26 December 2024

பாசுரம் 11 - கற்றுக் கறவை

 திருப்பாவை 11






 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

      செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்

குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!

      புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்

      முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ

      எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய்


 நன்றி: Upasana Govindarajan Art


பொருள்: குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல் இது.

கன்றுகளுடன் கூடியவை; இளமை மாறாமல் இருப்பவை; இப்படிப்பட்ட பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கறந்த கோபாலர்கள், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்வார்கள். அப்படிப்பட்ட கோபாலர்களின் குலத்தில் தோன்றிய பொற்கொடியைப் போன்றவளே!

காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வமும், உத்தமமான குணங்களும் வாய்க்கப்பெற்ற நீ, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா? எழுந்து வா. 


விளக்கம் 

இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.

ஆண்டாள் "பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி" என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.

அப்பெண்ணின் (ஆயர் குல) உறவினர், கர்ம யோகத்தை (எண்ணற்ற பசுக்களை பராமரிப்பது, பால் கறப்பது, பகைவர்களிடமிருந்து தம் மக்களை பாதுகாப்பது) சிரத்தையாக கடைபிடிப்பவர்கள். அதாவது, கடமையைச் செய்வது, இறை சேவைக்கு ஒப்பானது என்று கோதை நாச்சியார் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.

உனது உறவு முறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு வந்து எம்பெருமான் திருநாமங்களைப் பாடும் போது, நீ உடம்பிலும் அசைவின்றி, வாயிலும் அசைவின்றி, இப்படி கிடந்து உறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர். 

கண்ணன் கன்றுகளை அன்றிப் பசுக்களைப் பெரும்பான்மையாகக் காண மாட்டாதவன் ஆதலால், இவன் தனது கர ஸ்பர்சத்தினால் பசுக்களையும் கன்றாக்கி அருள்வான் என்கிறார்கள். 

கணங்கள் பல என்றதால் கறவைகள் தனித்தனியே எண்ண முடியாதவை மட்டும் இல்லாமல், அவற்றின் திரள்களும் எண்ண முடியாதது எம்பெருமானது மேன்மையைப் பொறுக்க முடியாதவர்கள், எம்பெருமான் அடியார்களுக்கு பகைவர்கள்.  திறலழிய என்று சொன்னது, ருத்ரன், பிரம்மன், இந்திரன், ஈஸ்வரன் போன்றவர்களை தமக்கு எதிரி என்று நினைத்து இருந்த, கம்சனின் மிடுக்கை அழித்த என்ற பொருளில் வருகிறது. இது பூதத்தாரை யுணர்த்தும் பாசுரம் என்பர்.

இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

No comments:

Post a Comment