24 December 2024

பாசுரம் 9 - தூமணி மாடத்து

 திருப்பாவை 9

 



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

      தூபம் கமழத் துயில் அணை மேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

      மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

      ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று

      நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்




பொருள்: 

தூய ஒளிபொருந்திய மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடம், அதனை சுற்றிலும் ஒளி விளக்குகள் எரிகின்றன. மணம் வீசும் புகை கமழ்கிறது. அங்கே படுக்கையில் உறங்கிக்கொண்டு இருக்கிற மாமன் மகளே, வீட்டின் வாசல் கதவைத் திறப்பாயாக! மாமி, உன் மகள் ஊமையோ? செவிடோ, சோம்பல் கொண்டு உறங்குகிறாளா? அவளை எழுப்ப மாட்டீர்களா? நாராயணனைப் பாடுவதால் மயக்கம் கொண்டு தூங்குகிறாளா? அவளை எழுப்பி விட்டால், அவளோடு சேர்ந்து பல நாமங்கள் கூறி, பரந்தாமனை வழிபடுவோம். 

விளக்கம் ; 

கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும், மைத்துனமை உறவை உடைய ஒருத்தியை, மாமன் மகளை, தூமணி மாடத்து என்ற இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் என்பது சொன்ன அடையாளம் ஆகும். திருவாய்ப்பாடியிலே ஒரு அடியவரின் ஸம்பந்தம் தனக்கு மோக்ஷம் கொடுக்க உதவும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்று உரையாசிரியர் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் கூறி உள்ளார். இது திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.







திருக்கடிகை (சோளிங்கர்) அக்காரக்கனி எம்பெருமான்



திருக்கடிகை - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் 




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய 9 ஆம் நாள் திருப்பாவை பாசுரமும், அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ஓவியத்தை மிக ரசித்தேன். தங்கள் குரல் வழி பாசுரமாக வந்த காணொலி பதிவும் அருமையாக உள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கி கொண்டேன். எல்லா நலன்களையும், இறைவன் எம்பிரான் தந்தருள வேண்டுமென ஸ்ரீ மன்நாராயணனை பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete