18 December 2024

பாசுரம் 3

 திருப்பாவை 3



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


நன்றி: Upasana Govindarajan Art


பொருள்: 

சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். 

ஆயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்தில் கொண்டு உள்ளவர்கள், ஆதலால் அந்த எம்பெருமானை ஓழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்; ஆயினும் இவர்கள் நோன்பு நோற்குமாறு அநுமதி அளித்தவர்களுக்கு சில பலன்கள் தருமாறு வேண்டுகிறார்கள். இந்த மார்கழி நீராட்டத்தினால் ஊரோடு சம்பந்தபட்ட நாட்டுக்கும் வளம் விளையும் என்று கூறப்படுகின்றது.  பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவத் அநுபவம் பண்ணினால் இந்த உலகமே தோஷங்கள் ஒன்றும் இன்றியே இருக்கும் என்று இந்த ஓங்கி உலகளந்த என்ற பாட்டில் சொல்கிறார். ‘தன் முடிமேல் அடி வைக்க வேண்டும்’ என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும் அளப்பதையே ஒரு காரணமாக கொண்டு, அனைவர் முடியிலும் தீண்டி அருளின எம்பெருமான், இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தை முடிக்காமல் விடமாட்டான் என்று கருத்து தோன்ற ஆச்சியர்கள் ‘உலகளந்தான்‘ என்கிறார்.



திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது. 




ஸ்ரீ  ஆண்டாள்  - திருக்கோவிலூர்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

5 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாசுரமும். அதன் விளக்கங்களும் படிக்க நன்றாக உள்ளது. ஓவியமும் அருமை. கண்டு ரசித்தேன். ஓங்கி உலகளந்த பரந்தாமன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென இன்று பிரார்த்தித்துக் கொண்டேன். திருக்கோவிலூர் ஸ்ரீ ஆண்டாளையும் கண்குளிர கண்டு உலக மக்கள் அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டி விண்ணப்பித்தும் கொண்டேன். எங்கும் நலம் சூழுக...! இன்றைய நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தினமும் ஒரு ஓவியம் தரும் சிறப்பு பற்றி அறிந்து கொண்டேன்.ஓவியர் தங்களுக்கு உறவா? நட்பா? திருப்பாவை பாடல் வீடியோவில் அது தங்கள் குரலா சகோதரி. தெளிவாகவும், இனிமையாகவும் நன்றாக உள்ளது. இனி தினமும் கேட்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தினமும் ஒரு ஓவியம் தரும் சிறப்பு பற்றி அறிந்து கொண்டேன்.ஓவியர் தங்களுக்கு உறவா? நட்பா? திருப்பாவை பாடல் வீடியோவில் அது தங்கள் குரலா சகோதரி. தெளிவாகவும், இனிமையாகவும் நன்றாக உள்ளது. இனி தினமும் கேட்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. ஓங்கி உலகளந்த பரந்தாமன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென இன்று பிரார்த்தித்துக் கொண்டேன். திருக்கோவிலூர் ஸ்ரீ ஆண்டாளையும் கண்குளிர கண்டு உலக மக்கள் அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டி விண்ணப்பித்தும் கொண்டேன்.....

      நன்றி கமலா அக்கா ..

      ஓவியர் தங்களுக்கு உறவா? நட்பா?... இணையத்தில் கண்டு பகிர்ந்த பகிர்ந்த படங்கள் அக்கா, ஓவியர் பெயர் தெரியும் அவ்வோளோ தான்.. ஆனாலும் அனைவரும் ஆண்டாளின் அடியவர்கள் அன்றோ அதன் வழி பார்த்தால் நட்பு என கொள்ளலாம்

      Delete
  2. திருப்பாவை பாடல் வீடியோவில் அது தங்கள் குரலா சகோதரி. தெளிவாகவும், இனிமையாகவும் நன்றாக உள்ளது. இனி தினமும் கேட்கிறேன். ..

    ஆம் எனது குரல் பதிவு தான் அக்கா அத்தனை சிறப்பாக இருக்குமா என தெரியவில்லை, ஆனாலும் புதிய முயற்சிகளின் ஆர்வத்தால் கடந்த 3 வருடங்களாக பதிவிடுகிறேன்.

    மேலும் அங்கு இதுவரை 1000க்கும் மேல் வீடியோ க்கள் உள்ளன

    ReplyDelete