09 November 2021

கந்த சஷ்டி விரதம் ....!

 





முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். 

சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.

சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. 

அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.







திருப்புகழ் - பாடல் 904 - வயலூர்

தன்னா தனத்தன தன்னா தனத்தன
     தன்னா தனத்தன ...... தந்ததான


என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.



என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், 
என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், 
என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும்,
 வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், 
இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், 
வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், 
பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும்,
 இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) 
என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, 
செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே, 
கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*,
 அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கிரிடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, 
குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின்** அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.



வயலூர் முருக பெருமான் 







ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்








கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, 

நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி,
ஆறுமுகப்பெருமானை போற்றி வணங்கி மகிழ்வோம்.

குழந்தை கடவுள் முருகரை துதிப்போம்.

அருள் முகமாம் முருகனின் அருள் மழை
 அனைவருக்கும்  பரி பூரணமாக கிடைக்கட்டும்....

வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!





அன்புடன்,
அனுபிரேம்


1 comment:

  1. அழகு படங்கள் விளக்கமும், அனு

    கீதா

    ReplyDelete