02 December 2017

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்


இன்று  (2.12.2017)  சனிக்கிழமை   திருமங்கையாழ்வார்  அவதார தினம் ..... கார்த்திகையில் கார்த்திகை













  திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!


கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே

நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே

இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே

வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!









பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)

தந்தை               : ஆலிநாடுடையார்

தாய்                    : வல்லித்திரு அம்மையார்

பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்

நட்சத்திரம்    : கார்த்திகை (பவுர்ணமி திதி)

கிழமை            : வியாழன்

அம்சம்              : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக                                                     பிறந்தவர்,


எழுதிய நூல் :  பெரிய திருமொழி,      திருக்குறுந்தாண்டகம்,                                                     திருநெடுந்தாண்டகம்,    திருஎழுகூற்றிருக்கை,
                                    பெரிய   திருமடல்,       சிறிய திருமடல்.




நீலன்-இயற்பெயர்

பரகாலன்-காரணப்பெயர்

திருமங்கை மன்னன்– மன்னனாக முடிசூட்டிக்கொண்டபின்

கலியன்-திருமாலை மணக்கோலத்தில் வழிபரி செய்ய சந்தித்தல்

திருமங்கையாழ்வார்-திருமாலின் மந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார்







   




சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில்,

ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார்.

அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.

சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.

அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.


எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர்.





சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால்   இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.

ஒரு முறை, நீலருக்கு.... சுமங்கலி என்னும் தேவகன்னிகையைக் காண நேரிட்டது.

 சுமங்கலி என்னும் தேவகன்னிகை கபிலமுனி என்னும் முனிவரின் சாபத்தினால் சாதாரண மானுடப்பெண்ணாகப் பூலோகத்திலே பிறந்து குமுத வல்லி என்னும் பெயர் கொண்டு வளர்ந்தார்.


தன் பிறவியை பற்றி முழுதும் அறிந்தவர் அந்தப் பெண்...




அப்பொழுது நீலர் அப்பெண்ணை மணக்க விரும்பி  அவர் தந்தையிடம் மணக்க அனுமதி கேட்டார்...

அதற்கு அவர் தந்தை தன் பெண்ணின் விருப்பமே தன் விருப்பம் எனவும் ...குமுதவல்லியிடம் கேட்பதாகவும் கூறினர்..




நீலனின் விருப்பத்தை குமுதவல்லியிடம் அவர் தந்தை    வெளிப்படுத்திய பொழுது, குமுதவல்லியார், அவருக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதாவது,

1. அவர் பஞ்சசம்ஸ்காரம் செய்துக் கொள்ள வேண்டும்

2. ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பெருமாள் பக்தர்களுக்கு அமுது படைக்க வேண்டும், ஓராண்டு கால அளவிற்கு.

அவர்கள் பாதம் கழுவிய நீரால் நம் தலை கழுவ வேண்டும்.

இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார்.




 அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்...


1 .பஞ்சசம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,


 பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார்.

இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.

குறையொன்றும் வைக்கா குறையற்றவர்... எம்பெருமான் திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்....

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நீலர்தான்.




2.இரண்டாவது கடனை நிறைவேற்றும் போது, அவரிடம் இருந்த செல்வம் குறைந்ததால், அவரால் கப்பம் செலுத்த இயலவில்லை.


கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான்.

 ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர்.

எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான்.

 ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.

ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது.

 அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார்.

 மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார்.

பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள்.

தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார்.





 மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது.

அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார்.

இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார்.

இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார்.




ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார்.

ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார்.

ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை.

 ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன்.

எவ்வளவு முயன்றும் அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சரியென்று, அவர்கள் அந்த மெட்டியை விட்டு விட்டு, மற்ற உடைமைகள் அனைத்தையும் மூட்டையில் கட்டித் தூக்க முயன்றனர்.

ஆனால், அந்த முயற்சியும் வீணாய் போனது... எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை.

  உடனே கோபம் கொண்ட பரகாலன், 'ஏய்! நீ ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான், என்னால் கழற்றவும் இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை. என்ன மாயம் செய்தாய், என்ன மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று ஆத்திரத்துடன் கல்யாண மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார்.




உடனே, மாதவனின், மந்தகாசம் சிந்தும் முகத்தில் தவழ்ந்த மந்திர புன்னகையுடன்,

 நம் கலியா! என்னும் பெயரிட்டு, 'நம்கலியா, வா, என் அருகில் வா, உனக்கு நான் அந்த மந்திரத்தை சொல்கிறேன்,'

என்று அருகில் அழைத்து,

 நம் கலியனின் காதிலே,

தீயவற்றிற்கு எட்டாத,

தின்னத் தின்னத் தெவிட்டாத தேனினும் இனியதாய,

நூற்றெட்டு திருத்தலத்தின் தலைவனின்,

பாவங்களனைத்தையும் வெட்டுபவனின் பெயர் கொண்ட

அந்த எட்டெழுத்து மந்திரத்தை நம்கலியனின் காதிலே பக்குவமாய்

"ஓம் நமோ நாராயணா" என்று ஓத

நம் கலியனின் கர்மங்கள் அனைத்தும் கழிந்தன.

எம்பெருமான், பெரிய பிராட்டியுடன் கருட வாகனத்தில் இருந்து அவருக்கு அருள் பாலித்துவிட்டு மறைந்தார்.


அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது.

இறைவன் மீதான அன்பும், பக்தியும் மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது.

ஆழ்வாரின் மீதான ஆண்டவனின் அருள்,

ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே கண்ணீராய்,

திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.

அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது அருள்கடலிலே ஆழ்ந்து,

ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம் கொண்டார்.






நாற்கவி:

1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது

2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது

3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது

4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது

இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.







(948 )

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து*

கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.




(2032)

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!




(2052)

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,

பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்

பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.




(956)

குலந்தரும் செல்வம் தந்திடும்

   அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்

   அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும்

   பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

   நாராயணா என்னும் நாமம்!






         ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!



அன்புடன்,

அனுபிரேம்

7 comments:

  1. தரிசித்தேன் நன்று நன்றி.

    ReplyDelete
  2. இன்றைய நாளின் சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு. படங்களும் அழகு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி

    ReplyDelete
  4. திருமங்கை ஆழ்வார் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  5. ஓம் நமோ நாராயணாய நம!!
    திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!//

    சிறப்பான பதிவு.
    படங்கள், பாடல்கள் , விரிவான பதிவு அருமை அனு.

    ReplyDelete
  6. தெளிவான பதிவு அனு

    ReplyDelete