30 November 2020

திருப்பாணாழ்வார் ..

 இன்று திருப்பாணாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  .....

கார்த்திகையில் ரோஹிணி..











திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!


உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே

உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே

வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே

மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே

அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே

அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே

செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!


பிறந்த இடம்    : உறையூர் (திருச்சி)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை  மாதம்.

நட்சத்திரம்     : கார்த்திகை ரோகிணி

கிழமை            : புதன்

எழுதிய நூல்  : அமலனாதிபிரான்

பாடிய பாடல் : 10

சிறப்பு                : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்







எம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார்.  பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார். தாழ்ந்த குலமாகிய பாணர் குலத்தில் பிறந்ததால் பூலோகவைகுண்டமாம் திருவரங்கத்தைத் தம் கால்களாலும் தீண்டக் கூடாதென்று காவிரியின் தென்கரையிலிருந்தபடி யாழ்மீட்டிப் பெரிய பெருமாள் அரங்கநாதனைத் துதித்து வந்தார்.

தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை,

பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து),பவளவாய், கமலக்கண்கள், திருமேனி

 உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் ரசித்து  பாடி , பரவசமடைந்து, அமலனாதிபிரானை இயற்றினார் .....





அமலனாதிபிரான்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னையாட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன்நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான் * திருக்
கமலபாதம்வந்து என்கண்ணினுள்ளனவொக்கின்றதே. (2)

1 927


உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்துஅண்டமுற *
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை *
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான் * அரைச்
சிவந்தஆடையின்மேல் சென்றதாம்எனசிந்தனையே.

2 928



மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே. (2)

3 929


சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து
உதிரவோட்டி * ஓர்வெங்கணையுய்த்தவன் ஒதவண்ணன் *
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் * திருவயிற்று
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுஉலாகின்றதே.

4 930



பாரமாய பழவினைபற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றிஎன்னுள் புகுந்தான் *
கோரமாதவம்செய்தனன்கொல்அறியேன் அரங்கத்தம்மான் * திரு
வாரமார்பதன்றோ அடியேனைஆட்கொண்டதே.

5     931





துண்டவெண்பிறையான் துயர்தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயஅப்பன் *
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலம்எழுமால்வரை * முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனைஉய்யக்கொண்டதே.

6 932


கையினார் சுரிசங்கனலாழியர் * நீள்வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடிஎம்
ஐயனார் * அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார் *
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.

7 933


பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட * அமரர்க்கு
அரியஆதிப்பிரான் அரங்கத்தமலன்முகத்து *
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி * நீண்டஅப்
பெரியவாயகண்கள் என்னைப்பேதைமைசெய்தனவே.

8 934


ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய் *
ஞாலமேழும்உண்டான் அரங்கத்தரவினணையான் *
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் *
நீலமேனி ஐயோ! நிறைகொண்டதுஎன்நெஞ்சினையே. (2)

9 935


கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ
யுண்டவாயன் * என்னுள்ளம்கவர்ந்தானை *
அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் *மற்றொன்றினைக் காணாவே. (2)

10   


    

முந்தைய பதிவுகள் ...









ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!



 அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. பதிவு எப்போதும்போல் அருமை.

    இப்போதான் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்துக்கு கோஷ்டி சேவித்தாகிறது.

    ReplyDelete