திருப்பாவை - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்:
பகவத் விஷயத்தில் எவற்றை செய்ய/பற்ற வேண்டும், எவற்றை விட வேண்டும் / செய்ய கூடாது என்பதை வையத்து வாழ்வீர்காள் என்ற இரண்டாவது பாட்டில் சொல்கிறார்.
மற்ற உலக விஷயங்களில் பற்ற வேண்டியவைகளும், விட வேண்டியவைகளும் அரிதாக இருக்கும், ஏனெனில் இது அவரவர் கர்மத்தை கொண்டு இருக்கும். இதே போல அவரவர் கருமத்தை பொருத்தே, மனமும் ஒரு சமயம் விடுவதை அடுத்த சமயம் பிடிக்கும் என்ற நிலையை எடுக்கும்.
இப்படி இல்லாமல் அல்பமாய் இருக்கிற விஷயங்களை விட்டு, சமஸ்த கல்யாண குணாத்மகனை பிடிப்பதால், இரண்டும் எளிது என்கிறார். சென்ற பாட்டில், ப்ராப்ய, ப்ராபக, அதிகாரி ஸ்வரூபங்களை சொன்ன ஆண்டாள், இங்கே அந்த அதிகாரிக்கான ஸ்வபாவங்களை இந்த பாடலில் சொல்கிறார். நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஈடுபட்ட ஆயர் மங்கைகள் தாங்கள் விட வேண்டியவைகளையும், பற்ற வேண்டியவைகளையும் சொல்கிறார்.
இந்த பாசுரத்தை ஆண்டாள் க்ஷீராப்தி/திருப்பாற்கடல் பெருமானை மனதில் கொண்டு பாடுகிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீரங்கம் |
No comments:
Post a Comment