19 November 2021

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ......

கார்த்திகையில் கார்த்திகை .....






 திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!



கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியில் ஒண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழ் ஆயிரத்து எண்பத்துநாலு உரைத்தோன் வாழியே

நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே

இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே

வலந்திகழும்  குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!






திருமங்கையாழ்வார் 

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)

தந்தை               : ஆலிநாடுடையார்

தாய்                  : வல்லித்திரு அம்மையார்

பிறந்த காலம்   : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்

நட்சத்திரம்        : கார்த்திகை (பவுர்ணமி திதி)

கிழமை             : வியாழன்

அம்சம்              : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக  பிறந்தவர்                                                   
எழுதிய நூல்    :பெரிய திருமொழி,திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,   ,    திருஎழுகூற்றிருக்கை, பெரிய  திருமடல், சிறிய திருமடல்.

திருமங்கை மன்னன் ,

மனிதனாகப் பிறந்து, முரட்டு வீரனாக வளர்ந்து, அரசனாகப் பதவி அனுபவித்து, மங்கையின் மீது காதல் கண்டார், அந்தக் காதலியின் வார்த்தைகளால், எம்பெருமான் மீது காதல் கொண்டார்,

பரம வைஷ்ணவனாக மாறி, அரச பொறுப்பைத் துறந்து அரங்கனுக்காக,அவன் ஆலயத்தின் திருமதில்களைக் கட்டுவதற்காக, “திருடனாகவும்” மாறினார்,


எம்பெருமானையே நேரில் கண்டு, அவன் திருவாயினாலே,
“ஓம் நமோ நாராயணாய” என்ற திருஎட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார்,


அரங்கன் ஆலயத்தில்,அரங்கனைப் பாடி, அரங்கனை மகிழ்வித்து, 
அவனிடமே ஆழ்வார்களின் தமிழுக்கு ஒரு விழா வேண்டி, இன்று வரை, 

இன்னும் வரும் காலங்களிலும், தொடர்ந்து நடைபெறும் வகையில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறக் காரணமானவர், திருமங்கையாழ்வார்.


 துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்.

 அதிகமாக 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தவர் இவர் ...




பெரிய திருமொழி முதல் பத்து

948
வாடினேன் வாடி, வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து,
கூடினேன், கூடி, இளையவர்- தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி,
ஓடினேன், ஓடி உய்வதோர்ப் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து,
நாடினேன், நாடி, நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.1



949
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி
அவர் அவர்ப் பணை முலை துணையாப்,
பாவியேன்  உணராது,  எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்,
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது, என்
நாவினால்  உய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.2


950
சேமமேவேண்டி, தீவினை பெருக்கி,
தெரிவைமார் உருவமே மருவி,
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்,
காமனார் தாதை, நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்,
நாமம் நான் உய்ய, நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.3


951
வென்றியே வேண்டி, வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்,
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான், ஆழியான் அருளே,
நன்று நான் உய்ய, நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.4


952
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்,
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்,
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்,
உடம்பு எலாம் கண்ண நீர் சோர,
நள் இருள் அளவும், பகலும், நான் அழைப்பன்
நாராயணா என்னும் நாமம்.
1.5





953
எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம்,
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்,
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி,
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்,
வம்பு உலாம் சோலை மா மதிள், தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.6


954
இல் பிறப்பு அறியீர், இவர் அவர் என்னீர்,
இன்னது ஓர்த் தன்மை என்று உணரீர்,
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்,
சொல் பொருள் ஆளீர்! சொல்லுகேன், வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்,
நல் பொருள் காண்மின், பாடி நீர் உய்மின்
நாராயணா என்னும் நாமம்.
1.7


955
கற்றிலேன் கலைகள், ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை,
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்,
செற்றமே வேண்டித் திரிதர்வேன், தவிர்ந்தேன்,
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நல் துணை ஆகப் பற்றினேன், அடியேன்
நாராயணா என்னும் நாமம்.
1.8


956
குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார்
படு துயர் ஆயின எல்லாம்,
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்,
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற
தாயினும் ஆயின செய்யும்,
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
1.9


957
மஞ்சு உலாம்  சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி,
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்!
துஞ்சும்போது அழைமின், துயர் வரில், நினைமின்,
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்,
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்.
1.10







ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!



அன்புடன்,
அனுபிரேம்

1 comment:

  1. நல்ல பதிவு... திருமங்கையாழ்வார் வேல் ஏன் வைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் எழுதியிருக்கலாம்

    ReplyDelete