கார்த்திகையில் கார்த்திகை .....
நீலன், கலியன், ஆலிநாடன், அருள்மாரி, அரட்ட முக்கி அடையார் சீயம், கொங்கு மலர்க் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்ற வேல் பரகாலன், நாலுகவிப் பெருமாள், குமுதவல்லி மணாளன்,
திருமங்கை ஆழ்வார் அவதார நந்நாள் இன்று !
திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்!
கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் ஒண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்து எண்பத்துநாலு உரைத்தோன் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .
திருமங்கையாழ்வார்
பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
அம்சம் : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சம்
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
அம்சம் : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சம்
அருளியவை :பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்.
திருமங்கை மன்னன் ,
மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து,
அரசனாகப் பதவி அனுபவித்து,
மங்கையின் மீது காதல் கண்டார்,
அந்தக் காதலியின் வார்த்தைகளால்,
எம்பெருமான் மீது காதல் கொண்டார்,
பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,
அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,
எம்பெருமானையே நேரில் கண்டு,
அவன் திருவாயினாலே,
“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,
அரங்கன் ஆலயத்தில்,
அரங்கனைப் பாடி,
அரங்கனை மகிழ்வித்து ,
அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி,
இன்று வரை,
இன்னும் வரும் காலங்களிலும்,
தொடர்ந்து நடைபெறும் வகையில்,
வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.
துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.
அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தவர் இவர் ...
அணைத்த வேலும், தொழுத கையும்,
அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், படிந்த நெற்றியும்,
நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,
வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,
அகன்ற மார்பும், திரண்ட தோளும்,
நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,
தூக்கிய கருங்கோவையும்,
தொங்கலும் தனி மாலையும்,
தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,
சாத்திய திருதண்டையும்,
சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும்,
குந்தியிட்ட கனைக்காலும்,
குளிர வைத்த திருவடி மலரும்,
வாய்த்த மணங்கொல்லையும்,
வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி,
மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன்,
மங்கை மன்னனான வடிவே!!!
உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல்,
குறையை வைத்து,
மடல் எடுத்த
குறையலாலி திருமணங்கொல்லைதன்னில்,
வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை உரைத்த மந்திரத்தை,
மால் உரைக்க அவன் முனே,
மதி ஒடுக்கி, மணம் அடக்கி,
வாய் புதைத்து ஒன்றலார்,
கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,
என் கண்ணை விட்டு அகன்றிடாது கலியன் ஆன ஆனையே!!!
காதும் சொரிமுத்தும்,
கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளினையும்,
தனிற்றிலம்பும்,
நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல,
என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!
வேல் அணைத்த மார்பும்,
விலங்கு திருவெட்டெழுத்தை
மால் உரைக்க,
தாழ்த்த வளர்செவியும்
தாளினை தண்டையும் வீரக்கழலும்,
தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்.
பெரிய திருமொழி - முதல் பத்து
1-1 வாடினேன் வாடி
பெரிய திருமந்திரத்தின் மகிமை
948
வாடினேன்; வாடி,வருந்தினேன் மனத்தால்;
பெருந் துயர் இடும்பையில் பிறந்து,
கூடினேன்; கூடி, இளையவர் தம்மோடு
அவர்த் தரும் கலவியே கருதி,
ஓடினேன்; ஓடி, உய்வதோர்ப் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து,
நாடினேன்; நாடி, நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
1.1
949
ஆவியே! அமுதே! எனநினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையா,
பாவியேன் உணராது, எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்,
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது, என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.2
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை
8
பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏதுபெருமை இன்றைக்கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்காண்
9
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே! வாழ்த்து.
முந்தைய பதிவுகள் ...
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻
அவருடைய வரலாற்றைக் குறிப்பிட்டதில் சிறிய பிழை இருக்கிறது.காதலியின் வார்த்தைக்காக எம்பெருமான் மீது காதல் கொள்ளவில்லை. பஞ்ச இலச்சினைகள் மூலம் வைணவராக மாறினார். குமுதவல்லியின் conditionக்காக தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு ஒரு வருட காலம் உணவளிக்கணும் என்ற கட்டளையை நிறைவேற்றமுயன்றபோது ஒரு சமயத்தில் அவரிடமிருந்த செல்வம் கரைந்தது. அதனால் வழிப்பறிக்கொள்ளையை மேற்கொண்டார். அரங்கன், தக்க நேரத்துக்காக்க் காத்திருந்து, பெரும் பணக்காரனாக, அப்போதுதான் திருமணமானவர் போல, தன் மனைவியுடன் நகைகளுடன் வர, அவற்றைக் கொள்ளையடிக்க முயன்று, எம்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். திருமந்திர உபதேசம் பெற்றபின் ஆழ்வாராக மாறிவிட்டார்.
ReplyDeleteவாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன், பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாக பிரபந்தங்களைப் படைத்தார்.
//காதலியின் வார்த்தைக்காக எம்பெருமான் மீது காதல் கொள்ளவில்லை.//
Deleteஆனால் கைங்கர்யம் குமுதவல்லி நாச்சியார் மீது காதல் கொண்ட பின் தானே ஆரம்பித்தார்... அதற்கு முன்னமே ஆழ்வார் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தது போல இருக்கிறதா ... தெரியவில்லை .