 9 -6 அக்கும், புலியும் அதளும்  

திருக்குறுங்குடி  - 2 


1800.   

வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*

கேழல் செங்கண்*  மா முகில் வண்ணர் மருவும் ஊர்,*

ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 

கூழைப் பார்வைக்*  கார் வயல் மேயும் குறுங்குடியே. 


1801.   

சிரம் முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 

உரமும் கரமும் துணித்த*  உரவோன் ஊர் போலும்,*

இரவும் பகலும்*  ஈன் தேன் முரல,*  மன்று எல்லாம்-

குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.



முந்தைய  பதிவுகள்


கைசிக ஏகாதசி  --2௦17
கைசிக ஏகாதசி --2௦18

 "கைசிக ஏகாதசி மஹாத்மியம்"  -2019




ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!

ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!!!

திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!!!!!


அன்புடன்
அனுபிரேம்💜💜💜

4 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கைசிக ஏகாதசியின் புராணம் அருமை. எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும், புதிதாக கேட்பது போன்ற பக்தி உணர்வை தருவது. படங்களில் ஸ்ரீ நாராயணனை தரிசித்து திவ்யபிரந்தம் பாடல்களை பாடிக் கொண்டேன். ஸ்ரீ மன்நாராயணன் அனைவருக்கும் நல்ல பலன்களை தர வேண்டுமாய் பிரார்த்தித்தும் கொண்டேன். இச்சிறப்பான ஏகாதசியன்று நல்ல பதிவினை தொகுத்து வழங்கிய உங்களுக்கு என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும், ஊக்கம் தரும் மறுமொழிக்கு மிகவும் நன்றி கமலா அக்கா

      Delete
  2. கைசிக ஏகாதசி அன்று தான் என் கணவர் இறைவனடி சேர்ந்தார். நேற்று அவர்கள் திதி.
    கைசிக ஏகாதசி அன்று நம்படுவான் கதை கேட்பது புண்ணியம். கதை படித்தேன்.
    எல்லோருக்கும் நல்லதே நடக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி மா ... உங்களின் whatsup status பார்த்து அன்று நானும் ஐயா வை நினைத்துக் கொண்டேன்

      Delete