23 December 2024

பாசுரம் 8 - கீழ்வானம் வெள்ளென்று

  திருப்பாவை 8




கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு

      மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு

      மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

  ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art


பொருள் :

பொழுது விடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல். கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார்.

நோன்பிற்காக நீராடக் கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு. குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், "ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டிய திருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே" என்று சுவாமி இறங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா. 


விளக்கம் 

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்பட, கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாக இருப்பாளை, கோதுகலமுடை பாவாய் என்ற ஒருத்தியை உணர்த்தும் கீழ் வானம் வெள் என்று என்ற பாசுரம். கீழ்வானம் வெள்ளென்று என்றும் எருமை சிறுவீடு மேய்வான் என்ற அடையாளங்களை சொல்கிறது. 

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதை காட்டிலும், அத்தலத்தை நோக்கிச் செல்லுகைதானே, அர்ச்சிராதி கதி போல், போக ரூபமாக இருக்கும் என்பதை இந்த பாடல் கூறுகிறது. ஸர்வசேஷியான எம்பெருமான், சேஷபூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமை உடையனாய் இருந்து, அவன் அப்படி செய்யாது இருந்தால், நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கும் இடத்திற்கு சென்று சேவித்தால், அவன் நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே; அன்ன நடை அணங்குகளை கஷ்டப் படுத்தினோமே என்று நம் மீது இரக்கம் கொண்டு, நம் காரியத்தைச் செய்து முடிப்பான். எல்லாருமாகத் திரண்டு, எழுந்து வாருங்கள் என்று அழைக்கின்றனர். கிருஷ்ண திரு நாமங்களை வாயாரப்  பாடியதே ஒரு பலன் என்றும், பறை கொண்டு என்பதை, நாட்டிற்கு பறை கொண்டு என்றும், தங்களுக்கு கைங்கரியம் கொண்டும் என்பதை மற்றொரு பலன் என்றும் சொல்கிறது. நம்மாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.










காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் 






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

No comments:

Post a Comment