திருப்பாவை 14
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்து துயில் உறங்குபவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
விளக்கம் -
ஆய்ச்சியர்களுக்கு எல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து, அதனை மறந்து உறங்குவாள் ஓருத்தியை, நங்காய், நாணாதாய், நாவுடையாய் என்ற ஒருத்தியை, உணர்த்தும், உங்கள் புழக்கடைத் தோட்டத்து என்ற பாசுரம்.
செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினது, புழக்கடை தோட்டத்துள் இருக்கும் ஆம்பல் பூ என்று அடையாளங்கள் சொல்கிறார்கள். செங்கற்பொடிக்கூறை என்று சொல்வதன் மூலம், திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளித் திறவுகோல் கொடுத்துத் திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாயம் உண்டானதை சொல்கிறது.
கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியும் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகி அது கண்டு அஞ்சி, ‘இந்த ஆயுதங்களை மறைத்துக் கொள்’ என வேண்ட அவனும் அப்படியே அந்த ஆயுதங்களை உடனே மறைத்துக்கொண்டான் என்பது வரலாறு. ஆச்சியர்கள் கண்ணனைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல், கண்ணன் அவ்வாயுதங்களை மறைத்தது உகவாத பகைவர்களுக்காக அல்ல என்றும் அன்பர்களுக்காத்தான் என்பதை சொல்கிறார். இந்த பாசுரம், திருப்பாணாழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.
இப்பாடல் கூறும் திவ்யதேசம் -
14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ஸேர்த்தி ஸேவை |
No comments:
Post a Comment