புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்
![]() |
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வா என் கண்ணே!
விளக்கம்-
கண்ணன் பிறந்து வளரும் ஊரான திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க, அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும், அவனை மனத்துக்கினியான் என்று பாடியதையும் க்ருஷ்ண பக்தர்களுக்கு ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது. உடனே சில பெரியார்கள் கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே என்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள்.
தன் கண் அழகினில், பெருமை கொண்ட ஒருத்தி, தன் கண் அழகிற்கு எல்லோரும் தன்னை வந்து பார்க்கும் போது, தான் ஏன் கண்ணனை சென்று பார்க்கவேண்டும் என்று இருக்கும் ஒருத்தியை, போதரிக் கண்ணினாயை, மற்றவர்கள் எழுப்பும், புள்ளின் வாய் கீண்டாய் என்ற பாசுரம்.
விரோதியை போக்கி, தன்னை கொடுப்பது, அவன் பணி ஆகும். இவனுடைய அனுமதியும், அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகுமத்தனை, கர்ம ஞானங்களை துணையாக கொண்டு, பக்தியை உபாயம் என்று இருப்பவர்கள் அன்றோ இவர்கள். சென்ற பாட்டிலும் இந்த பாட்டிலும் இராமனை பற்றி பாடிய இவர்கள் இந்த பாட்டில் இராமனோடு சேர்ந்து, கண்ணனையும் பாடுகிறார்கள். கண்ணனோடு இராமன் ஏன் என்றால், இராமன் பிராட்டியை பிரிந்து வருந்துபவன், திருவினை பிரித்த குற்றத்திற்காகவும், பொல்லா அரக்கன் என்று சொன்னார்கள். “புள்ளுஞ் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஆரவாரங்களை அடையாளமாகக் கூறுகின்றனர். இது தொண்டரடிப்பொடி ஆழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள். ‘பிள்ளைகளெல்லாரும்’ என்று ஆண்டாள் சொன்னதால், தனக்கு முந்தின எல்லா ஆழ்வார்களையும் சொன்னபடியும் ஆகும்.
இப்பாடல் கூறும் திவ்யதேசம் -
13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.
No comments:
Post a Comment