25 December 2024

பாசுரம் 10 - நோற்றுச் சுவர்க்கம்

  திருப்பாவை 10





நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்

      தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!

      தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்



நன்றி: Upasana Govindarajan Art



பொருள்:

முற்பிறவியில் எப்பெருமான் நாரயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. 


விளக்கம் 

கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய், இடை சுவர் இன்றி, அவனுடன் ஒரே படுக்கையில், தண்ணீர் துரும்பு அற்று படுத்து இருக்கும் ஒருத்தியை, ஆற்ற அனந்தல் உடையாய் என்று இருக்கும் ஒருத்தியை, வெளியில் இருக்கும் மற்றவர்கள் எழுப்பும் நோற்று சுவர்க்கம் என்ற பாசுரம். 

நாராயணனே என்று அவனையே உபாயமாக அனுசந்தித்து விடிந்த பின் எழுந்து குளிக்க கடவது என்று இருக்கிறாள். கிருஷ்ணனே சுக சப்த வாக்கியன் ஆனதால் அவனையே சுவர்க்கம் என்கிறார்கள். நாற்ற துழாய் முடி நாராயணன் என்று சொன்னது, ஆசைபட்டவர்களை ரக்ஷிப்பதாக தோளில் மாலை இட்டு இருப்பவன் என்று சொல்கிறார். “ஸ்ரீ பரசுராமனை வென்று பெருமாள் (ராமபிரான்) அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே, நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ?” என்பது ஆராயிரப்படி விளக்கம். ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாகும். 

 புள்ளும் சிலம்பின காண் என்ற  6வது பாசுரம் தொடங்கி 15வது வரை உள்ள பத்து பாசுரங்கள் முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை.

இவை பத்து ஆழ்வார்களை (மதுரகவியாழ்வார், ஆண்டாள் தவிர்த்து) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகம் உண்டு ! மதுரகவியார் நம்மாழ்வருக்குள் அடக்கம் என்பதால் அவரை தனியாக துயிலெழுப்ப ஆண்டாள் நாச்சியார் துணியவில்லை.

இந்த 10 திருப்பாவைப் பாசுரங்களும் (6-15) ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது! தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, தனக்குப் பின்னால் அவதரிக்கவிருக்கும் 3 ஆழ்வார்களின் (தொண்டரடிபொடி, திருமங்கை, திருப்பாணாழ்வார்) திருப்பள்ளியெழுச்சிக்கும் சேர்த்தே ஆண்டாள் நாச்சியார் திருப்பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிட வேண்டியது.

இப்பாசுரம் முதலாழ்வர்களில் முதலாவதாக வரும் பேயாழ்வாரை துயிலெழுப்புவதாக ஐதீகம். 


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.





ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் 





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖


No comments:

Post a Comment