20 December 2024

பாசுரம் 5

திருப்பாவை 5



 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.


நன்றி: Upasana Govindarajan Art


பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் துாய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த துாசு போல காணாமல் போய்விடும்.


விளக்கம்: 

‘நாராயணா’ என்று பரமபதம் முதல் பாட்டிலும், திரு அவதாரங்களுக்கு அர்த்தமான திருப்பாற்கடலில் கண்வளர்ந்து இருப்பது இரண்டாம் பாட்டிலும், இந்திரன் குறை தீர, ஸ்ரீ வாமனனாக திரு அவதாரம் செய்து, ஒரு நாடாக, யாரிடமும், எந்த வித்தியாசமும் பாராமல் திருவடிகளை கொண்டு தீண்டியது மூன்றாம் பாட்டிலும் சொல்லப் பட்டது.

 மாயனை என்ற பாட்டில் கிருஷ்ணனாய் திருஅவதாரம் செய்து, எளியவனாய், ஒரு அளவும் இல்லாமல், எல்லோருக்கும் கட்டவும், அடிக்கவும் இடம் கொடுத்து, ஒரு ஊருக்காக தன்னை முற்றுமாய் கொடுத்ததை சொல்கிறது. மன்னு வட மதுரை மைந்தனை என்று சொல்லியதால், அர்ச்சை சொல்லபட்டது.


திரிவிக்ரமனாக அவதரித்து எல்லோருடைய விரோதிகளையும் போக்கியதை நினைத்து, இதனை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தி, நமக்கு என்று கிடைத்த வாய்ப்பை கொண்டு பகவத் அனுபவத்தை செய்ய வேண்டும்.

 ஆகையால் மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனை துறைவனை, ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை, தாயை கூடல் விளக்கம் செய்த தாமோதரனை, செப்பு, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்கிறார்கள்.

ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ,  விபவ,  அந்தர்யாமி,  அர்ச்சை நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி உள்ளார். (“நாராயணனே நமக்கே பறை தருவான், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழிமுதல்வன், வடமதுரை மைந்தனை” ). அது மட்டும் இல்லாமல் அடுத்த பாடலான புல்லும் சிலம்பின என்ற பாட்டில், உள்ளத்து கொண்டு முனிவர்களும், யோகிகளும் என்று மீண்டும் அந்தரயாமியில் சொல்கிறார்.

இந்த பாசுரத்தை ஆண்டாள் மாயனை வடமதுரை மைந்தன் மதுரா கண்ணனை  மனதில் கொண்டு பாடுகிறாள். 





மதுரா ஸ்ரீ ஆண்டாள் 




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கோதை நாச்சியாரின் இன்றைய 5 ஆம் நாள் பாசுரமும், அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் படிப்பதற்கு அமுதமாக இருக்கின்றன. இன்றைய ஓவியமும், உங்கள் குரல் வழி பாசுரமும், பார்த்து, கேட்டு ரசித்தேன். மதுரா ஸ்ரீ கிருஷணரை தரிசித்து கொண்டேன். இறைவன் அனைவரையும் நலன்கள் பலவுடன் தந்து வாழ வைக்க வேண்டுமாய் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. நன்றி கமலா அக்கா ..

    மதுரா வேந்தன் அனைவருக்கும் எல்லா நலனையும் மகிழ்வையும் தர எனது பிரார்த்தனைகளும்

    ReplyDelete