இன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சித்திரம் .... கார்த்திகையில் ரோஹிணி ...
திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!
திருப்பாணாழ்வார்-
பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
நட்சத்திரம் : கார்த்திகை ரோகிணி
கிழமை : புதன்
எழுதிய நூல் : அமலனாதிபிரான்
பாடிய பாடல் : 10
சிறப்பு : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்.
எம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார். பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார்.
பிறப்பால் பாணராக இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன்!*
தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் தன்னுடைய கால் ஷேத்ரமண்ணில் படக்கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார்!
ஒருநாள், அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை.
கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு, குருதி வருகிறது. உடன் உணர்வும் வந்து பதறிய பாணர் அங்கிருந்து அகன்றார்!
நீரை முகந்து கொண்டு சந்நிதிக்கு திரும்பிய லோகசாரங்கர், அரங்கனின் நெற்றியில் செந்நீர் பெருகி வருவதைக் கண்டு மனம் பதைத்தார், ஏதும் செய்யவியலாமல் விதிர் விதிர்த்தார்.
*"பல காலமாக நம்மைப் பாடி வருகிற பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ?" என்ற பெருமான்,
"எம் அன்பனை, இழிகுலத்தோன் என எண்ணாது உம் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க"* என்றான்!
மனம் வருந்திய லோகசாரங்கர் அரங்கனின் ஆக்ஞையை நிறைவேற்றி, காவிரிக் கரையிலிருந்து சன்னதி அடைந்த பாணன், *வையமளந்தாணை கண்ணாரப் பருகி அவன் திருமுடி முதல் திருவடி வரை ஒவ்வொரு அவயங்களாக கண்டு, குளிர்ந்து, மனமுருகிப் பாடிய பத்து பாசுரங்களே "அமலனாதிபிரான்" என்ற பிரபந்தம்!*
ஒவ்வோர் அவயமாக கண்டு பாடியபோது பரவஸித்து மகிழ்ந்த அரங்கன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டு திடுக்கிட்டான்!
"நான் பிறவியெடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை" என்று தீர்மானமாக சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான்!
*இதற்காகவா லோகசாரங்கரை சுமந்து வரச்சொன்னோம்?
*இனி எனக்கு கண்களே தேவையில்லை என்று சொன்னவனை அந்தகனாய் வெளியே அனுப்பவா? அது எனக்குத் தகுமா?
*பக்கத்தில் இருந்து பாணருக்காய் பரிந்துரைத்த பிராட்டிக்கு என்ன பதில் சொல்வது?
*என்று யோசித்த அரங்கன், அவனை தன்னருகே அழைத்து "திருப்பாணாழ்வாராக்கி" கொண்டார்!!*
அமலனாதிபிரான்
அரங்கனின் அழகில் ஈடுபடுதல்
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள் மதில் அரங்கத்து அம்மான்
திருக் கமலபாதம் வந்து என்கண்ணின் உள்ளன ஒக்கின்றதே. (2) 1
927
உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டம் உற *
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் *
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான் *
அரைச் சிவந்த ஆடையின்மேல், சென்றது ஆம் என சிந்தனையே. 2
928
மந்தி பாய் வட வேங்கட மா மலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் *
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் *
உந்திமேல் அது அன்றோ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) 3
929
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி * ஓர் வெங்கணை உய்த்தவன் ஒதவண்ணன் *
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்து அம்மான் * திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. 4
930
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து * என்னைத் தன்
வாரம் ஆக்கிவைத்தான், வைத்தது அன்றி என்னுள் புகுந்தான் *
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான்
திரு ஆரமார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே. 5
931
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் *
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை *
முற்றும் உண்டகண்டம், கண்டீர்! அடியேனை உய்யக் கொண்டதே. 6
932
கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் * நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார் *
அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார் *
செய்ய வாய் ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே! 7
933
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் *
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி * நீண்ட அப்பெரிய
ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே! 8
934
ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் *
ஞாலம்ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் *
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் *
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே! (2) 9
935
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் * என் உள்ளம் கவர்ந்தானை *
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் *மற்று ஒன்றினைக் காணாவே. (2) 10
936
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை
10.
கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மினின்று காசினியீர்
வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதர்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.
திருப்பாணாழ்வார் 2023
திருப்பாணாழ்வார்
ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம்🌻🌻🌻
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திருபாணாத்தாழ்வர் ரங்கன் மேல் கொண்டிருந்த தூய அன்பும சிலிர்க்க வைக்கிறது. இறைவனே அவருக்காக வருந்தி அவரை ஆழ்வாராக்கி தன்னுடன் இணைத்துக் கொள்ள அவர் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரின் கதையை விவரித்தமைக்கு மிக்க நன்றி. அவரின் பாசுரங்கள் அனைத்தும் அருமை. ரங்கனை பணிந்து வேண்டிக் கொண்டேன். எல்லோரும் நலமுடன் வாழ அவனருள் கிடைக்க வேண்டும்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
தங்கள் மகன் படிக்கும் கல்வியை பற்றி அறிந்து கொண்டேன். அவர் நன்றாக படித்து சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா
Delete